ரூ.49க்கு கிரில் சிக்கன்… ரூ.79க்கு பிரியாணி…பட்டயக் கிளப்பும் பட்ஜெட் உணவகம்!

சென்னையில் இன்று திரும்பும் திசையெல்லாம் பிரியாணி மயம்தான். இதில் மசாலாக்களை அரைத்து ஊற்றி தயார் செய்யப்படும் திண்டுக்கல் பிரியாணி, மசாலாவை தனியாக வேக வைத்தும் அரிசியை தனியாக வேக வைத்தும் தயார் செய்து கொடுக்கப்படும் ஆந்திராவின் ஃபேமஸ் ஐதராபாத் பிரியாணி, கேரளா ஸ்டைல் பிரியாணி என்று பல பிரியாணி வெரைட்டி இருந்தாலும் சென்னை ஸ்டைல் பிரியாணிக்கான மவுசு இன்றைக்கும் குறையவில்லை. பாசுமதி அரிசியில் தயார் செய்து தம் போட்டு தரப் படும் சென்னை பிரியாணிக்கு ஃபுட் லவ்வர்ஸ் அடிமைதான். அந்த வகையில் சென்னை ஸ்டைல் பிரியாணி மற்றும் சிக்கன் 65 என்று வெறும் இரண்டு டிஷ்களுடன் உணவகத்தைத் தொடங்கி இன்றைக்கு 60க்கும் மேற்பட்ட டிஷ்களைக் கொடுத்து வரும் அண்ணாநகர் சாந்தி காலனியில் உள்ள கிங்ஸ் கிச்சன் உணவகத்தின் உரிமையாளர் ஜாவித்தைச் சந்தித்தோம். “மலைகளின் இளவரசியான கொடைக்கானல்தான் எனக்கு பூர்வீகம். சென்னைக்கு வந்து செட்டில் ஆகி பல வருடங்கள் ஆகிவிட்டன. விளம்பரம் சார்ந்த தொழில் செய்து வந்த எனக்கு ரொம்ப நாட்களாகவே ஒரு உணவகம் திறக்க வேண்டும் என்று ஆசை. அதற்கு கடை, டேபிள், சேர், பராமரிப்பு என்று அதிகம் செலவு ஆகும்.

இதற்கான பணம் அப்போது என்னிடம் இல்லை. 2014ம் ஆண்டில் இதுகுறித்து எனது நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வேன். மற்றவர்களிடம் இதைப் பேசி பயனில்லை, நாமே ஒரு முயற்சி எடுத்தால் மட்டுமே இது நடக்கும் என்று முடிவு செய்து விளையாட்டாக என்னுடைய கிங்ஸ் கிச்சன் உணவகத்தை வெறும் இரண்டு டிஷ்களுடன் தொடங்கினேன்.பிரத்தியேகமாக ஒரு கிளவுட் கிச்சனை நானே உருவாக்கி சென்னை ஸ்டைலில் பிரியாணி செய்து கொடுக்கத் துவங்கினேன். 2015 முதல் 2017 வரை கிளவுட் கிச்சன் மூலம் பார்சல் மட்டுமே கொடுத்து வந்தேன். நான் எதிர்பார்த்ததை விட வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு அதிகமாக வரத் தொடங்கினார்கள். அப்படி வருபவர்கள் பலரும் தெரிவிக்கும் ஒரே கருத்து ஒரு உணவகத்தைத் தொடங்குங்கள் என்பது மட்டும்தான். இதனைக் கவனத்தில் வைத்துதான் என்னுடைய கிங்ஸ் கிச்சன் உணவகத்தைத் தொடங்கினேன். உணவகத்தில் இரண்டு டிஷ்கள் கொடுக்கத் தொடங்கிய நான் தற்போது 60 டிஷ்கள் வரை கொடுத்துவருகிறேன். உணவகத்தில் மல்டி குசைன் ஸ்டைலில் டிஷ்கள் தருகிறேன். சைனீஸ், இந்தியன், அரேபியன் என்று அனைத்து டிஷ்களும் இங்கு இருக்கிறது. சென்னையில் எங்கு சென்றாலும் சிக்கன் பக்கோடா, சிக்கன் 65 மட்டுமே கொடுத்து வருகிறார்கள். இதே சிக்கன் ஸ்டைலில் கபாப் என்ற ஒரு டிஷ் இருப்பதையே மறந்துவிட்டார்களா என்ற யோசனை எனக்கு இருக்கும். பெங்களூரில் கபாப் ஒன் ஆஃப் தி பெஸ்ட் டிஷ்.

