பச்சை பூமியில் மஞ்சள் புன்னகை

பூக்களில் மிகப்பெரிதாகவும், அழகானதாகவும் இருக்கும் பூ என்றால் அது சாட்சாத் சூரியகாந்திதான். வட்ட வடிவில், மஞ்சள் நிறத்தில் காணப்படும் இந்தப் பூவின் அழகில் மயங்காதவர் யாரும் இருக்க முடியாது. இந்த அழகிய பூக்கள் பூத்துக் காட்சியளிக்கும் அழகிய ஊராக விளங்குகிறது தென்காசி மாவட்டத்தில் கடையநல்லூர் தாலுகாவில் உள்ள சாம்பவர் வடகரை. இந்த ஊரில் எங்கு திரும்பினாலும் சூரியகாந்தி மயம்தான். இந்த ஊரின் விவசாயப் பெருங்குடி மக்களுக்கு முதன்மைப் பயிரே சூரியகாந்தியும்தான். தென்காசியில் இருந்து இந்த ஊர் வழியே பயணிக்கும்போது பல கிலோ மீட்டர் அளவிற்கு சூரியகாந்தி வயல் பரந்து விரிந்திருக்கும். அந்தளவுக்கு சூரியகாந்தி சாகுபடி கோலோச்சும் இந்த ஊரில் பி.சாமி என்ற விவசாயியைச் சந்தித்தோம். “எனக்கு 60 வயதாகிறது. சின்ன வயதில் இருக்கும்போது அப்பாவோடு வயலுக்குச் செல்வேன். அப்போது அவருக்கு உதவியாக விவசாய வேலைகளில் ஈடுபடுவேன். அவருக்குப் பின் முழுநேர விவசாயியாக மாறிவிட்டேன். எங்கள் ஊர் களிமண் நிறைந்த ஊர். இந்த ஊரில் உள்ள பெரும்பாலானவர்களுக்கு விவசாயம்தான் முதன்மையான தொழில். சோளம், மிளகாய், சூரியகாந்தி என மாற்றி மாற்றி பயிர் செய்வோம். எனக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலம் இருக்கிறது. அதில் ஒரு ஏக்கரில் சோளமும், ஒரு ஏக்கரில் சூரியகாந்தியும் பயிரிட்டு இருக்கிறேன். தற்போது சூரியகாந்தி அறுவடைக்காக காத்திருக்கிறது’’ என பேச ஆரம்பித்த சாமி மேலும்
தொடர்கிறார்.

“ ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவதற்கு சராசரியாக 4 கிலோ வரை விதைகள் தேவைப்படும். சூரியகாந்தியை வருடத்திற்கு இரண்டு முறை பயிரிடலாம். அதாவது மார்கழி மாதக் கடைசியிலும், சித்திரை மாதத்திலும் இதைப் பயிரிடலாம். மழை இல்லாத காலங்களில் பயிரிட்டால்தான் சூரியகாந்தியில் நல்ல முறையில் மகசூல் பார்க்க முடியும். விதைப்பிற்கு முன்பு நிலத்தை நன்றாக 3 முறை உழ வேண்டும். கடைசி உழவின்போது அடி உரமாக தொழுஉரமோ அல்லது செயற்கை உரமோ கொடுத்தால் செடி நன்றாக வளரத் தொடங்கும். அதன்பின் பார் பிடித்து முக்கால் அடிக்கு ஒரு விதை என ஊன்ற வேண்டும். சூரியகாந்தி விதையை ஊன்றுவதற்கு தற்போது வரை இயந்திரம் கண்டுபிடிக்கவில்லை என்பதால் ஆட்களின் மூலம்தான் அதன் விதையை ஊன்ற வேண்டும். முக்கால் அடிக்கும் குறைவாக இடைவெளி விட்டு விதைத்தோமேயானால் பூவின் அளவு குறுகியதாக காணப்படும். இதனால் மகசூல் குறைய வாய்ப்பு ஏற்படும்.

