துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டவர் தனியார் மருத்துவமனையில் ரவுடி சத்யாவுக்கு சிகிச்சை: உயர் நீதிமன்றம் அனுமதி

சென்னை: துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்ட பிரபல ரவுடி சீர்காழி சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி அளித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு அருகே, பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சீர்காழி சத்யாவை, கடந்த 28ம் தேதி போலீசார் துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். அப்போது அவரிடம் இருந்து ஒரு கை துப்பாக்கி மற்றும் ஆயுதங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். துப்பாக்கியால் சுடப்பட்டதில் காயமடைந்த சத்யா, ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில், ரத்த ஓட்ட பாதிப்பு உள்ளிட்டவையால் சீர்காழி சத்யாவின் உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதி கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவரது தாய் தமிழரசி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புழல் சிறை நிர்வாகம் சார்பில், சத்யாவின் உடல் நிலை குறித்து அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க அனுமதிக்கக்கூடாது என்றும் கூறப்பட்டிருந்தது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், சத்யாவுக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கலாம். மருத்துவர்களின் அனுமதியோடு சத்யாவின் தாய் மட்டுமே அவரை சந்திக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்து உத்தரவிட்டனர்.

Related posts

தங்கம் சவரனுக்கு ₹520 உயர்வு: மீண்டும் ரூ.54 ஆயிரத்தை தாண்டியது

இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.10 கோடி கஞ்சா பறிமுதல்: 4 பேர் கைது

ரூ.100 கோடி நிலம் அபகரிப்பு வழக்கு; அதிமுக மாஜி அமைச்சருக்கு இடைக்கால ஜாமீன் இல்லை: முன்ஜாமீன் மனு குறித்து இன்று பரிசீலனை