குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்: கலெக்டர் வழங்கினார்

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் த.பிரபுசங்கர் தலைமை தாங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் ஆ.ராஜ்குமார், உதவி கலெக்டர் (பயிற்சி) ஆயுஷ் குப்தா, வேளாண்மை இணை இயக்குநர் கா.முருகன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) க.வேதவல்லி, வேளாண்மை துணை இயக்குநர் (நுண்ணீர் பாசனம்) தயாளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் 2024-25ம் ஆண்டிற்கு 2 லட்சம் டன்கள் அரவை செய்ய இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என மாவட்ட கலெக்டர் தெரிவித்தார். தச்சூர் முதல் சித்தூர் வரை அமைக்கப்படும் தேசிய நெடுஞ்சாலைக்கு விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இவற்றில் தங்களின் விவசாய நிலங்களுக்கு செல்வதற்கு அணுகுசாலை அமைத்து தர மாவட்ட கலெக்டரிடம் விவசாயிகள் முறையிட்டனர்.

இதனையடுத்து 5 விவசாயிகளுக்கு தலா ரூ.1,990 வீதம் ரூ.9,950 மதிப்பீட்டில் பசுந்தாள் உரம், 2 விவசாயிகளுக்கு தலா ரூ.500 வீதம் ரூ.1000 மதிப்பீட்டில் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு திட்டமும், 2 விவசாயிகளுக்கு மண்வள அட்டையும், 1 விவசாயிக்கு ரூ.4 ஆயிரம் மதிப்பிலான ஆத்மா திட்டம் மாடித் தோட்ட தொகுப்பும், 1 விவசாயிக்கு ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கோழிகளும், 1 விவசாயிக்கு ரூ.14,8000 மதிப்பிலான பவர் டில்லரும், 9 விவசாயிகளுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் ரூ.9 லட்சம் மதிப்பீட்டில் கறவை மாட்டு கடனுதவியும் ஆக மொத்தம் 21 விவசாயிகளுக்கு ரூ.11 லட்சத்து 7 ஆயிரத்து 475 மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட கலெக்டர் த.பிரபுசங்கர் வழங்கினார். இக்கூட்டத்தில் விவசாயிகள், பல்வேறு துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை