மளிகை கடைக்காரரை கொன்ற அதிமுக மகளிரணி செயலாளர்

ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே பேகேப்பள்ளி பகுதியைச் சேர்ந்தவர் திம்மராஜ் (37). இவரது மனைவி புஷ்பா. இந்த தம்பதிக்கு தீக்ஷிதா என்ற மகள் உள்ளார். அதே பகுதியில் திம்மராஜ் மளிகை கடை நடத்தி வந்தார். கடந்த 5ம் தேதி மாலை அருகில் உள்ள கடைக்கு டீ குடிப்பதற்காக சென்றபோது, டூவீலரில் முகமூடி அணிந்து வந்த மர்ம நபர்கள் 3 பேர், திம்மராஜை சரமாரியாக கத்தியால் குத்தி கொலை செய்துவிட்டு தப்பினர். இந்த கொலை தொடர்பாக ஓசூரைச் சேர்ந்த கிரண்(22), மூர்த்தி(20) மற்றும் ராஜ்குமார்(22) ஆகியோர் கடந்த 7ம் தேதி ராமநாதபுரம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். மேலும், ஸ்ரீதர்(27), ராகேஷ்(27) மற்றும் கர்நாடக மாநிலம் அத்திப்பள்ளியைச் சேர்ந்த ஸ்வேதா(27) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், நேற்று அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளர் நாகரத்தினம்மா(44), முனிராஜ்(51), முரளி(26) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் 3 சிறுவர்களையும் பிடித்து விசாரித்து வருகின்றனர். அதிமுக மகளிரணி மாவட்ட செயலாளரான ஓசூர் பேகேப்பள்ளியைச் சேர்ந்த நாகரத்தினம்மாவிற்கு சொந்தமான வீட்டில் சசிகுமார் என்பவர் வாடகைக்கு குடியிருந்ததார். அவரை காலி செய்யுமாறு நாகரத்தினம்மா கூறியுள்ளார். அதன்படி, வீட்டை காலி செய்தபோது முன்பணத்தில் 1500 ரூபாயை நாகரத்தினம்மா பிடித்தம் செய்துள்ளார்.

இதுகுறித்து சசிக்குமார் பலமுறை நாகரத்தினமாவிடம் நேரிலும், போன் செய்தும் கேட்டுள்ளார். இதுதொடர்பாக ஏற்பட்ட தகராறில் நாகரத்தினம்மாவை சசிக்குமார் தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்து சிப்காட் போலீசார் விசாரித்து வழக்கு பதிவு செய்தனர். ஓசூர் நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த சம்பவத்தை நேரில் பார்த்ததாக திம்மராஜ் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் நாகரத்தினம்மாவிற்கு எதிராக சாட்சி கூறியதாக தெரிகிறது. இந்த ஆத்திரத்தில் திம்மராஜை தீர்த்து கட்டியதாக தெரிய வந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

Related posts

மேக் -இன்-இந்தியா, 3வது பெரிய பொருளாதாரம், விஸ்வகுரு என பேசினால் மட்டும் போதாது : பிரதமர் மோடியை விமர்சித்த நிதின் கட்கரி

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு