குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் இரவில் மதுபான கூடமாக மாறும் அரசுப்பள்ளி வளாகம்

*சுற்றுச்சுவர் கட்ட கோரிக்கை

கே.வி.குப்பம் : குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் இரவில் மதுபான கூடமாக அரசுப்பள்ளி வளாகம் மாறிவருவதால், சுற்றுச்சுவர் கட்ட ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் நெல்லூர்பேட்டையில் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.

இங்கு 6 முதல் பிளஸ் 2 வரை 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கவுண்டன்ய மகாநதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக அங்குள்ள வீடுகள், கட்டிடங்களை வெள்ளம் சூழ்ந்தது. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகள், கட்டிடங்கள் இடித்து அகற்றப்பட்டது. அப்போது இந்த பள்ளியின் சுற்றுச்சுவரும் இடிக்கப்பட்டது. ஆனால் 2 ஆண்டுகளாகியும் சுற்றுச்சுவர் கட்டவில்லை.

இதனால் இரவு நேரங்களில் குடிமகன்கள், பள்ளி வளாகத்திற்குள் நுழைந்து மைதானம், வகுப்பறை தாழ்வாரம் ஆகிய பகுதிகளில் அமர்ந்து மது குடிக்கின்றனர். பின்னர் வாட்டர் பாக்கெட், காலி மதுபாட்டில்களை அங்கேயே வீசிவிட்டு செல்கின்றனர். இவற்றை காலையில் பள்ளிக்கு வரும் மாணவர்கள் அகற்றும் நிலை உள்ளது. மேலும் இங்குள்ள விளையாட்டு மைதானத்தில் மாணவர்கள் விளையாடும்போது அங்கு போதை ஆசாமிகள் வீசிவிட்டு செல்லும் பாட்டில்களால் காயமடைகின்றனர்.

மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர், பள்ளி வளாகத்தில் துணி காய வைப்பது, மாடுகள் கட்டி வைப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் இதுபோன்ற அத்துமீறல்கள் நடக்கிறது. எனவே மாணவர்கள் நலன்கருதி பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டவும், கண்காணிப்பு கேமரா அமைக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பாரீஸில் நடைபெற்ற பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு

உலக சுகாதார அமைப்பின் கணக்கெடுப்பின்படி 44 கோடி பேருக்கு செவித்திறன் குறைபாடு

சுற்றுப்புறங்களை பசுமையாக மாற்றிட பொதுமக்கள் மரக்கன்றுகள் நட வேண்டும்