கூடுதல் விளைச்சல் தரும் கோ – 55

விவசாயத்தில் நாளுக்கு நாள் புதுப்புது தொழில்நுட்பங்கள் புகுத்தப்பட்டு வருகின்றன. தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மூலம் பல புதிய ரக பயிர்களும் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றன. அதன்படி கோ – 55 என்ற புதிய ரக நெல்லை வேளாண் பல்கலைக்கழகம் சமீபத்தில் அறிமுகப்படுத்தியது. இந்தப் புதிய ரக நெல் விதைகள் குறைந்த அளவே கைவசம் இருப்பதால் விவசாயிகளிடம் பரவலாக சென்றடைய முடியாத சூழல் நிலவுகிறது. இதனால் விதைநெல் உற்பத்தியை அதிகரிப்பதற்காக வேளாண் அலுவலர்கள் இயற்கை விவசாயிகள் சிலரைத் தேர்ந்தெடுத்து, விதை நெல்லை வழங்கி சாகுபடி செய்ய ஊக்குவிக்கிறார்கள். விவசாயிகள் சாகுபடி செய்த நெற்பயிர்களில் இருந்து விதைநெல்லை திரும்பப் பெற்று, மேலும் பல விவசாயிகளுக்கு வழங்குகிறார்கள். அதன்படி தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், வெங்கடதாரஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த ரா.இளையராஜா எனும் இயற்கை விவசாயியிடம் கோ – 55 விதை நெல்லை வழங்கி இருக்கிறார்கள். அந்தப் பகுதியின் முன்னோடி விவசாயியாக விளங்கும் ரா.இளையராஜா, அந்த நெல் ரகத்தை சிறப்பான முறையில் சாகுபடி செய்து அசத்தி இருக்கிறார். ஒரு காலைப்பொழுதில் இளையராஜாவைச் சந்திக்கச் சென்றோம். நிலத்தில் பசுமை கட்டி நிற்கும் நெற்பயிர்களில் நெல்மணிகள் செழித்து விளைந்திருக்கின்றன. அவற்றை நமக்கு காண்பித்தவாறே பேச ஆரம்பித்தார்.
`
` அப்பா, தாத்தா காலத்தில் இருந்தே எங்களுக்கு விவசாயம்தான் பிரதான தொழில். விவசாயம் செய்துதான் அப்பா என்னைப் படிக்க வைத்தார். நான் டிப்ளமோ அக்ரிகல்ச்சர் படித்திருக்கிறேன். அதுபோக, எங்களுக்குச் சொந்தமான நிலத்தில் விவசாயமும் செய்து வருகிறேன். எங்களுக்கு சொந்தமாக 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. அந்த நிலத்தில் 3 ஏக்கரில் நெல்லும், 2 ஏக்கரில் கரும்பும், 4 ஏக்கரில் மக்காச்சோளமும், 2 ஏக்கரில் மரவள்ளியும் பயிரிட்டு இருக்கிறேன். நெல் சாகுபடியைப் பொறுத்தவரை ஒரு ஏக்கரில் கோ-55 என்கிற புதிய ரக நெல்லையும், மீதமுள்ள 2 ஏக்கரில் தமிழகத்தின் பாரம்பரிய நெல்லான சிவன் சம்பா நெல்லும் விதைத்திருக்கிறேன்.

கோ-55 என்கிற ரக விதை நெல் தமிழக வேளாண் பல்கலைக்கழகம் மூலம் 5 கிலோ அளவுக்கு கிடைத்தது. அந்த 5 கிலோவைத்தான் ஒரு ஏக்கரில் பயிர் செய்திருக்கிறேன். கடந்த வருடம் சாகுபடி செய்ததில் இருந்து எடுத்து வைத்த சிவன்சம்பா விதை நெல்லை 2 ஏக்கரில் பயிர் செய்திருக்கிறேன். நெல் சாகுபடி செய்வதற்கு நிலத்தை சிறப்பான முறையில் தயார் செய்ய வேண்டும். அதாவது, நடவுக்கு முன்பாக 3 முறை உழ வேண்டும். முதல்முறை உழும்போது நமக்கு கிடைக்கக்கூடிய பூச்சிவிரட்டி இலைகள் அனைத்தையும் நிலத்தில் இட்டு உழவு செய்ய வேண்டும். அவ்வாறு செய்வதால் அடுத்தடுத்த நாட்களில் அந்த இலைகள் மக்கி உரமாக மாறிவிடும். 15 நாட்கள் கழித்து இரண்டாவது உழவை தொடங்கினால் மக்கிய இலைகள் அனைத்தும் மண்ணுக்குள் சென்று அந்த நிலம் நல்ல உரமுள்ள நிலமாக மாறி இருக்கும். பிறகு 3வது உழவை நாற்று நடுவதற்கு முந்தைய நாளில் செய்ய வேண்டும். இந்த உழவில் நுண்ணுயிர்ப் பெருக்கத்திற்காக இயற்கை உரங்கள் போட வேண்டும். அதாவது அசோஸ்பைரில்லம், பாஸ்போபாக்டீரியா போன்ற உரங்களைக் கடைசி உழவில் இட்டு உழுதால் நுண்ணுயிர்கள் பெருகி மண் வளமாகும். அதன்பிறகு நாற்றுகள் நடும் வேலைகள் தொடங்கும். வயலுக்குத் தேவையான நாற்றுகளை நான் நாற்றங்கால் முறையில்தான் வளர்த்து பயன்படுத்திக்கொள்கிறேன். நாற்றங்காலில் வளர்த்தெடுக்கும் நாற்றுகள் 15 நாட்களில் வளர்ந்துவிடும். அவ்வாறு வளர்ந்த நாற்றுகளைப் பறித்து நடவு செய்வோம்.

