ஜி.எஸ்.டி. பற்றி கேள்வி எழுப்பிய விவகாரம்.. கோவை அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளரிடம் மன்னிப்புகேட்ட அண்ணாமலை..!!

சென்னை: அன்னபூர்ணா ஓட்டல் உரிமையாளர் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிட்டதற்காக பாஜக தலைவர் அண்ணாமலை மன்னிப்பு கேட்டார். கோவையில் நடைபெற்ற தொழில் முனைவோர் கலந்தாய்வு கூட்டத்தில் ஜி.எஸ்.டி. குறித்து ஓட்டல் உரிமையாளர்கள் சங்க நிர்வாகியும், அன்னபூர்ணா ஓட்டல் நிறுவனருமான சீனிவாசன் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

அதில், இனிப்புக்கு 5% ஜி.எஸ்.டி. இருக்கிறது. ஆனால் காரத்துக்கு 12% இருக்கிறது. இந்த முரண்பாடு களையப்பட வேண்டும். அதே போல, Bun-க்கு ஜி.எஸ்.டி. இல்ல. அதுக்குள்ள வைக்குற க்ரீமுக்கு 18% ஜி.எ.ஸ்.டி.. வாடிக்கையாளர் சொல்றாரு க்ரீமை கொண்டு வா, நானே வச்சிக்கிறேன்னு சொல்றாரு. கடை நடத்த முடியல மேடம். ஒரே மாதிரி வையுங்கள். ஒரு குடும்பத்துக்கு பில் போடணும்னா கம்யூட்டரே திணறுது மேடம்.” என்று தனது ஆதங்கத்தை தெரிவித்தார். இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியது.

இதையடுத்து நிர்மலா சீதாராமனை அன்னபூர்னா நிறுவனர் சீனிவாசன் நேரில் சந்தித்து வருத்தம் தெரிவித்தார். இது தொடர்பான வீடியோவும் தற்போது வைரலாகி வருகிறது.  சீனிவாசன் மன்னிப்பு கேட்ட வீடியோ வெளியிடப்பட்டது சமூக வலைத்தளங்களில் விவாத பொருளாகி உள்ளது. இந்நிலையில் இந்த வீடியோவுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, திமுக எம்.பி. கனிமொழி, காங்கிரஸ் எம்.பி.ஜோதிமணி உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், மத்திய நிதியமைச்சருக்கும், அன்னபூர்ணா ஹோட்டல் உரிமையாளருக்கும் இடையேயான, தனிப்பட்ட உரையாடலை பொதுவெளியில் பகிர்ந்து கொண்ட பாஜகவினரின் செயலுக்காக, நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என அண்ணாமலை தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது;

“அன்னபூர்ணா ஹோட்டல்களின் உரிமையாளர் சீனிவாசனுடன் நான் பேசினேன். இந்த எதிர்பாராத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்தேன். அன்னபூர்ணா சீனிவாசன் தமிழகத்தின் வணிக சமூகத்தின் தூணாக இருக்கிறார். மாநில மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறார். இந்த விவகாரத்தை உரிய மரியாதையுடன் முடித்து வைக்குமாறு அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்”. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

Related posts

மணிமுத்தாறு அருவியில் 2 நாட்கள் குளிக்கத் தடை

உள்ளாட்சி பிரதிநிதிகள் பதவிக்காலம்: மாநில தேர்தல் ஆணையம் விளக்கம்

ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது.