ஹேண்ட்பேக் வாங்கும் முன்!

இன்றைய நவீன பெண்கள் பலரும் உடைகளுக்கு அடுத்தபடியாக விரும்புவது ஹேண்ட் பேக்குகள். இன்றைய அத்தியாவசிய பொருட்களின் தேவையில் ஒன்றாக கைப்பை வெளியே எடுத்து செல்வது என்பது பெண்களின் வழக்கமாகஆகி விட்டது. உங்களுக்கான சரியான ஹேண்ட் பேக்கை வாங்க கீழ்க்கண்ட விஷயங்களை நிச்சயமாக கவனத்தில் கொள்ள வேண்டும். அதன்படி சரியான கைப்பையை எப்படிப் பார்த்து வாங்கலாம் என்பதைப் பற்றி இங்கே பார்ப்போம்.

*அதிக பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டிய நிலை என்றால், பெரியகைப்பை தான் வேண்டும் என்று இல்லை, அதிக பொருட்களை வைக்கும் அளவிலான விசாலமான கைப்பையை வாங்கலாம்.
*பையின் எடை உங்கள் கைகள் மற்றும் தோள்களில் அழுத்தம் மற்றும் வலியை கொடுக்காத அளவில் இருக்க வேண்டும்.
*நீங்கள் கொடுக்கும் விலைக்கான தரத்துடன் ஹேண்ட்பேக் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.
*நீண்ட காலம் உழைக்கும் வகையிலான ஹேண்ட் பேக்குகள் சிறிது விலை கூடுதல் என்றாலும் தயங்காமல் வாங்கலாம்.
*மலிவாக இருக்கிறதே என வாங்கினால், சிறிது நாட்களிலேயே, கைப்பிடி இணைப்பு, தையல்கள் பிரிந்து உபயோகம் அற்றதாகி விடும். மேலும் பொது இடங்களில் சேதாரம் ஆகி நம்மை சங்கடமாக்கும்.
*ஹேண்ட்பேக்கின் கைப்பிடி உறுதியாக உள்ளதா என முதலில் கவனியுங்கள்.
*எந்த மெட்டீரியலில் ஹேண்ட்பேக் தேவை என்பதை தேர்ந்தெடுத்துக் கொள்ளவேண்டும், வேகன் லெதர் கைப் பைகளுக்கு தற்போது சந்தையில் அதிக டிமாண்ட் உள்ளது.
*வேகன் லெதர் பைகள் அசல் தோல் பைகளுடன் ஒப்பிடும்போது விலைகுறைவாகவும், நீடித்து உழைப்பதாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு.
*சில பிராண்டுகள் ஸ்டைலான, சுற்றுச்சூழலுக்கு ஏற்றதான சணல் பைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அவை வெப்பத்தையும் அதிகம் உள்ளிழுக்காது.
*ஹேண்ட்பேக் நிறங்கள் உங்கள் ஆளுமையை வரையறுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. உடைக்கு ஏற்றாற் போல் ஹேண்ட்பேக் எனில் உடையின் அதே சரியான நிறமாக வாங்காமல், கொஞ்சம் கலர் ஷேட்களில் வாங்கும் போது டிரெண்டியாக இருக்கும்.
*கறுப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை போன்ற நடுநிலை நிறங்கள், எந்த ஆடைகளுக்கும் பொருத்தமாக இருக்கும்.
* சிவப்பு, நீலம் போன்ற அடர் நிறங்களுடன், பல்வேறு வகையிலான லைட் நிறங்களும் வந்துவிட்டன. இவற்றை கறுப்பு, வெள்ளை, உடைகளுடன் பயன்படுத்தலாம்.
*காலணிகளுக்கு மேட்சிங்கான நிறங்கள், மெட்டீரியல்களிலும் கூட ஹேண்ட்பேக் தேர்வு செய்ய உடை என்ன நிறத்திலும் இருப்பினும் காலணி – ஹேண்ட்பேக் காம்போ சிறப்பான தோற்றம் கொடுக்கும்.
*விலையை கருத்தில்கொண்டு தேர்ந்தெடுப்பது முக்கியமான ஒன்று. நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு அதற்கு உள்ளதா என்பதை அறிந்துகொள்ளவும். தற்போதைய சந்தை விலையை ஆராய்ந்து முடிவெடுப்பதுநல்லது. மேலும் ஆன்லைனில் விலையைக்கூட ஆராய்ந்து பார்த்து ஹேண்ட்பேக் வாங்கலாம்.
