சுத்தியலால் தலையில் அடித்து 76 வயது மனைவி கொலை: ராணுவத்தில் பணியாற்றிய 84 வயது கணவர் கைது

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை யை சேர்ந்தவர் சாம் அலெக்சாண்டர்(84). இவர் ராணுவத்தில் எலக்ட்ரிக்கல் பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ரோசிலின் புளோரா(76). தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களது மகன் பிராங்கிளின் டேனியல் அமெரிக்காவில் குடும்பத்துடன் வசிக்கிறார். மகள் ஷீபா கரோலின் அமெரிக்காவில் இருக்கிறார். அவரது கணவர் ரஞ்சித் பெங்களூருவில் ஆடிட்டராக உள்ளார்.

குமரி மாவட்டம் சீதப்பாலில் உள்ள ரஞ்சித் வீட்டில் சாம் அலெக்சாண்டர், தாய் ரோசிலின் புளோரோ ஆகியோர் கடந்த 6 மாதங்களாக வசித்துள்ளனர். சாம் அலெக்சாண்டர் உடல்நிலை சரியில்லாதவர். மது குடிக்கும் பழக்கமும் உள்ளது. அதை நிறுத்தும்படி ரோசிலின் புளோரா கண்டித்தும் கேட்பதில்லை. இதனால் கணவன், மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம். கணவர் மீதான கோபத்தில், ரோசிலின் புளோரா அவரை சரிவர கவனிக்கவில்லை.

இந்நிலையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் எழுந்த சாம் அலெக்சாண்டர் மற்றொரு படுக்கை அறையில் படுத்திருந்த மனைவி ரோசிலின் புளோராவை சரமாரியாக கத்தியால் குத்தினார். சுத்தியலாலும் தலையில் தாக்கினார். இதில் நெற்றி, கழுத்தில் பலத்த காயம் அடைந்த அவர் அங்கேயே துடிதுடித்து இறந்தார். பின்னர் சாம் அலெக்சாண்டர், உறவினர்களுக்கு போன் செய்து மனைவியை கொலை செய்ததை தெரிவித்துள்ளார். தகவலறிந்து ஆரல்வாய்மொழி போலீசார் சென்று சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிந்து சாம் அலெக்சாண்டரை கைது செய்தனர்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு