15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த மாதம் வெளியீடு: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு

சென்னை: 15 லட்சத்து 88 ஆயிரம் பேர் எழுதிய குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த மாதம் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 4 பதவிகளில் அடங்கிய கிராம நிர்வாக அலுவலர்-108, இளநிலை உதவியாளர்-2,604, தட்டச்சர்- 1,705, சுருக்கெழுத்து தட்டச்சர்- 445, தனி உதவியாளர், கிளர்க்- 3, தனிச் செயலாளர்- 4, இளநிலை நிர்வாகி- 41, வரவேற்பாளர்- 1, பால் பதிவாளர்- 15, ஆய்வக உதவியாளர்- 25, பில் கலெக்டர்- 66, தொழிற்சாலை மூத்த உதவியாளர்- 49, வன பாதுகாவலர், காவலர்- 1,177, இளநிலை ஆய்வாளர்- 1 ஆகிய 6244 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வை கடந்த ஜூன் 9ம் தேதி நடத்தியது.

இத்தேர்வு எழுத 20 லட்சத்து 37 ஆயிரத்து 101 பேர் அனுமதிக்கப்பட்டிருந்தனர். ஆனால், 15 லட்சத்து 88 ஆயிரத்து 684 பேர் (78 சதவீதம்) மட்டுமே தேர்வு எழுதினர். 4 லட்சத்து 48 ஆயிரத்து 90 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனால், ஒரு பணியிடத்துக்கு 254 பேர் போட்டியிடும் சூழ்நிலை உருவானது. திருவிழா போல நடந்த தேர்வுக்கான ரிசல்ட் எப்போது வெளியிடப்படும் என்று தேர்வு எழுதியவர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருந்து வந்தனர். இந்நிலையில் குரூப் 4 தேர்வு எப்போது வெளியாகும் என்பது தொடர்பாக டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதுதொடர்பாக டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் தளம் பதிவில், “ ஜூன் மாதம் 9ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் அடுத்த மாதம் (அக்டோபர்) வெளியிடப்படும்” என்று அறிவித்துள்ளது.

Related posts

ம.நீ.ம. தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வு

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிப்பு: காவல் ஆணையர் விளக்கம்

சென்னை அருகே ரயிலை கவிழ்க்க சதியா?