*தோல் கைப்பையை வாங்கத் தொடங்குவதற்கு முன், உங்கள் தேவை எது என்பதைப் பற்றி சிந்தியுங்கள். வேலை, பயணம் அல்லது அன்றாட பயன்பாட்டிற்கு இது தேவையா? மடிக்கணினி அல்லது பிற சாதனங்களை எடுத்துச் செல்ல இது தேவையா? என சரிபார்க்கவும்.
*தோலின் தரத்தை சரிபார்க்கவும் உயர்தர தோல் நீண்ட காலம் நீடிக்கும் மற்றும் உடலுக்கும் அரிப்பு, அலர்ஜியை உண்டாக்காது.
*மென்மையான மற்றும் மிருதுவான, ஆனால் நீடித்த தோலைப் பாருங்கள். வேகன் தோல் கைப்பைகள் முழு தானிய தோலில் இருந்து தயாரிக்கப்படுகின்றன. சிலவகை பழங்கள், காய்கறிகளில் இருந்து கூட
தயாரிக்கப்படுகின்றன.
*தையல்கள் மற்றும் இணைப்புகளை சோதித்துப் பாருங்கள். உங்கள் தேவைகள் அனைத்தும் பூர்த்தி ஆகிறதா என்பதை கவனியுங்கள். அதில் சமரசம் செய்யவேண்டாம். வடிவம், அளவு, அழகு ஆகியவை கைப்பைக்கு அவசியம்.
*எங்கேயாவது நிகழ்ச்சிகள், விசேஷங்களில் யாராவது வைத்திருக்கும் ஹேண்ட்பேக் பிடித்திருந்தால் அதனை அவர்கள் அனுமதியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, புகைப்பட தேடல் வசதியுடன் ஆன்லைனில் வாங்கலாம்.
*விலை உயர்ந்த ஹேண்ட்பேக் எனில் தரம் மற்றும் உறுதிக்கு சான்றிதழ் வாரண்டி கியாரண்டி ஆகியவை தயாரிப்பு நிறுவனத்தால் வழங்கப்பட்டுள்ளதா என்பதை கவனத்தில் கொண்டு மறக்காமல் அதைக் கேட்டு வாங்குங்கள்.
*புதிய மாடல் அல்லது புதுமையான தயாரிப்பு கைப்பைகளை வாங்கவிரும்புபவர்கள் அதை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதை தெரிந்துகொள்வது அதைவிட முக்கியம். கைப்பைகளை முறையான கால இடைவெளியில் பராமரித்து வர வேண்டும்.
*அலுவலகம் செல்பவர்கள் லேப்டாப் பேக், லஞ்ச்பேக் என்று ஒன்றுக்கு மேற்பட்டபைகளை எடுத்து செல்லும் அவசியம் இல்லாமல் ஒரே பேக்கை பயன்படுத்தலாம்.
*சிலருக்கு நிறைய அறைகள் கொண்ட ஹேண்ட்பேக் பிடிக்கும். அதாவது சாவிக்குத் தனி அறை, மொபைல், மடிக்கணினி, வாட்டர் பாட்டில், லஞ்ச் பாக்ஸ் என அனைத்திற்கும் தனித் தனி அறைகள் எதிர்பார்ப்பார்கள். இவர்கள் நேரில் சென்று பார்த்து வாங்குவது நல்லது. ஆன்லைன் ஆர்டர்கள் பொதுவாகவே இவர்களுக்கு செட்டாவதில்லை.
*ஒன்றுக்கு மேற்பட்ட ஹேண்ட்பேக் பயன்படுத்துவோர் பயன்படுத்தாத மற்ற பைகளை நன்றாக கவர் அல்லது காகிதம் கொண்டு சுற்றி வைத்தால் கலர் மங்காது, மேலும் உராய்வு ஏற்பட்டு அதன் டிசைன்கள் சேதாரம் ஆகாமல் நீண்ட நாட்கள் உழைக்கும்.
*பூச்சிகளுக்கான மருந்துகளையும் ஹேண்ட்பேக் அறைகளில் பயன்படுத்துவது மிகவும் அவசியம்.
– தனுஜா ஜெயராமன்

Related posts

சென்னை துரைப்பாக்கத்தில் சூட்கேசில் இருந்து பெண்ணின் உடல் மீட்கப்பட்ட நிலையில் ஒருவர் கைது..!!

சிவகங்கையில் சாய்ந்த மின்கம்பத்தை சரிசெய்ய லஞ்சம்: ஊழியர் கைது

புவி வெப்பமயமாதலால் வெப்பநிலை 3 டிகிரி செல்ஷியஸ் உயரும் அபாயம் :உலக வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரிக்கை