அதே டேஸ்டில் கபாப்பை இங்கு கொடுத்து வருகிறேன். பெங்களூரில் குளிருக்கு இதமாக இருக்க வேண்டும் என்பதற்காக கபாப்பில் கொஞ்சம் காரம் கூடுதலாக இருக்கும். எங்களுடைய கிங்ஸ் கிச்சனில் அப்படி இருக்காது. சென்னைக்கு தகுந்தாற்போல அளவான காரம் மட்டுமே சேர்ப்போம். ஒரு உணவகம் என்பது அனைவருக்குமானதாக இருக்க வேண்டும். அண்ணா நகர் இன்றைக்கு மிகப்பெரிய ஃபுட் சிட்டியாக மாறி இருக்கிறது. சாமானியர்கள் இங்கு தாங்கள் விரும்பிய டிஷ்ஷை சாப்பிட முடியுமா என்றால் அது கேள்விகுறிதான். எந்த உணவகத்திற்கு சென்றாலும் கிரில் சாப்பிட வேண்டும் என்றாலே ரூ.120 கொடுக்க வேண்டியிருக்கும். இதனைக் கவனத்தில் கொண்டுதான் நாங்கள் ரூ.49க்கு கிரில் சிக்கன் கொடுக்கிறோம். இதற்கு புதினா சட்னி, சாலட், மயோனஸும் தருகிறோம். பொதுவாகவே தனியாக வந்து உணவகத்தில் சாப்பிடுபவர்களை விட குடும்பத்துடன் வந்து சாப்பிடுபவர்கள்தான் அதிகம். அப்படி குடும்பத்துடன் வருபவர்களில் குழந்தைகள் விரும்புவது பிரியாணியாகத்தான் இருக்கும். ஒரு முழு பிரியாணியை குழந்தையால் கண்டிப்பாக சாப்பிட முடியாது. அதனால் ரூ.79க்கு குழந்தைகளுக்கான பிரியாணியைத் தருகிறோம். பிரியாணி, கபாப் மட்டும் இல்லாமல் ரொமாலி ரொட்டி, தந்தூரி, ஹரியாலி சிக்கன் என்று நிறைய வெரைட்டி இருக்கிறது. ஹரியாலி சிக்கனை நிறைய பேர் ஆர்டர் செய்து சாப்பிடுவார்கள். இந்த ஹரியாலி சிக்கனை அவ்வளவு எளிதாக செய்து விட முடியாது.

சிக்கன் புதியதாக இருக்க வேண்டும். அப்படி வாங்கி வந்த சிக்கனை நன்கு உப்பு மஞ்சள் போட்டு சுத்தம் செய்துகொள்ள வேண்டும். கொத்தமல்லி, புதினா, பச்சை மிளகாய், இஞ்சி பூண்டு விழுது உள்ளிட்ட பொருட்களை மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் எடுத்து வைக்க வேண்டும். அரைத்து எடுத்து வைக்கும்போதே இதன் வாசனை நம் மூக்கை துளைக்கும். சிக்கனுடன் அரைத்த விழுது, தயிர், எலுமிச்சைச் சாறு, எங்கள் ஸ்பெஷல் மசாலா, உப்பு சேர்த்து கலந்து கிட்டத்தட்ட 2 மணி நேரத்திற்கு ஊறவைத்து குக் செய்து வாடிக்கையாளர்களுக்கு கொடுப்போம். இதில் சேர்க்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நேரடியாக நாங்களே அரைத்துச் சேர்ப்பதால் உடலுக்கு எந்தவொரு உபாதையும் வராது.மலாய் கபாப்பும் எங்கள் சிக்நேச்சர் டிஷ்சில் ஒன்று. இதில் சிக்கனோடு கொத்துமல்லி இலை, பெரிய வெங்காயம், முந்திரிப் பருப்பு, பல் பூண்டு, இஞ்சித் துண்டு, பச்சை மிளகாய், எங்கள் ஸ்பெஷல் மசாலா உள்ளிட்ட பொருட்களை அரைத்து சிக்கனோடு சேர்ப்போம். பிறகு தயிர், உப்பு, எலுமிச்சைச்சாறு உள்ளிட்டவற்றைச் சேர்த்து ஹரியாலி சிக்கன் போலவே இரண்டு மணி நேரம் ஊற வைத்து குக் செய்து அதன் மீது பட்டர், ப்ரஷ் க்ரீம், சீஸ் தூவி கொடுப்போம்.

