ஏடன் வளைகுடாவில் சரக்கு கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

துபாய்: ஏடன் வளைகுடாவில் சென்ற சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால் இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் 7ம் தேதி தொடங்கிய போர் 8 மாதங்களை கடந்தும் நீடித்து வருகிறது. இந்த போரில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து ஆதரவுக்கரம் நீட்டி உள்ளன. அதேசமயம் ஹமாஸ் படையினருக்கு ஏமனில் உள்ள ஹவுதி அமைப்பும், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பும் ஆதரவு அளித்து வருகின்றன. இந்த ஆதரவை உறுதிப்படுத்தும் விதமாக செங்கடலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக பயணிக்கும் வணிக கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தொடர் தாக்குதல் நடத்தி வருவதால் சர்வதேச கப்பல் வணிகம் பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஏடன் வளைகுடா பகுதியில் ஆன்டிகுவா மற்றும் பார்படா நாட்டு கொடியுடன் நேற்று சரக்கு கப்பல் ஒன்று சென்று கொண்டிருந்தது. இதன் மீது அடுத்தடுத்து 2 ஏவுகணைகள் வீசி நடத்தப்பட்ட தாக்குதலில் கப்பலின் முன்பகுதியில் தீப்பற்றியது. கப்பலில் இருந்தவர்கள் அந்த தீயை விரைந்து அணைத்தனர். ஆனால் இந்த ஏவுகணை தாக்குதல்களில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. ஹமாசுக்கு ஆதரவு தெரிவித்து வரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த தாக்குதலை நடத்தி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. ஆனால் இந்த தாக்குதல் குறித்து கிளர்ச்சியாளர்கள் எந்த தகவலும் வௌியிடவில்லை.

Related posts

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் 11 பேருக்கு 3 நாள் சிபிசிஐடி காவல்: நீதிமன்றம் அனுமதி

குமரியில் நீர்நிலை கரையோரம் கொட்டப்படும் குப்பைகள்; சுகாதார சீர்கேட்டால் மக்கள் பாதிப்பு

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி