Thursday, September 19, 2024
Home » ஜிஎஸ்டி குளறுபடிகள் குறித்து சுட்டிக்காட்டிய ஓட்டல் அதிபருக்கு பாஜ மிரட்டல்? மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியீடு; ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்; மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை

ஜிஎஸ்டி குளறுபடிகள் குறித்து சுட்டிக்காட்டிய ஓட்டல் அதிபருக்கு பாஜ மிரட்டல்? மன்னிப்பு கேட்க வைத்து வீடியோ வெளியீடு; ராகுல் உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம்; மன்னிப்பு கேட்டார் அண்ணாமலை

by Karthik Yash

சென்னை: கோவையில் நடந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரபல அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், ஜிஎஸ்டி குறித்து ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேள்வி எழுப்பியது சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், ஓட்டல் உரிமையாளரை அழைத்து மன்னிப்பு கேட்க வைத்து, வீடியோ ெவளியிட்டதால் தமிழகம் முழுவதும் பாஜவுக்கு எதிராக மக்கள் கொந்தளித்து வருகின்றனர். தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். ஒன்றிய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன். இவர் அடிக்கடி பல்வேறு தொழிலதிபர்களுடன் ஆலோசனைகளையும், கலந்துரையாடல் நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். அப்போது, வரிவிதிப்பு பிரச்னைகள் குறித்து விவாதம் செய்யப்படும்.

அதில், தொழில் துறையினர் ஒன்றிய அரசின் வரி விதிப்பு உள்ளிட்ட விவகாரங்களால் தங்களுக்கு ஏற்படும் பிரச்னைகள் பற்றி எடுத்துரைப்பது வழக்கம். சில நேரங்களில் இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் தொழிலதிபர்கள் கூறும் கருத்து, அதற்கு நிர்மலா சீதாராமன் அளிக்கும் பதில் உள்ளிட்டவை விவாதத்தை கிளப்பும். அந்த வகையில், கோவை கொடிசியா அரங்கில் கடந்த 11ம் தேதி கோவை தெற்கு எம்எல்ஏவும், பாஜ மகளிர் அணி தேசிய தலைவருமான வானதி சீனிவாசன் ஏற்பாட்டில் கொங்கு மண்டல தொழில்துறையினருடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. அப்போது பல்வேறு தொழில் முதலீட்டாளர்கள் ஜி.எஸ்.டி தொடர்பாக புகார் தெரிவித்தனர். ஜிஎஸ்டியில் உள்ள குறைபாடுகள் மற்றும் சிக்கல்கள் தொடர்பாக தங்களது ஆதங்கத்தை தெரிவித்தனர். அப்போது, கோவையில் மிகவும் பிரபலமான ஸ்ரீ அன்னபூர்ணா உணவகத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் ஜி.எஸ்.டியில் ஏற்படும் பிரச்னைகளை ஒன்றிய அமைச்சரிடம் புலம்பினார். அவரது பேச்சு அதிக கவனம் பெற்றது.

அவர் பேசும் போது, ‘‘உங்க பக்கத்தில் உள்ள எம்எல்ஏ எங்களின் ரெகுலர் கஸ்டமர். எங்கள் ஜிஎஸ்டி பில்லை பார்த்து சண்டை போடுறாங்க. இந்த அம்மா வருவாங்க.. ஜிலேபி சாப்பிடுவாங்க. காரம் சாப்பிடுவாங்க.. அதன்பின் காபி சாப்பிடுவாங்க. எல்லாவற்றிற்கும் வேறு வேறு ஜிஎஸ்டி. ஸ்வீட்டிற்கு 5 சதவீத ஜிஎஸ்டி. காரத்திற்கு 12 சதவீத வரி என்றால் சண்டை போடுவாங்க. பன்னுக்கு ஒரு ஜிஎஸ்டி, உள்ளே இருக்கும் கிரீமிற்கு ஒரு ஜிஎஸ்டி என உள்ளது. இதனால் கஸ்டமர்கள். நீ பன்னு கொடு. நானே கிரீமை வைத்துக் கொள்கிறேன் என்கிறார்கள். குறைத்தால் எல்லாவற்றிற்கும் குறையுங்கள். தயவு செய்து ஆலோசனை செய்யுங்கள். ஒரே மாதிரி வரி போடுங்கள். பில் போடுவதற்கு கம்ப்யூட்டரே திணறுகிறது மேடம். ஜிஎஸ்டி அலுவலர்கள் குழம்புகிறார்கள். எல்லாவற்றிற்கும் ஒரே இன்புட் தான். ஒரே கிச்சன்தான். ஆனால் வேறு வேறு ஜிஎஸ்டியால் அதிகாரிகள் குழம்புகிறார்கள்’’ என கூறினார்.

