குட்கா கடத்திய வாலிபர் கைது: 3.250 கிலோ பறிமுதல்

காரமடை:காரமடை அருகே 3.250 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்தனர். காரமடை – மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள அரசு மேல்நிலை பள்ளி அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக காரமடை இன்ஸ்பெக்டர் ராஜசேகரனுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர். அப்போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்ததால், அந்த நபரை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரணை மேற்கொண்டனர்.

இதில், அவர் மேட்டுப்பாளையம் எஸ்.எம்.நகர் பகுதியைச் சேர்ந்த யாசின் (38) என்பதும், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு புகையிலை பொருட்களை விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் யாசின் மீது வழக்குப்பதிந்து, அவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 3.250 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்து, அவரை மேட்டுப்பாளையம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related posts

வன்னியர் இடஒதுக்கீடு போராட்டத்தில் பலியான மணியின் பெயரை யாதவர் சமுதாயமென பதியவேண்டும்: முதல்வருக்கு, தமிழ்நாடு யாதவ மகாசபை கோரிக்கை

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்