குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் ஆஜராக ஆணை!!

சென்னை : குட்கா முறைகேடு தொடர்பான வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், காவல்துறை முன்னாள் ஆணையர் ஜார்ஜ், அரசு அதிகாரிகள் உள்ளிட்ட 27 பேர் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராக சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழகத்தில் தடையை மீறி அதிகாரிகளுக்கு லஞ்சம் அளித்து குட்கா பொருள்கள் விற்கப்பட்டதான புகாரில் டெல்லி சிபிஐ காவல்துறை 2017ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்து, வழக்கை விசாரித்து வருகிறது. இதில் மாதவராவ், சீனிவாசராவ், உமாசங்கர் குப்தா, உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி செந்தில்முருகன், மத்திய கலால்துறை அதிகாரி நவநீத கிருஷ்ண பாண்டியன், சுகாதாரத்துறை அதிகாரி சிவக்குமார் ஆகிய 6 பேர் மீது வழக்கு பதிவு செய்த சிபிஐ, இவர்களுக்கு எதிராக சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தது.

இந்நிலையில், முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, சென்னை முன்னாள் போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட 21 மத்திய, மாநில அரசு உயர் அதிகாரிகளுக்கு எதிராக கூடுதல் குற்றப்பத்திரிகையை சிபிஐ கடந்த மே மாதம் தாக்கல் செய்தது. இந்த வழக்கு சிபிஐ நீதிமன்றத்தில் இருந்து சென்னையில் உள்ள நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றம் அண்மையில் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சி.சஞ்சய் பாபா அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு இருந்த குடோன் உரிமையாளர்கள் மற்றும் மத்திய உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் உட்பட 5 பேர் ஆஜராகி இருந்தார்கள். இதையடுத்து வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், பி.வி.ரமணா, முன்னாள் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ், ஒன்றிய, மாநில அதிகாரிகள் என 27 பேரும் செப்டம்பர் 9ம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்பி நீதிபதி உத்தரவிட்டுள்ளார். அன்றைய தினம் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் ஆஜராகும் பட்சத்தில் அவர்களுக்கு குற்றப் பத்திரிகையின் நகல்கள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

ஆந்திராவில் இருந்து ரயிலில் 6 கிலோ கஞ்சா கடத்திய தனியார் பள்ளி ஆசிரியர் கைது

அமெரிக்க நாட்டிலுள்ள பல்வேறு தமிழ்ச் சங்கங்களின் நிர்வாகிகள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்கக் கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சருக்கு கடிதம்..!!