ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம், இணை நோய்கள் காரணமாக 1,300 பேர் உயிரிழப்பு : சவூதி அரேபிய அமைச்சர் ஃபஹத் அல் அதிகாரபூர்வ அறிவிப்பு!!

மெக்கா: ஹஜ் பயணத்தின் போது, கடும் வெப்பம் மற்றும் இணை நோய்கள் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,300ஐ தாண்டி இருப்பதாக சவூதி அரேபியா அரசு தெரிவித்துள்ளது. இஸ்லாமியர்கள் ஆண்டுதோறும் புனித ஹஜ் யாத்திரைக்காக சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா மற்றும் மதினா செல்வது வழக்கம். சவுதி அரேபியாவில் உள்ள மெக்காவில் கடந்த 14ம் தேதி புனித யாத்திரை தொடங்கியது. இதில், உலகம் முழுவதும் இருந்து 18 லட்சம் பேர் மெக்கா சென்றுள்ளனர். சவுதியில் கடந்த 16ம் தேதி பக்ரீத் கொண்டாடப்பட்டது. இதை தொடர்ந்து மேலும் சில நாட்கள் வரை ஹஜ் பயணிகள் மெக்காவில் தங்கியிருந்து தங்களது கடைமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.

இந்த ஆண்டு அதிக வெப்பம் நிலவுவதால் அங்கு சென்றுள்ள யாத்ரீகர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மெக்கா அருகில் உள்ள அல் ஹராம் பகுதியில் 51 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் ஹஜ் பயணிகள் பெரும் இன்னல்களை சந்தித்தனர். கடும் வெப்பம், கூட்ட நெரிசல், வயதான ஹஜ் பயணிகளுக்கு ஏற்படும் உடல்நலக்குறைபாடுகள் எதிரொலியாக ஏராளமான யாத்ரீகர்கள் சுருண்டு விழுந்து பலியாகினர்.

ஹஜ் யாத்திரையின் போது பல்வேறு காரணங்களால் 1,301 பேர் உயிரிழந்து இருப்பதாக சவூதி அரேபியாவின் சுகாதாரத்துறை அமைச்சர் பஹத் அல் ஜலால் ஜல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். எகிப்து, ஜோர்டான், இந்தோனேசியா, ஈரான், செனிகல், துனிசியா, மலேசியா உள்பட பல நாடுகளைச் சேர்ந்த ஹஜ் யாத்ரீகர்கள் உயிரிழந்துள்ளனர் என பாகிஸ்தான் பத்திரிகையான டான் தெரிவித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் இருந்து மெக்கா சென்ற 90 ஹஜ் பயணிகளும் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் 7 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர். நேரடி சூரியன் ஒளியின் கீழ், நீண்ட தூரம் ஓய்வின்றி நடந்ததால் இந்த முறை அதிகளவில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக சவூதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Related posts

குரூப் -1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியானது

விவசாயம், பொதுமக்களுக்கு பயன்படும் பால்குளம் ரூ.90 லட்சம் செலவில் சீரமைப்பு

ஆடி மாதத்தில் புகழ்பெற்ற அம்மன் கோயில்களுக்கு மூத்த குடிமக்களுக்கான கட்டணமில்லா ஆன்மிகப் பயணம்: ஜூலை 17ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் அமைச்சர் சேகர்பாபு தகவல்