இந்த கோ-55 ரக நெல்லை நல்ல இடைவெளி விட்டு நட வேண்டும். அதாவது ஒரு வரிசைக்கும் இன்னொரு வரிசைக்கும் இடையே 30 செ.மீ இடைவெளி இருக்க வேண்டும். அதேபோல், ஒரு நாற்றுக்கும் இன்னொரு நாற்றுக்கும் இடையே 20ல் இருந்து 25 செ.மீ வரை இடைவெளி வேண்டும். இந்த அளவில் இடைவெளி கொடுத்தால்தான் அதிக தூர்கள் வெடிக்கும். தூர்கள் பெருத்து சத்து நிரம்பிய நாற்றாக வளரும். கடைசி உழவின்போது நிலத்தில் ஒரு அங்குலம் அளவிற்கு தண்ணீர் இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். நடவு முடிந்த பிறகு 4ல் இருந்து 5 நாட்கள் வரை பாசனம் செய்யத் தேவையில்லை. ஒரு அங்குலத்திற்கு மேல் தண்ணீர் தேங்கி நின்றால் நாற்றுகள் மூழ்கிவிட வாய்ப்பு ஏற்படும். 5 நாட்கள் கழித்து நிலத்திற்கு தேவையான நேரத்தில் தண்ணீர் கொடுக்க வேண்டும். நடவு செய்து 15ல் இருந்து 20 நாட்களுக்குள் களை எடுக்க வேண்டும். நான் எனது வயலில் களையெடுக்கும் இயந்திரம் மூலம்தான் களை எடுக்கிறேன். எனது வயலில் முழுக்க முழுக்க இயற்கை உரங்களை மட்டுமே பயன்படுத்துகிறேன். 20 நாட்களுக்கு ஒருமுறை இயற்கை முறையில் ஏதாவது உரம் கொடுத்துக் கொண்டே இருப்போம். 20 நாட்களுக்கு ஒருமுறை அர்பஸ்குலோர் மைகொரைசா எனும் மருந்தை வாங்கி தெளிக்கிறோம்.

கோ-55 ரகமானது 80 நாட்களில் பூ விடத்தொடங்கும். இது 115 நாள் பயிர் ஆகும். சிவன் சம்பா 135 நாள் பயிர்.ஆரம்பத்தில் பாரம்பரிய அரிசி நடவு செய்யும்போது பூச்சித்தொல்லைகளும், மகசூல் குறைபாடும் இருந்தது. பூச்சித்தொல்லை இருக்கும்போது வேப்ப இலைக் கரைசல், வேப்பெண்ணெய்க் கரைசல், ஐந்திலைக் கரைசல், பத்திலைக் கரைசல் ஆகியவற்றை தெளித்து பூச்சியை விரட்டுவேன். எனது நிலத்தில் எப்போதுமே பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்த மாட்டேன். பூச்சி விரட்டிகள் மட்டும்தான் பயன்படுத்துவேன். அதுபோக, இயற்கை விவசாயம் செய்யக்கூடிய நிலத்தில் எப்போதுமே நன்மை செய்யக்கூடிய பூச்சிகள் அதிகமாக இருக்கும். இதனால் தீங்கு விளைவிக்கக்கூடிய பூச்சிகளை நன்மை தரும் பூச்சிகள் தின்றுவிடும். இதனைக் கருத்தில் கொண்டு எனது நிலத்தில் கடந்த 4 வருடங்களாக எந்தவித ரசாயன இடுபொருட்களையும் பயன்படுத்தியது கிடையாது.நெல் சாகுபடி போக கரும்பு, கேழ்வரகு, மரவள்ளி, மக்காச்சோளம் போன்ற பயிர்களையும் சாகுபடி செய்து வருகிறேன். அவற்றையும் கூட இயற்கை முறையில்தான் விளைவிக்கிறேன். இயற்கை முறையில் விளைவிப்பதன் மூலம் கூடுதலாக லாபமும் பார்க்க முடிகிறது.

