ஜிஎஸ்டி, வணிக விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விரைவில் ஆர்ப்பாட்டம்: விக்கிரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம்

மாமல்லபுரம்: ஜிஎஸ்டி, வணிக விரோத சட்டங்களுக்கு எதிராக டெல்லியில் விரைவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று விக்கிரமராஜா தலைமையில் நடந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநில செயற்குழு கூட்டம் மற்றும் மதுரையில் 41வது வணிகர் தின வணிகர் விடுதலை முழக்க மாநாட்டை சிறப்பாக நடத்தி முடித்த வெற்றியாளர்களுக்கு பாராட்டு விழா மாமல்லபுரத்தில் நேற்று நடந்தது. விழாவிற்கு பேரமைப்பின் மாநில தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் கோவிந்தராஜுலு வரவேற்றார். வரவு-செலவு கணக்குகளை பொருளாளர் ஏ.எம்.சதக்கத்துல்லா சமர்ப்பித்தார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மண்டல, மாநில மாவட்ட நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் “ஜிஎஸ்டி மற்றும் வணிக விரோத சட்டங்களுக்கு எதிராக தலைநகர் டெல்லியில் ஆர்ப்பாட்டம் நடத்துவது சம்பந்தமாக உரிய ஆலோசனைகளை பெற்று தேதி அறிவிக்கப்படும்.

புதிய ஒன்றிய அமைச்சரவை மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு, திருச்சியில் நடந்த 40வது வணிகர் தின மாநில மாநாட்டில் பேரமைப்பின் கோரிக்கை ஏற்று தமிழக அரசு அறிவித்த அறிவிப்புகளுக்கு அரசாணை வெளியிட தமிழக அரசுக்கு உரிய அழுத்தம் கொடுப்பது, 2017 முதல் 2021 வரை தணிக்கை செய்யப்பட்ட ஜிஎஸ்டி கணக்குகளின் மீது மீண்டும் நோட்டீஸ் அனுப்பி கூடுதல் வரி வட்டி அபராதம் விதிக்கும் நடைமுறையை முழுமையாக நிறுத்தி வைத்து, ஜிஎஸ்டி அமலாக்கம் செய்யப்பட்ட முதல் 5 ஆண்டுகளுக்கான கணக்குகளின் தணிக்கை மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வணிகர்களை பாதுகாக்க ஒன்றிய, மாநில அரசுகள் உரிய முறைகளை கையாள வேண்டும்,

உள்ளாட்சி நகராட்சி கட்டிடங்கள், அறநிலையத் துறை கட்டிடங்களில் செயல்பட்டு வரும் வாடகை கட்டிடங்களுக்கான வாடகை உயர்வு, பெயர் மாற்றம் சம்பந்தமாக துரித நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும், குடிசை மாற்று வாரிய கட்டிடங்களுக்கு பத்திரம் பட்டா பெயர் மாற்றங்கள் செய்ய உரிய ஒத்துழைப்பை தமிழக அரசு அளித்து வாடகைதாரர்கள் மற்றும் கடை உரிமையாளர்கள் நலன் காக்க வேண்டும், தமிழக அரசு காவல்துறை ரவுடிகள் மற்றும் சமூக விரோதிகளுக்கு எதிராக தொடர்ந்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு தமிழகம் தழுவிய வணிர்களின் சார்பில் நன்றியையும் பாராட்டுதலையும் தொிவித்துக் கொள்கிறது.

முழுமையான ரவுடிகள் கலாச்சார ஒழிப்பிற்கு பேரமைப்பு தனது ஆதரவை காவல்துறைக்கு அளித்திடும். தமிழக அரசு அறிவித்துள்ள மின் கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும். ஊட்டி, குன்னூர், கூடலூர் போன்ற மலைப்பகுதிகளில் யானை வழித் தடங்களை முறைப்படுத்தி குடியிருப்பு மற்றும் வணிக வளாகங்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் உருவாக்கித் தர தமிழக அரசுக்கு வேண்டுகோள் விடுப்பதுடன், இ-பாஸ் நடைமுறையை முற்றிலும் அகற்றுவதற்கான நடைமுறையையும் தமிழக அரசு வகுத்துத் தர வேண்டும் உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related posts

பாறைக்கால் மடத்தில் பழைய பாலம் இடிப்பு: மழைவெள்ளம் குடியிருப்பு பகுதிகளில் புகாது

ஒன்றிய அரசு நிதி வழங்காததால் ‘நைந்து’ போன நெசவுப் பூங்கா திட்டம்

மின்சாரம் பாய்ந்து மயங்கி விழுந்த காகம்: முதல் உதவி செய்து காப்பாற்றிய தீயணைப்பு வீரர் – குவிந்து வரும் பாராட்டு