விதை ஊன்றியவுடன் உயிர்த்தண்ணீர் விட வேண்டும். முதல் 8 நாட்களிலே விதை மண்ணை விட்டு வெளியே வந்து வளரத் தொடங்கிவிடும். விதைத்து 15 நாட்களுக்குள் இரண்டு முறையாவது களை எடுத்தல் அவசியம். சூரியகாந்திக்கு களை இருக்கக்கூடாது. அதேபோல தண்ணீரும் அதிகமாக விடக்கூடாது. முதல் மாதத்தில் இரண்டு முறை பாசனம் செய்தால் போதும். அதன்பிறகு 8 நாட்களுக்கு ஒருமுறை பாசனம் செய்யலாம். செடி வளர்ந்த பிறகு அதன் வளர்ச்சிக்காக இயற்கை முறையிலான உரமோ அல்லது செயற்கை உரமோ கொடுக்கலாம். 100 முதல் 110 நாட்களில் அறுவடை செய்யக்கூடிய இந்த பயிரில் 45வது நாளிலேயே பூவுக்கான மொட்டு வைக்கத் தொடங்கிவிடும். அதைத் தொடர்ந்து செடியை எந்தப் பூச்சி மற்றும் நோயும் தாக்காதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.

சூரியகாந்தியைப் பொறுத்தவரை உர மேலாண்மையிலும், நோய் மேலாண்மையிலும் கவனம் செலுத்த வேண்டும். எந்த நேரமும் பூச்சித்தொல்லையும், நோய்த்தொல்லையும் மகசூலை பாதிப்படையச் செய்யும். அறுவடைக்குத் தயாரான பிறகு பூவை மட்டும் அறுவடை செய்து இரண்டு நாட்களில் காய வைத்து அதன்பின் அதில் இருந்து இயந்திரத்தின் மூலம் விதைகளைப் பிரித்தெடுப்போம். சூரியகாந்தியை முறையாக கவனித்து வந்தால் ஒரு ஏக்கரில் இருந்து ஒரு அறுவடைக்கு 1 டன் அதாவது 1000 கிலோ விதைகள் வரை எடுக்கலாம். எனக்கு இந்த முறை ஒரு ஏக்கருக்கு 800 கிலோ விதைகள் கிடைத்தது. இதை மொத்தமாக வியாபாரிகளே வந்து எண்ணெய்க்கு வாங்கிச் செல்கிறார்கள். ஒரு கிலோ விதை சீசனைப் பொறுத்து 40 முதல் 60 ரூபாய் வரை விற்கப்படுகிறது. நிறைவான லாபம் பார்க்க முடியாவிட்டாலும் சீசனைப் பொறுத்து இதில் இரட்டிப்பு லாபம் எடுக்கலாம்’’ என்கிறார்.
தொடர்புக்கு:
சாமி – 99440 90378.

தென்காசி மாவட்டம் சாம்பவர் வடகரை மட்டுமின்றி அதனைச் சுற்றியுள்ள ஊர்களிலும் சூரியகாந்தி அதிகளவில் பயிரிடப்படுகிறது. இதனால் திரும்பும் இடமெல்லாம் சூரியகாந்தி வயல்களாகக் காட்சி அளிக்கின்றன.

சாம்பவர் வடகரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாலை வழியே பயணிப்போர், தங்கள் வாகங்களை நிறுத்திவிட்டு சூரியகாந்தி வயலில் செல்பி எடுத்து மகிழ்கிறார்கள். பலர் குடும்பத்துடன் வந்து புகைப்படம் எடுப்பதால் இந்தப்பகுதியின் வயல்வெளிகள் சுற்றுலாத்தளம் போல காட்சியளிக்கின்றன.

Related posts

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கடும் வெயில் காரணமாக அசாம் மாநிலம் குவாஹாத்தியில் உள்ள பள்ளிகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவிப்பு

மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் சடலம் வைக்கப்பட்ட ஃப்ரீசர் பாக்ஸில் இருந்து மின்சாரம் பாய்ந்து பெண் உயிரிழப்பு