அவரது இந்த பேச்சு தொலைக்காட்சி, சமூக வலைதளங்கள் என அனைத்திலும் செம வைரலானது. நிர்மலா சீதாராமனை கிண்டலடித்து பலர் கருத்துகளை பதிவிட்டனர். குறிப்பாக எதிர்கட்சியினர் அதிகமாக பகிர்ந்து நிர்மலா சீதாராமனை விமர்சனம் செய்தனர். மறைமுகமாக நோஸ்கட் செய்துவிட்டதாக அந்த வீடியோவை பிரபலப்படுத்தினர். இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதற்கு விளக்கம் அளித்த நிர்மலா சீதாராமன், “ஓட்டல் உரிமையாளர் தங்களின் பிரச்னையை ஜனரஞ்சகமாக பேசியிருந்தார். அதில் தவறில்லை, அவர் தன்னுடைய ஸ்டைலில் பேசியிருக்கிறார். ஒவ்வொரு உணவுக்கும், எவ்வளவு வரி நிர்ணயிக்க வேண்டும் என்பதற்கு ஜிஎஸ்டி கவுன்சில் விரிவாக ஆய்வு மேற்கொண்டுள்ளது. அவர்களின் பரிந்துரையை ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும். விமர்சனங்களைப் பற்றி எனக்கு கவலை இல்லை’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் அன்னபூர்ணா ஓட்டல் நிர்வாக இயக்குநர் சீனிவாசன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்தித்து மன்னிப்பு கோரியுள்ளதாக வீடியோ ஒன்று நேற்று காலையில் வேகமாக பரவியது. அதாவது அந்த வீடியோவில் நிர்மலா சீதாராமன் மற்றும் பாஜ எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆகியோருடன் அன்னபூர்ணா நிர்வாக இயக்குநர் சீனிவாசன் இருக்கிறார். அப்போது, அன்னபூர்ணா சீனிவாசன் அவர்களிடம் மன்னிப்பு கேட்டு பேசுகிறார். அவர்களிடம், ‘‘ஓட்டல் அசோசியேசன் சார்பில் என்னை பேச சொன்னார்கள், நான் மீட்டிங்கிற்கு கூட வரவில்லை என்றுதான் சொன்னேன். ஆனால் பேச வேண்டிய சூழ்நிலை ஆகிவிட்டது. நீங்க வயதில் பெரியவங்க, தயவு செய்து மன்னித்து விடுங்கள்’’என்று கூறுகிறார். மன்னித்து விடுங்கள் என்று சொல்லும் போது, இருக்கையிலிருந்து எழுந்து நின்று இரு கைகளையும் கூப்பி நிர்மலா சீதாராமனிடம் அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்கிறார். அப்போது, ‘‘நான் எந்த பார்ட்டியிலும் இல்லை. தயவு செய்து என்னை மன்னித்துக்கொள்ளுங்கள்’’ என்று கூறுகிறார்.

