மகிழ்ச்சி பொங்கல்

புத்தாண்டு உதயமான நாளில் பொங்கல் தொகுப்பில் தலா ஒரு கிலோ அரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவற்றை கொள்முதல் செய்து வழங்குவதற்கான அரசாணையை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. இதையடுத்து 2 கோடியே 19 லட்சத்து 57 ஆயிரத்து 402 அரிசி குடும்ப அட்டைதாரர்கள், முகாம் வாழ் இலங்கை தமிழர் குடும்பங்களுக்கு இவற்றை வழங்க ரூ.238 கோடியே 92 லட்சத்து 72 ஆயிரத்து 741 ஒதுக்கப்பட்டு நிர்வாக ஒப்புதலும் வழங்கப்பட்டது. இதில் கரும்பை பொறுத்தவரை எந்தவித இடைத்தரகர்களும் இல்லாமல் விவசாயிகளின் தோட்டத்திற்கே நேரடியாக சென்று கொள்முதல் செய்யப்படும் என்ற அறிவிப்பு வேளாண்குடி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதற்கிடையில் கடந்தாண்டைப் போலவே ரேஷன்கார்டு தாரர்களுக்கு ரூ.1000 பரிசுத்தொகை வழங்க வேண்டும் என்பது அரசின் பரிசீலனையில் இருந்தது. அதற்குள் வழக்கம் போல் இட்டுக்கதைகளை கட்டி மக்கள் மன்றத்தில் அரசியலாக்க முனைந்தனர் சிலர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், ‘‘தமிழர்களின் அடையாளமாக அனைத்து தரப்பு மக்களாலும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் பெருமைமிகு பண்டிகை பொங்கல் விழாவாகும். இந்த நன்னாள் அனைத்து தொழில்களுக்கும், ஏன்? மனித குலத்திற்கே அடித்தளமாய் விளங்கி உணவளித்து வரும் விவசாய பெருங்குடி மக்களுக்கு நன்றி செலுத்தும் ஒரு நாளாகவும் தமிழர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இத்தகையை பெருமை மிகு பொங்கல் விழாவை சிறப்பாக கொண்டாட ரேஷன் கடைகளில் ரூ.1000 பரிசுத்தொகையாக வழங்கப்படும். இந்த தொகையானது பொங்கல் பண்டிகைக்கு முன்பே ரேஷன் கடைகளில் ரொக்கமாக வழங்கப்படும்,’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பானது ஏழை, எளிய குடும்பங்களின் மனதில் பால் வார்த்துள்ளது. அதேநேரத்தில் அரசியல் ஆதாயம் தேடமுயன்றவர்களுக்கு சவுக்கடியாகவும் மாறியுள்ளது. நடப்பாண்டில் புத்தாண்டு, பொங்கல் கொண்டாட்டங்களுக்கு நாம் ஆயத்தமாகும் முன்னரே சென்னையை உலுக்கிய புயலின் கோரமும், இதற்கடுத்த ஓரிரு நாளில் தென்மாவட்டங்களில் பெய்த பெருமழையும் எத்தனை இடையூறுகளை ஏற்படுத்தியது என்பது நாம் அனைவரும் கண்கூடாக கண்ட ஒன்று. அப்போது முதல்வரின் சீரிய நடவடிக்கைகளால் மின்னல் வேகத்தில் சுழன்றது அரசு இயந்திரம்.

தமிழ் மக்களின் பாதிப்புக்கு உரிய நிவாரணத்தொகை ஒதுக்குமாறு ஒன்றிய அரசிடம் கோரிக்கை வைத்தார் நமது முதல்வர். ஆனால் உரிய இழப்பீட்டுத் தொகை தருவதற்கு பதிலாக ஏளனம் மிகுந்த பதில்களே அதிகளவில் உலா வந்தன. ஆனாலும் தமிழ்நிலத்தின் தலைநகரில் கடும் புயலால் பாதித்த மக்களுக்கும், பெரும் மழையால் பாதித்த தென்மாவட்ட மக்களுக்கும் ரூ.6 ஆயிரம் நிவாரணத்தொகையை வாரி வழங்கினார் முதல்வர். கவலை தோய்ந்த நேரத்தில் நீண்ட அரசின் கருணைகரங்கள், இப்போது மகிழ்ச்சி கொண்டாட்டத்திற்கும் கைகளில் ரூபாய் ஆயிரத்ைத வழங்கியுள்ளது. பெரும் நிதிச்சுமையிலும் மக்கள் மகிழ்வே பிரதானம் என்ற முதல்வரின் எண்ண ஓட்டத்திற்கு இது மேலும் ஒரு சான்றாக நிற்கிறது.

Related posts

டி20 உலக கோப்பை வென்று தாயகம் திரும்பிய இந்திய வீரர்களுக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு..!

எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்ஜாமின் மனு – இன்று உத்தரவு

பாஜக மூத்த தலைவர் அத்வானி மீண்டும் மருத்துவமனையில் அனுமதி