இயற்கை விவசாயம் செய்வது ஆரம்பத்தில் கடினமான வேலையாக இருக்கும். எதற்குமே முதலில் மண்ணைப் பழக்க வேண்டும். மண்ணில் உள்ள தீங்கு தரும் பூச்சிகளை அழிப்பதற்கு என்ன வழியோ அதைச் செய்ய வேண்டும். அதன்பின் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருக்கம் அடைய என்ன செய்ய வேண்டுமோ அதனைச் செய்ய வேண்டும். இவை இரண்டும்தான் இயற்கை வழி விவசாயத்திற்கு முதல் ஆதாரம். எப்படிப்பார்த்தாலும் தொடர்ந்து 4 வருடங்கள் இதே முறையில் மண்ணைப் பழக்கினால் மட்டுமே அந்த நிலம் முழுவதுமாக இயற்கை விவசாயத்திற்கு ஏற்ற மண்ணாக மாறும்.

எனது நிலத்தில் பயிரிட்டு இருக்கிற இந்த கோ-55 ரக நெல்லில் மகசூல் வந்தபிறகு வேளாண் அலுவலகத்திற்கே விதைக்காக கொடுக்க இருக்கிறேன். அதாவது, எந்த ஒரு விவசாய விளைபொருளையும் உணவிற்காக கொடுக்கும்போது தானியமாகவும், விதைப்புக்காக கொடுக்கும்போது விதையாகவும் கொடுப்போம். நான் எனது நெல்லை விதைப்பதற்காக கொடுக்கும்போது சராசரி விலையை விட 10 சதவிகிதம் அதிக லாபத்திற்கு கொடுக்கிறேன். இந்த முறையும் லாபம் பெருக்க நல்ல வழி. சிவன் சம்பா நெல் அறுவடை வந்த பிறகு நேரடியாகவும் விற்பனை செய்கிறேன். சில நேரம் மொத்தமாகவும் கொடுக்கிறேன். நான் விவசாயம் செய்வதால் படிப்பிலும் விவசாயத்துறையைத் தேர்ந்தெடுத்தேன். இப்போது இரண்டிலுமே மிகச்சரியாக செயல்பட்டு வருகிறேன். எனது விவசாய முறையைப் பார்த்து எங்களது ஊரில் ஒருசிலராவது இயற்கை முறை விவசாயத்திற்கு வருவார்கள். அதுதான் எனக்கு முழுமகிழ்ச்சி’’ என்று மகிழ்வுடன் கூறுகிறார்.

இலைசுருட்டுப் புழுவுக்கு
இயற்கை வழி தீர்வு

நெற்பயிரில் அதிக சேதத்தை ஏற்படுத்துவது இலைசுருட்டுப்புழுக்கள்தான். இதனால் விவசாயிகள் கடுமையாக பாதிப்பு அடைகிறார்கள். இதனை இயற்கை முறையில் சரி செய்வதற்கு, அரை கிலோ பூண்டு மற்றும் 5 கிலோ வேப்பங்கொட்டை ஆகியவற்றை நன்றாக இடித்து 10 லிட்டர் மாட்டுக்கோமியத்துடன் சேர்த்து 10 நாட்கள் ஊற வைக்க வேண்டும். ஊறிய பிறகு, பயிர்களுக்கு 10 லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் கரைசல் மூலம் கலந்து பயிர்களுக்குத் தெளித்து வந்தால் இந்தப்புழுவின் தாக்குதலைக் கட்டுப்படுத்தலாம். இந்தக் கரைசலை புழு வருவதற்கு முன்பாகவே அடிக்கலாம். புழு தாக்குதல் தொடங்கிய பிறகும் அடிக்கலாம். நாற்று நட்டு 25 நாட்களுக்குப் பிறகு அடிக்க ஆரம்பிக்கலாம். இந்தக் கரைசலில் காரம் மற்றும் கசப்புத்தன்மை அதிகம் இருப்பதால் புழுக்கள் வந்த வேகத்தில் ஓடிவிடும் என்கிறார் இளையராஜா.

கோ – -55 சிறப்பியல்புகள்

கோ – 55 ரக நெல் மிகமிக சன்ன ரகம். குறுகிய காலப் பயிராகவும் இருக்கிறது. இதில் மகசூலும் கூடுதலாக கிடைக்கும். சராசரியாக மற்ற ரக நெல்லில் 30 மூட்டை மகசூல் கிடைத்தால் இந்தப் புதிய ரகத்தில் 35 மூட்டை மகசூல் கிடைக்கும். இந்த ரக நெற்பயிரை இலைசுருட்டுப் புழுக்கள் தாக்குவதற்கு வாய்ப்பு குறைவு.

 

Related posts

கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும் பாரீஸ் பாராலிம்பிக் போட்டிகள் இன்றுடன் நிறைவு

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்