குரூப் 2, 2ஏ தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் இன்றுடன் முடிகிறது: பட்டதாரிகள் ஆர்வம்

சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2, குரூப் 2 ‘ஏ’ பணியில் காலியாக உள்ள 2,327 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த மாதம் 20ம் தேதி வெளியிட்டது. இதில் குரூப் 2 பணியில் தொழிலாளர் உதவி ஆய்வாளர், துணை வணிக வரி அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு சிறப்பு உதவியாளர், சென்னை மாநகர காவல் தனிப்பிரிவு உதவியாளர் உள்பட 507 இடங்கள் நிரப்பப்படுகிறது.

குரூப் 2’ஏ’ பணியில் தமிழ்நாடு மின்விசை நிதி மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழகம் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனரின் நேர்முக உதவியாளர், கூட்டுறவு சங்கங்கள் முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி நிதித் தணிக்கை உதவி ஆய்வாளர் என 48 துறைகளில் 1820 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இத்தேர்வுக்கு இணையதளம் வாயிலாக இளங்கலை பட்டதாரிகள் மட்டுமின்றி, முதுநிலை பட்டதாரிகள், இன்ஜினீயர் என்று போட்டு போட்டு விண்ணப்பித்து வந்தனர்.

இந்நிலையில் ஒரு மாத காலம் அவகாசம் இன்று நள்ளிரவு 11.59 மணியுடன் முடிவடைகிறது. இன்று கடைசி நாள் என்பதால் தேர்வுக்கு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. தற்போது நடத்தப்பட உள்ள குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதாவது குரூப் 2 பதவிக்கு நேர்முக தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதுமட்டுமல்லாமல் குரூப் 2, குரூப் 2ஏ பதவிகளுக்கும் தனித்தனியே முதன்மை தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு முன்பு இந்த 2 பதவிகளுக்கு ஒரே மாதிரியாக முதன்மை தேர்வு நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து குரூப் 2, குரூப் 2ஏ பதவிக்கான முதல்நிலை தேர்வு செப்டம்பர் 14ம் தேதி நடக்கிறது. இதில் வெற்றி பெறுவோர் அடுத்தகட்டமாக மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

Related posts

உத்திரபிரதேச மாநிலம் மதுரா அருகே நிலக்கரி ஏற்றிச் சென்ற சரக்கு ரயில் தடம் புரண்டு விபத்து

சென்னை ராமாபுரம் கார் சர்வீஸ் மையத்தில் பயங்கர தீ விபத்து.

செப் 19: பெட்ரோல் விலை 100.75, டீசல் விலை 92.34க்கு விற்பனை