அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தகவல்

அரியானா: அரியானா சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாக தெரிகிறது. அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதனால் அரசியல் களம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அரியானாவில் அடுத்த மாதம் 5ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மியுடன் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா என காங்கிரஸ் தலைவர்களிடம் ராகுல் காந்தி கருத்து கேட்டார். இதன்மூலம் ஆம் ஆத்மியுடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து பாஜவை எதிர்கொள்ள ராகுல் காந்தி தீவிரம் காட்டுவதாக தகவல் வெளியானது. இந்த கருத்தை ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி. சஞ்சங் சிங் வரவேற்றிருந்தார். அத்துடன் மற்றொரு மாநிலங்களவை எம்.பி. ராகவ் சந்திரா, காங்கிரஸ் மூத்த தலைவர் கே.சி.வேணுகோபாலுடன் 2 கட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

இந்த சந்திப்பு இன்னும் நீடிக்கலாம் என கூறப்படுகிறது. இந்த 2 கட்ட பேச்சுவார்த்தையின்போது, அரியானாவில் 10 மக்களவை தொகுதிகள் உள்ளன. ஒரு தொகுதிக்கு ஒரு சட்டமன்ற தொகுதி என்ற அடிப்படையில் 10 இடங்கள் எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என ஆம் ஆத்மி கட்சி சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதேவேளையில் 7 தொகுதிகள் மட்டுமே தரமுடியும் என காங்கிரஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பேச்சுவார்த்தை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே 90 இடங்களில் 66 இடங்களுக்கான வேட்பாளர்கள் பட்டியலுக்கு மத்திய தேர்தல் குழு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சி பொது செயலாளர் தீப் பபாரியா “இரு கட்சிகள் இடையிலான பேச்சுவார்த்தை தொடக்க நிலையில்தான் உள்ளது. இன்னும் ஏராளமான விஷயங்கள் குறித்து ஆராய வேண்டியுள்ளது. 90 இடங்களில் 49 இடங்கள் குறித்து 2 நாட்கள் ஆராயப்பட்டன.

மொத்தமாக 66 இடங்களுக்கு வேட்பாளர்கள் பெயர் இறுதி செய்யப்பட்டுள்ளது” என்றார். காங்கிரஸ் சார்பில் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத், வீரர் பஜ்ரங் புனியா ஆகியோர் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு, 5ம் தேதி (வியாழக்கிழமை) தெளிவு கிடைக்கும் என்றார். ஆம் ஆத்மியின் மாநிலங்களவை எம்.பி. சஞ்சய் சிங் கூறுகையில், ‘கூட்டணி தொடர்பாக, இடங்கள் தொடர்பாக என எந்தவொரு முடிவு என்றாலும், அதை அரவிந்த் கெஜ்ரிவால்தான் எடுப்பார்’ என்றார். காங்கிரஸ்- ஆம் ஆத்மி கூட்டணி அமைந்தால் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில் பாஜவுக்கு பெரும் சிக்கல் ஏற்படும் என்று தெரிகிறது.

Related posts

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு

கோவை அருகே பொதுமக்களை மிரட்டியது குட்டையில் சிக்கிய ராட்சத முதலை பவானிசாகர் அணையில் விடுவிப்பு

நெல்லை பூம்புகாரில் கொலு பொம்மை விற்பனை தொடங்கியது