அதை தொடர்ந்து அவரிடம் பேசிய நிர்மலா சீதாராமன், ‘‘உள் நாட்டிலும் சரி, வெளிநாட்டிலும் சரி ஓட்டலில் சாப்பிட்டவர்கள் பற்றி, நல்லதோ கெட்டதோ வெளியில் பேசக்கூடாது” என மிரட்டும் தொனியில் கூறுகிறார். மேலும், ‘‘எடுத்த எடுப்பில் நீங்கள் உங்கள் எம்எல்ஏவை (வானதி சீனிவாசன்) பற்றி ஜிலேபி சாப்பிடுறாங்க, சண்டை போடுறாங்க, ரெகுலராக வருவாங்க என சொன்னவுடன் எனக்கு என்ன சொல்வது என தெரியவில்லை. நீங்கள் ஜிஎஸ்டி பற்றி என்ன கேட்டாலும் பதில் சொல்லி இருப்பேன்’’ என கூறுகிறார். ஆனாலும் இந்த வீடியோவில் ஆடியோ என்பது சரியாக கேட்கவில்லை. கோவையின் பிரபல தொழிலதிபரான அன்னபூர்ணா சீனிவாசன், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் மன்னிப்பு கேட்கும் வீடியோ காட்சிகளை பாஜவைச் சார்ந்த ஐடி விங் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது. இதுதொடர்பான காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஜிஸ்டி பற்றி கேள்வி கேட்ட ஒரு பிரபல தொழிலதிபரை நேரில் வரவழைத்து எழுந்து நின்று கை கூப்பி மன்னிப்பு கேட்க வைத்தது தமிழ்நாடு முழுவதும் தமிழ மக்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த செயல் ஆணவத்தின் உச்சத்தையே காட்டுகிறது என்று சமூக வலைதளங்களில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக தமிழக மக்கள் கண்டனங்களை குவித்து வருகின்றனர். அதே நேரத்தில், சீனிவாசன் மிரட்டப்பட்டு மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டிருக்கிறார் என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே, திமுக, அதிமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள், நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். இந்நிலையில் மன்னிப்பு கேட் கும் வீடியோ பாஜவினர் வெளியிட்டதற்கு அண்ணாமலை மன்னிப்பு கேட்பதாக தெரிவித்துள்ளார்.

ஜிஎஸ்டி வரி விதிப்பால் தமிழகத்தில் அடித்தட்டு மக்கள் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளனர். சிறு, குறு தொழில் செய்தவர்கள் எல்லாம் ஜிஎஸ்டி வரி விதிப்பால் தங்கள் நிறுவனங்களை நடத்த முடியாமல் நடுத்தெருவுக்கு வந்து விட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனின் இந்த நடவடிக்கை தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘பதவித் திமிர் இப்படியெல்லாம் செய்ய வைக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்கள் தான் என்று பார்ப்போம். ஜிஎஸ்டி வரி விதிப்பில் வேறுபாடு இருக்கிறது சிரமமாக இருக்கிறது என சுட்டிக் காட்டியதற்கு, ஒரு தொழிலதிபரை வரவழைத்து என்ன சொல்லி மன்னிப்பு கேட்க வைத்தார்களோ என்றும், இந்த மண்ணின் உயிர்நாடியே அதிகாரத்தை கேள்வி கேட்பதுதான் என்றும் சமூக வலைதளங்களில் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக கண்டனங்கள் குவிந்து வருகிறது. மக்களை சந்திக்காமல் பின்வாசல் வழியாக ஒன்றிய அமைச்சர் பதவியை பெற்றவருக்கு மக்களின் கஷ்டங்கள் பற்றிய கவலை எப்படி வரும் என்றும், அதனால்தான் தன்னை எதிர்த்து கேள்வி எழுப்புபவர்களை மிரட்டுவதை கையில் எடுத்திருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் அவருக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

* ஜிஎஸ்டி குளறுபடி குறித்து வெளிப்படையாக ஒருவர் கருத்து கூறுவதில் என்ன தவறு உள்ளது?
* தைரியமாக இதை எதிர்த்து கேள்வி எழுப்பியவரை அழைத்து வந்து மன்னிப்பு கேட்க செய்வது எந்த வகையில் நியாயம் என நெட்டிசன்கள் பாஜவுக்கு எதிராக கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

You may also like

Leave a Comment

nine + six =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi