குடியரசு தின விழா கொண்டாட்டம் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து

சென்னை: குடியரசு தின விழாவையொட்டி அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

* தமிழிசை சவுந்தரராஜன் (புதுச்சேரி ஆளுநர்): தேசிய தலைவர்கள் முன்னெடுத்துக் கொடுத்த இறையாண்மை, பொதுவுடமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம், குடியரசு ஆகியவற்றை பேணிப் பாதுகாக்கவும்- இந்திய அரசியலமைப்புச் சாசனம் வகுத்துக் கொடுத்த ஜனநாயகக் கடமைகளை உணர்ந்து பொறுப்புள்ள குடிமக்களாக நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடவும் இந்த நாளில் அனைவரும் உறுதியேற்போம்.

* கே.எஸ்.அழகிரி (தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்): மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளுவதன் மூலமே இந்தியாவில் ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க முடியும். அத்தகைய சூழல் உருவாக குடியரசு நாளில் உறுதியேற்றுக் கொள்வோம்.

* ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்): ஒட்டு மொத்த இந்தியர்கள் அனைவரும் நம்நாட்டின் கலாச்சாரம், ஆன்மிகம், நல்லிணக்கம் ஆகியவற்றை மனதில் பதிய வைத்து நாட்டை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்லவும், வளமான மாநிலங்கள், வலிமையான பாரதம் உருவாகவும் ஒன்றிணைவோம், செயல்படுவோம், வெற்றிபெறுவோம்.

* பாரிவேந்தர் (ஐஜேகே நிறுவனர்): இந்தியா முன்னெடுக்கும் துணிச்சலான நடவடிக்கைகளுக்கு துணை நின்று, உலக அரங்கில் இந்தியாவின் கம்பீரம் பட்டொளி வீசிப் பிரகாசிக்க, நாட்டின் 75வது குடியரசு தின நன்னாளில் உறுதியேற்போம்.

* சரத்குமார் (சமத்துவ மக்கள் கட்சி தலைவர்) : இனிய குடியரசு தினத்தில், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடி உயிர்களை தியாகம் செய்த உள்ளங்களுக்கு நன்றி செலுத்தி, இந்தியர் என்ற உணர்வுடன் சமத்துவ, சகோதரத்துவத்துவ எண்ணங்களுடன் தேசத்தை வல்லரசாக்க ஒன்றிணைவோம்.

* அதேபோல் ஜவாஹிருல்லா(மமக தலைவர்), நெல்லைமுபாரக்(எஸ்டிபிஐ கட்சி தலைவர்), சசிகலா, இந்திய ஹஜ் அஷோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர் கோகுல மக்கள் கட்சி நிறுவனர் எம்.வி.சேகர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Related posts

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும்.! இயல்பைவிட கூடுதல் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

ரத்த அழுத்தத்தை சீராக்கும் ‘பேஷன்’ பழம்: ஊட்டியில் கிலோ ரூ.400க்கு விற்பனை

குளச்சலில் மீனவர்கள் வலையில் சிக்கிய நெத்திலி மீன்கள்: விலை வீழ்ச்சியால் கவலை