படிகளில் தொங்கியவாறு தினமும் பள்ளிக்கு செல்கின்றனர் மாணவர்களுக்கென்று அரசு தனி பஸ் இயக்குமா

*சரியான நேரத்தில் செல்ல முடியவில்லை

*தேர்வு வந்தால் ரொம்ப சிரமம் ஏற்படுகிறது

தஞ்சாவூர் : பஸ்களில் தொங்கிய படி தினமும் பள்ளிக்கு செல்கின்றனர். மாணவர்களுக்கென்று அரசு தனி பஸ் இயக்க வேண்டும் என்று பொதுமக்கள், பெற்றோர் மற்றும் மாணவ, மாணவிகள் எதிர்பார்க்கின்றனர்.தஞ்சாவூர் மாவட்டத்தில் அரசு, தனியார் பள்ளிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் உள்ளன. அதே போல் கல்லூரிகளும் ஏராளமாக உள்ளன. இதற்காக தஞ்சாவூர் மற்றும் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் தினமும் பல்வேறு வாகனங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு வந்து செல்கின்றனர். இதில் தனியார் பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்களுக்கு கல்வி நிலையங்கள் சார்பில் வாகனங்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதனால் அந்த பஸ் மற்றும் வேன்கள் மூலம் மாணவ-மாணவிகள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர்.

இதேபோல தஞ்சாவூரை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த 8ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் சிலர் அரசால் வழங்கப்பட்ட மற்றும் தங்கள் பெற்றோர் வாங்கி கொடுத்த சைக்கிள்கள் மூலம் பள்ளிக்கு சென்று வருகின்றனர். சிலர் தங்கள் குழந்தைகளை ஆட்டோக்களில் அனுப்பி வைக்கின்றனர். ஆனால் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் அதிக கட்டணம் கொடுத்து தனியார் வாகனத்தில் செல்ல முடிவதில்லை. மாறாக அவர்களுக்கு அரசால் கொடுக்கப்பட்ட பஸ் பாஸ் மூலம் அரசு டவுன் பஸ்களில் பள்ளிக்கு சென்று வருகின்றனர்.

ஆனால் மாணவர்களின் வசதிக்காக போதிய பஸ்கள் இயக்கப்படுவதில்லை. ஒரே நேரத்தில் அதிகளவில் மாணவர்கள் செல்லும் போது கூட்டம் அதிகளவில் காணப்படுகிறது. பஸ்களில் போதிய இடம் கிடைக்காததால் அவர்கள் ஆபத்தான முறையில் படியில் தொங்கியவாறு பயணம் செய்யும் நிகழ்வு தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் தஞ்சாவூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து மாரியம்மன் கோவில், பூண்டி, சாலியமங்கலம், அம்மாப்பேட்டை வரை செல்லும் டவுன் பஸ்சில் மாணவர்கள் பஸ்சின் முன்புறம் மற்றும் பின்புறம் படிக்கட்டில் தொங்கியவாறு சென்றனர்.

பஸ்சின் ஒரு பக்க வாசலில் ஒரே நேரத்தில் சுமார் 10 மாணவர்களுக்கு மேல் தொங்கியவாறு சென்றனர். இதனால் பஸ் பாரம் தாங்காமல் ஒரு பகுதியாக சாய்ந்த வண்ணம் சென்றது. வேகத்தடை வரும் இடங்களில் பஸ்சின் 2 படிகளும் வேகத்தடையில் உரசியவாறு சென்றது. மேலும் மாணவர்கள் தங்கள் செருப்பு தரையில் உரசியவாறு தொங்கி கொண்டு சென்றனர். பஸ் ஒரு பகுதியாக சாய்ந்தவாறு சென்றதால் சாலை வளைவுகளில் பஸ்சை டிரைவர் சிரமத்துடன் ஓட்டி சென்றார். இதனால் சாலையில் செல்லும் மற்ற வாகன ஓட்டிகள், பஸ்சில் தொங்கியவாறு செல்லும் மாணவர்களை திட்டியவாறு சென்றனர்.

இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், மாணவர்கள் பொதுமக்கள் ஒரே நேரத்தில் பஸ்சில் செல்லும் போது கூட்டம் அதிகமாக இருப்பதால் ஆபத்தான முறையில் படிகளில் தொங்கி கொண்டு பயணம் செய்கின்றனர். சில நேரங்களில் பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் பள்ளிக்கு செல்ல தாமதம் ஏற்பட்டால் சாலையில் செல்லும் மோட்டார் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் லிப்ட் கேட்டு செல்லும் நிலை ஏற்படுகிறது.

இதனால் மாணவர்கள் உரிய நேரத்தில் செல்ல முடிவதில்லை. குறிப்பாக தேர்வு நேரத்தில் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே காலை மாலை நேரங்களில் பஸ்களில் மாணவர்களின் ஆபத்தான பயணத்தை தவிர்க்க அரசு சார்பில் மாணவர்களுக்கு என்று கூடுதல் பஸ்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தினர்.

Related posts

பேருந்து டிக்கெட் விலையில் விமானத்தில் பயணிக்க அரிய வாய்ப்பு!!

சீதாராம் யெச்சூரி குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல்..!!

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழ்நாட்டில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்