தொடர் மழை காரணமாக நீலகிரியில் பசுந்தேயிலை மகசூல் அதிகரிப்பு: பசுமையாக காட்சியளிக்கும் தோட்டங்கள்


ஊட்டி: நீலகிரியில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதால், பசுந்தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சி அளிக்கின்றன. நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் முதல் 2 மாதங்கள் தென்மேற்கு பருவமழை பெய்யும். அதன்பின் அக்டோபர், நவம்பர் மாதங்களில் வடகிழக்கு பருவமழை பெய்யும். இது தவிர புயல் சின்னங்கள் ஏற்பட்டால், நீலகிரி மாவட்டத்திலும் கனமழை கொட்டி தீர்க்கும். இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை ஒரு சில நாட்கள் மட்டுமே பெய்தது. அதன்பின் மழை குறைந்தது. இதனால், நீர் பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

இந்த நிலையில் ‘மிக்ஜாம் புயல்’ காரணமாக கடந்த வாரம் நீலகிரி மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. குமரி கடலில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காரணமாக நீலகிரி மாவட்டத்திலும் கடந்த 3 நாட்களாக மழை பெய்து வந்தது. இதனால், பெரும்பாலான பகுதிகளில் உள்ள தேயிலை தோட்டங்கள் பச்சை பசேல் என காட்சியளிக்கின்றன. மேலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. பொதுவாக டிசம்பர் மாதங்களில் பனியின் காரணமாக தேயிலை மகசூல் குறையும். ஆனால், இம்முறை மாறாக டிசம்பர் மாதம் மழை பெய்து வருவதால், அனைத்து தேயிலை தோட்டங்களிலும் தேயிலை மகசூல் அதிகரித்துள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related posts

பிரதமர் மோடிக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பிறந்தநாள் வாழ்த்துக்கள்

திண்டிவனம் அருகே கிரிக்கெட் விளையாடியபோது மயங்கி விழுந்தவர் உயிரிழப்பு

ஆந்திராவில் இருந்து காரில் குட்கா பொருட்களை கடத்தி வந்த 3 பேர் கைது