குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்கள் மீது வழக்கு: ஐகோர்ட் கிளை

மதுரை: குரூப் 1 தேர்வு முறைகேடுகள் குறித்து உரிய ஆவணங்களை தர மறுத்த 4 பல்கலைக்கழகங்கள் மீதும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து சூமோட்டோ வழக்கு தொடர்ந்துள்ளது. கடந்த 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற குரூப் 1 தேர்வில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றது. அதில் குறிப்பாக, தமிழ் வழியில் பயின்றதாக கூறி 20 சதவீத அரசு வழங்கக்கூடிய இட ஒதுக்கீடு முறைகேடாக பெற்று தற்போது குரூப் 1 அலுவலர்களாக பணியில் சேர்ந்துள்ளனர். இந்த வழக்கில் உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் கடந்த 2020 ஆம் ஆண்டே வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கை விசாரணை செய்த நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை அப்போது பிறப்பித்திருந்தது. ஆனால் இதுவரை அந்த உத்தரவுகள் நிறைவேற்ற படாததால் மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு ஒன்றை சக்தி ராவ் தாக்கல் செய்தார். இந்த வழக்கை நீதிபதிகள் சக்திவேல் மற்றும் அவரது அமர்வு விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது லஞ்சஒழிப்பு துறை சார்பாக பல்வேறு அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டது. குறிப்பாக கடந்த வார விசாரணையின் போது குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்ற 4 அதிகாரிகள் மீது வழக்குபதிவு செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. தொடர்ந்து பல்வேறு பல்கலைக்கழகங்களுக்கு சென்று ஆவணங்கள் சோதனை நடைபெற்று வருகிறது.

ஆனால் அண்ணாமலை பல்கலைக்கழகம், மனோன்மணியம் பல்.கழகம், பெரியார் பல்கலைக்கழகம், மெட்ராஸ் பல்கலைக்கழகம் ஆகிய 4 பல்கலைக்கழகம் மட்டும் வழக்கிற்கு ஒத்துழைப்பு தராமல் ஆவணங்களை தர மறுக்கிறது என தெரிவிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கில் 4 பல்கலைக்கழகங்களையும் எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவு பிறப்பித்தனர். அதுமட்டுமல்லாமல் ஆவணங்களை பல்கலை கழகங்கள் தர மறுத்தால் நேரடியாக சென்று லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக ஆய்வு செய்து ஆவணங்களை கைப்பற்றலாம் என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளனர். குரூப் 1 தேர்வு முறைகேடுகள் வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கில் பல்கலைக்கழகமோ, லஞ்ச ஒழிப்புத்துறையோ செயல்பட்டால் அவர்கள் மீது குற்றவியல் வழக்கு பதிந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி வழக்கின் முழு விசாரணை சம்மந்தமாக லஞ்ச ஒழிப்புத்துறை இயக்குனர் நிலை அறிக்கை தாக்கல் செய்யவும் ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

 

Related posts

சென்னை, தியாகராயநகரில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள்

இன்று ஒரே நாளில் 50 விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பரபரப்பு

வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு சென்னையில் 48,664 மரங்களின் கிளைகள் அகற்றம்: மாநகராட்சி அறிக்கை