கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை நிராகரித்தது சென்னை உயர்நீதிமன்றம்: சட்டப்படி வழக்கு தொடர்ந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் என திட்டவட்டம்

சென்னை: கிண்டி ரேஸ் கிளப் கோரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. ரேஸ் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீல்களை அகற்றவில்லை என்று கிளப் நிர்வாகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்ட நிலையில், கிண்டி ரேஸ் கிளப் விவகாரத்தில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது என ஐகோர்ட் தெரிவித்துள்ளது. சட்டப்படி வழக்கு தொடர்ந்தால் மட்டுமே விசாரிக்கப்படும் என உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. ரேஸ் கிளப்பின் 3 வாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டுவிட்டதாக தமிழ்நாடு அரசு தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. வாடகை பாக்கி 730 கோடி ரூபாயை செலுத்தவில்லை என்பதால், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், சென்னை ரேஸ் கிளப்-புக்கு சீல் வைக்கப்பட்டது. தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிராக ரேஸ் கிளப் நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகியது.

குத்தகை ரத்து செய்ததும், காலி செய்ய அவகாசம் வழங்காமல் சீல் வைத்ததற்கு சென்னை உயர் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. இதையடுத்து, குத்தகை ரத்து குறித்து கிளப் நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பி, பின் நிலத்தை சுவாதீனம் எடுப்பது குறித்த நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசுத் தரப்பில் உறுதி அளிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக, கிளப் நுழைவாயில் சீல் அகற்றப்படவில்லை என கிளப் நிர்வாகம் தரப்பில், நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர் தலைமையிலான அமர்வில் முறையிடப்பட்டது. அப்போது தமிழக அரசுத் தரப்பில் தலைமை வழக்கறிஞர், கிளப்புக்கு செல்லும் மூன்று நுழைவாயில்களுக்கு வைக்கப்பட்ட சீல் அகற்றப்பட்டு விட்டதாக விளக்கமளித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதிகள், உத்தரவாதத்தை மீறியிருந்தால் அதுசம்பந்தமாக தனியாக வழக்கு தாக்கல் செய்யலாம் எனவும், முறையீட்டின் அடிப்படையில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என மறுத்து விட்டனர்.

Related posts

பழனி பஞ்சாமிர்த டப்பாக்களில் காலாவதி தேதி 15 நாட்களில் இருந்து 30 நாட்களாக உயர்வு

கூல் லிப் பயன்பாடு: 3 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு

பழனி பஞ்சாமிர்தம் காலாவதி தேதி 30 நாட்களாக உயர்வு..!!