அயனாவரம் பகுதியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட துப்பாக்கி, தோட்டா பறிமுதல்: வீட்டை காலி செய்த மருத்துவரின் மகள் பழைய பொருள் என வீசியது அம்பலம்

பெரம்பூர்: அயனாவரம் பகுதியில் குப்பை தொட்டியில் வீசப்பட்ட துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை போலீசார் பறிமுதல் செய்து, இதுதொடர்பாக மருத்துவரின் மகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அயனாவரம் – குன்னூர் நெடுஞ்சாலையில் நேற்று முன்தினம் காலை தூய்மை பணியாளர் சாமிக்கண்ணு என்பவர் வழக்கம்போல் பணியில் ஈடுபட்டார். அப்போது ஒரு குப்பை தொட்டியில் பழைய பொருட்கள் கொண்ட பை இருந்தது. அதனை கீழே கொட்டி பார்த்தபோது, அதில் ஒரு கைத்துப்பாக்கியும், அதில் பயன்படுத்தப்படும் 15 குண்டுகளும் இருந்தன. இதானல், பதற்றமடைந்த சாமிக்கண்ணு காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அயனாவரம் போலீசார், துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை பறிமுதல் செய்து அயனாவரம் காவல் நிலையம் எடுத்து வந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்தில் இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், மீன்பாடி வண்டி ஓட்டுநர் ஒருவர் 4 மூட்டைகளில் குப்பையை எடுத்து வந்து போடுவது பதிவாகியிருந்தது. இதனையடுத்து குறிப்பிட்ட அந்த மீன்பாடி வண்டி ஓட்டுனரை அழைத்து விசாரணை செய்தனர். மேலும் குப்பையில் போடப்பட்ட துப்பாக்கியுடன் பழைய பாஸ்போர்ட் மற்றும் பல்வேறு ஆவணங்கள் இருந்தன. அதில் எழும்பூர் பகுதியில் உள்ள ஒரு முகவரி இருந்தது. போலீசார் அந்த முகவரிக்கு சென்று விசாரணை செய்தனர்.

அப்போது, அங்கு தங்கியிருந்த நபர்கள் வீட்டை விற்றுவிட்டுச் சென்றது தெரிய வந்தது. மீன்பாடி வண்டி ஓட்டுநரிடம் கேட்டபோது, குறிப்பிட்ட அந்த வீட்டை காலி செய்தபோது, அங்கிருந்த பொருட்களை வீட்டிற்கு வெளியில் வைத்திருந்தனர். அதனை நான் கொண்டு வந்து குப்பை தொட்டியில் போட்டேன் எனக் கூறியுள்ளார். இதனையடுத்து குறிப்பிட்ட அந்த வீட்டிலிருந்த ஒரு பெண்ணை போலீசார் விசாரணை செய்தனர்.

அதில், அந்த பெண்ணின் பெயர் ஜெனிஷா (45) என்பதும், அவரது தந்தை மோசஸ் ஜான்சன், தாய் மல்லிகா என்பதும் தெரிய வந்தது. ஜான்சன் மற்றும் மல்லிகா ஆகிய இருவரும் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவராக பணிபுரிந்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வயது மூப்பு காரணமாக இறந்து விட்டனர். இவர்களது சொந்த வீடு எழும்பூர் பகுதியில் இருந்துள்ளது. அதனை 2016ம் ஆண்டு விற்று விட்டு ஜெனிஷா அயனாவரம் பகுதியில் உள்ள பாலைக்கார தெரு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் இருந்து வந்துள்ளார். ஜெனிஷாவுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. இவருக்கு நரம்பு தளர்ச்சி சம்மந்தமான பிரச்னை உள்ளதால் திருமணம் செய்து கொள்ளாமல் தனிமையில் இருந்து வந்துள்ளார். குறிப்பிட்ட அயனாவரம் பகுதியில் உள்ள வீட்டை காலி செய்துவிட்டு, முகப்பேர் பகுதியில் உள்ள தனது நண்பர் வீட்டிற்கு செல்வதற்காக நேற்று முன்தினம் ஜெனிஷா தயாராகியுள்ளார். அப்போது வீட்டில் நிறைய பழைய பொருட்கள் இருந்துள்ளன. அதனை அப்படியே நண்பர் வீட்டுக்கு கொண்டு செல்ல முடியாது என்பதால், தேவையில்லாத பொருட்களை குப்பையில் போட்டுள்ளார்.

அதன்படி 4 மூட்டைகளில் பழைய பொருட்களை மீன்பாடிவண்டி ஓட்டும் நபரிடம் கொடுத்து அதனை குப்பையில் போடச் சொன்னது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஜெனிஷாவின் தந்தை மருத்துவர் என்பதால் உரிமம் வாங்கி துப்பாக்கியை பயன்படுத்தி வந்திருக்கலாம். அவர் இறந்ததற்குப் பின்பு ஜெனிஷா 4 வீடுகள் மாறிவிட்டார். எப்போதுமே ஜெனிஷா வீடு மாறும்போது பழைய பொருட்களை தூக்கி எறிவது வழக்கம். தற்போது தேவையில்லாத பொருட்களை தூக்கி எறிந்தபோது அதில் துப்பாக்கி இருந்துள்ளது. எனவே அவரிடம் துப்பாக்கி இருந்ததற்கான லைசன்ஸ் உள்ளதா என போலீசார் விசாரித்து வருவதாகவும், ஜெனிஷாவின் உடல்நிலை கருதி அவரை தொந்தரவு செய்யவில்லை எனவும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குப்பைத் தொட்டியில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்கள் இருந்த சம்பவம் அயனாவரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related posts

செங்கல்பட்டு மாவட்ட அளவிலான செயல் குழு, முதியோர் நல குழு உறுப்பினர்கள் ஆய்வு கூட்டம்

கூடுவாஞ்சேரி அருகே பரபரப்பு குப்பையில் கேட்பாரற்று கிடந்த துப்பாக்கி: போலீசார் தீவிர விசாரணை

காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட அலுவலர்களுக்கு பயிற்சி