மணற்பாங்கான பூமியிலும் கரிசல் நிலத்திலும் நன்கு வளரும் மானாவாரியில் அதிகளவில் மகசூல் கிடைக்கும் உளுந்து

*ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மையை கடைபிடிக்க அறிவுறுத்தல்

சின்னமனூர் : கரிசல் நிலங்கள் மற்றும் மணற்பாங்கான இடங்களில் உளுந்து பயிரிடலாம் என வேளாண்மை துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர்.கடந்த 2012ம் ஆண்டு முதல் பருவநிலை மாற்றத்தால் போதிய மழையின்றி கூடலூர், கம்பம், தேவாரம், போடி, பெரியகுளம், க.மயிலை, வருசநாடு ஆகிய பகுதிகளில் மானாவாரி சாகுபடி பரப்பளவு வெகுவாக குறைந்து வந்தது.

தற்போது மாவட்டத்தில் கோடை மழையும், அதனையடுத்து பருவ மழையும் பெய்து வருவதால் மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் சாகுபடியை தொடங்கியுள்ளனர். சுமார் 1.25 லட்சம் ஏக்கரில் சோளம், கம்பு, துவரை, அவரை, மொச்சை, உளுந்து, பாசிப்பருப்பு, தட்டைப்பயறு, பருத்தி, காட்டுத்தக்காளி, சிறுதானியம், பயறு வகை மற்றும் எண்ணெய் வித்துப் பயிர்கள் சாகுடி செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து வேளாண்துறை அதிகாரிகள் கூறி இருப்பதாவது: தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் உளுந்து பயறு பரவலாக பயிரிடப்படுகிறது. உளுந்து பயிரானது ஆழமான வேர் அமைப்பை கொண்டிருப்பதால் மண்துகள்களை இறுக்கமாக பிடித்து மண் அரிப்பை தடுப்பதோடு பசுந்தாள் உரப்பயிராகவும் பயன்படுகிறது. மற்ற பயறு வகைகளை விட 5 மடங்கு அதிகமான பாஸ்பாரிக் அமிலம் கொண்டுள்ளது. தமிழகத்தில் உளுந்து மானாவாரியில் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது.

மேலும் ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை உத்தியை கடைபிடித்தால் அதிக மகசூல் பெறலாம். உளுந்து நன்றாக விளைய நிலங்களை தயார் செய்ய வேண்டும். நல்ல மணற்பாங்கான பூமியிலும் கரிசல் நிலத்திலும் உளுந்து நன்கு வளரும். மண்ணின் அமில கார தன்மை 5.5 முதல் 7 வரை இருக்கலாம். உவர் நிலங்கள் உளுந்து சாகுபடிக்கு சரிவராது.

நிலத்தை 3 முதல் 4 முறை சட்டிக்கலப்பையால் உழ வேண்டும். கடைசி உழவின் போது ஏக்கருக்கு 5 டன் மட்கிய தொழு உரத்தை உயிரி உரங்களுடன் கலந்து இட வேண்டும். மேலும் அதிக மகசூல் தரும் ரகங்களான வி.பி.என். 8 ரகம் 65 – 70 நாட்கள் வயதுடையது. ஏக்கருக்கு 350 கிலோ மகசூல் கிடைக்கும். மஞ்சள் தேமல் நோய்க்கு எதிர்ப்பு தன்மை உடையது. ஒரே நேரத்தில் அனைத்து பயிர்களும் அறுவடைக்கு தயாராகும்.

விதைப்பும் விதை நேர்த்தியும்: ஒரு ஏக்கருக்கு 8 கிலோ விதை போதும். விதைப்பதற்கு 24 மணி நேரத்திற்கு முன் ஒரு கிலோ விதைக்கு 2 கிராம் கார்பென்டசிம் அல்லது 4 கிராம் டிரைக்கோடெர்மா விரிடி கலந்து விதைக்க வேண்டும். இதனால் பயிர் வளர்ச்சியில் ஆரம்ப நிலைகளில் ஏற்படும் நோய்களை கட்டுப்படுத்தலாம். விதைகளை 30 க்கு 10 செ.மீ. என்ற அளவில் விதைக்க வேண்டும்.

ஊட்டச்சத்து மேலாண்மை : விதைப்பதற்கு முன் அடியுரமாக ஒரு ஏக்கருக்கு 5 கிலோ தழைச்சத்து, 5 கிலோ சாம்பல்சத்து, 5 கிலோ கந்தக சத்தை இட வேண்டும். 25 நாட்கள் கழித்து 5 கிலோ தழைச்சத்து, 5 கிலோ சாம்பல் சத்து உரத்தை இட வேண்டும். விதைத்த 30 மற்றும் 45 வது நாட்களில் இலை வழியாக ஒரு சதவீத யூரியாவை தெளித்து உளுந்து மகசூலை அதிகரிக்கலாம். வறட்சி அல்லது மழை பெய்யாத காலங்களில் 2 சதவீதம் அதாவது 10 லிட்டர் தண்ணீருக்கு 20 கிராம் பொட்டாசியம் குளோரைடை இலைவழியாக தெளித்தால் அதிக மகசூல் பெறலாம்.

களை மேலாண்மை : மழை பெய்யும் நேரமாக இருந்தால் களை முளைப்பதற்கு முன், 200 லிட்டர் தண்ணீரில் ஒரு லிட்டர் பெண்டிமெத்திலீன் களைக்கொல்லியை கலந்து தெளிப்பான் மூலம் தெளிக்க வேண்டும். இல்லாவிட்டால் விதைத்த 15 மற்றும் 30 வது நாட்களில் கையால் களை எடுக்க வேண்டும்.ஒருங்கிணைந்த நோய் மேலாண்மை : சாம்பல் நோய், மஞ்சள் சோகை நோய் மற்றும் வேர் அழுகல் நோய் உளுந்தை தாக்கக்கூடியவை ஆகும்.

இதற்கு வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 3 மில்லியை தண்ணீரில் கலந்து இரண்டு முறை 10 நாட்கள் இடைவெளி யில் தெளித்து வர வேண்டும். இல்லையென்றால் ஒரு ஏக்கருக்கு 100 கிராம் கார்பென்டாசிம் மருந்தை 100 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். மஞ்சள் தேமல் நோயை கட்டுப்படுத்த சாறு உறிஞ்சும் பூச்சியை கட்டுப்படுத்தும் மருந்தை தெளிக்க வேண்டும்.

பூச்சி மேலாண்மை முறைகள் : இனக்கவர்ச்சி பொறி ஏக்கருக்கு 5 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தை கட்டுப்படுத்த வேண்டும். சாறு உறிஞ்சும் பூச்சிகளை கட்டுப்படுத்த மெத்தில்தேமாட்டான் மருந்தை 400 லிட்டருக்கு 300 மி.லி என்ற அளவில் கலந்து தெளிக்க வேண்டும். அல்லது வேப்பங்கொட்டைச்சாறு 5 சதவீதம் அல்லது வேப்ப எண்ணெய் 2 சதவீதத்தை 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.

Related posts

மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து பெய்யும் கனமழை..! இடிபாடுகளில் சிக்கி 7 பேர் உயிரிழப்பு

ஆராய்ச்சி நோக்கத்திற்காக மறைந்த சீதாராம் யெச்சூரி உடல் தானம்..!!

இடதுசாரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மிகச்சிறந்த தலைவர்களில் ஒருவர் : சீதாராம் யெச்சூரி மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்!!