இந்த டிஷ் பார்ப்பதற்கும், ருசிப்பதற்கும் மிகவும் நன்றாக இருக்கும். உணவகத்திற்கு வந்து விதவிதமான பிளேவர்களைச் சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு காம்போ ஆஃபரும் உண்டு. சைனீஸில் வெஜ் காம்போ ரூ.150க்கு தருகிறோம். இந்த வெஜ் காம்போவில் வெஜ் ப்ரைடு ரைஸ், கோபி மஞ்சூரியன், ஒரு சாப்ட் டிரிங் தருகிறோம். நான்வெஜ் காம்போ ரூ.190க்கு இருக்கிறது. இதில் சிக்கன் ரைஸ், சில்லி சிக்கன், சாப்ட் டிரிங் தருகிறோம். இந்த இரண்டு கம்போவிலும் ரைஸிற்கு மாற்றாக நூடுல்ஸ் தருகிறோம். பிரியாணி காம்போ ரூ.190க்கு கொடுக்கிறோம். இதில் பிரியாணி, சிக்கன் ட்ரம் ஸ்டிக், சாப்ட் டிரிங் என்று தருகிறோம். இதில் ட்ரம்ஸ்டிக்கிற்கு மாற்றாக சிக்கன் 65 தருகிறோம். நாங்கள் நாண் கொடுப்பது கிடையாது. அதற்கு மாற்றாக ரொமாலி ரொட்டி தருகிறோம். ரொம்ப மிருதுவாக சப்பாத்தி மாவினை பிசைந்து அதனைப் பேப்பர் போல உருட்டி தயார் செய்து வாடிக்கையாளர்களுக்கு அதற்குண்டான தனி அடுப்பில் வேக வைத்துக் கொடுக்கிறோம். சிக்கன், மீன், ப்ரான், மட்டன் என்று அனைத்திலும் கிரேவியும் தருகிறோம். தந்தூரியை நாங்கள் சவுக்குக் கரிகட்டையில் சுட்டுத் தருகிறோம். நேரடியாக தந்தூரியை தீயில் சுட்டு கொடுக்கும்போது அதன் மணமும் ருசியும் மீண்டும் மீண்டும் சாப்பிடத் தூண்டும். ஆர்டரின் பேரில் உணவுகளைத் தயார் செய்தும் கொடுத்து வருகிறோம்’’ என்கிறார்.

– சுரேந்திரன் ராமமூர்த்தி.
படங்கள்: கிருஷ்ணமூர்த்தி

Related posts

முடிவுக்கு வருகிறது போராட்டம் நாளை பணிக்கு திரும்பும் கொல்கத்தா டாக்டர்கள்

இந்தியாவிலிருந்து வெடிமருந்துகள் உக்ரைன் செல்கிறதா? ஒன்றிய அரசு மறுப்பு 

நந்தனம் ஓட்டலில் உள்ள ஸ்பாவில் பாலியல் தொழில் நடத்திய பெண் கைது: 4 பட்டதாரி இளம்பெண்கள் மீட்பு