Thursday, June 27, 2024
Home » பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு; பிரச்சார நாயகன் உதயநிதி ஸ்டாலின்: திமுக அறிக்கை!

பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு; பிரச்சார நாயகன் உதயநிதி ஸ்டாலின்: திமுக அறிக்கை!

by Francis

சென்னை: தமிழ்நாடு முழுவதும் 24 நாட்கள் – 8,465 கி.மீ. பயணித்து 1. 24 கோடி பொதுமக்களை நேரடியாகச் சந்தித்து புதிய யுக்திகளைக் கையாண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டதாக திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது; திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளைஞர் அணிச் செயலாளர் – இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரம்தான் அவரைத் தனித்தன்மை வாய்ந்த பிரச்சார நாயகனாக நாட்டிற்கு அடையாளம் காட்டியது. இதை பத்திரிகைகள் கூறுகின்றன. ஊடகங்களின் விவாதங்களிலும் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரம் ஒரு பேசும் பொருளாகியது.

உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்தின் போது கூடியிருந்த மக்கள் “Pindrop Silence” என்பார்களே, அந்த அமைதியுடன் நின்றபடியே கேட்டு ரசித்தனர். அவர் பேசி முடிக்கும் வரை கூட்டம் அமைதியாகக் கேட்டு கைதட்டி மகிழ்ந்தது. இறுதி வரை கலையாமல் அவருடைய பேச்சைக் கேட்டது. மற்றொரு முக்கியச் சிறப்பாக உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு எளிமையான தமிழில் அமைந்திருந்தது. அடுக்கு மொழிகள் இல்லை. ஆனால் அர்த்தம் செறிந்ததாக இருந்தது. மேம்போக்கான பேச்சாக இல்லை. ஆழமான சிந்தனையைத் தருவதாக அமைந்திருந்தது. அதனால் மக்கள் ரசித்தனர். கட்டுக்கோப்புடன் கேட்டு மகிழ்ந்தனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் போன்றே பேசிய உதயநிதி ஸ்டாலின்!

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களை நினைவுபடுத்துவதாகவே அமைந்தது.

கலைஞர் அவர்கள் எந்த ஊரில் பேசினாலும் – அந்த ஊரில் கழகம் வளர்த்த தலைவர்களின் பெயர்களைக் கூறி அவர்களின் சிறப்பை, தியாகத்தை எடுத்துக் கூறுவார். அந்த ஊரிலிருந்த சிறந்த தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைப்பார். அதைக் கேட்கும் தொண்டர்கள் நம் பெயரை நினைவில் வைத்து நம்மைப்பற்றிக் கூட்டத்தில் பேசுகிறாரே தலைவர் என்று எண்ணி எண்ணி மகிழ்வார்கள். தலைவர் கலைஞர் மீது மாறாத பாசத்துடன் கட்சி வளர்ச்சிப் பணிகளை முன்னிலும் வேகமாகத் தொடர்வார்கள். தி.மு.க. ஒரு இரும்புக்கோட்டையாகத் திகழ்வதற்கு முத்தமிழறிஞர் கலைஞரின் இந்தப் பேச்சுத்தன்மை ஒரு முக்கியக் காரணம்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பேச்சும் அதே பாணியில் அமைந்திருந்ததை இந்தப் பிரச்சாரத்தில் காண முடிந்தது. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் பேச்சுத் தமிழிலேயே பேசினார். அந்தந்தப் பகுதிகளின் கட்சித் தொண்டர்களைப் பெயர் சொல்லி அழைத்து உரிமையுடன் பேசினார். தொண்டர்களின் வீடுகளுக்கே சென்று அவர்களுடன் அமர்ந்து உணவு உட்கொண்டு மகிழ்ந்தார். தொண்டர்களும் தலைவர் கலைஞர் அவர்களைப் போலவே, தொண்டர்களுடன் நம் உதயா கலந்துரையாடி மகிழ்கிறார் என்று பெருமையுடன் பேசிக் கொண்டார்கள்.

மற்ற தலைவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் உள்ள மிகப்பெரிய வேறுபாடு!

திராவிட நாயகர் – கழகத் தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 39 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் சென்று பிரச்சாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரித்தார்.

முதலமைச்சர் அவர்கள் செல்லாத ஊர்களுக்கும், குக்கிராமங்களுக்கும் சென்று கடந்த 24 நாட்களாக, தமிழ்நாடு முழுவதும் 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 8,465 கிலோ மீட்டர் பயணம் செய்து, 122 பிரச்சார முனைகளில் 3,726 நிமிடங்கள் பேசியுள்ளார்.

ஒவ்வொரு பிரச்சார இடங்களிலும் இளைஞர்கள், பெண்கள், முதியோர்கள் எனச் சுமார் 1 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களைச் சந்தித்து நேரடிப் பிரச்சாரம் செய்துள்ளார். இந்தப் பிரச்சாரக் கூட்டங்களில் மட்டும் சுமார் 1 கோடியே 22 இலட்சத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களையும் தி.மு.க. தொண்டர்களையும் சந்தித்துள்ளார். இதில் அதிகமான பெண்கள் திரண்டு வந்து அவருடைய பேச்சினை ஆர்வத்துடன் கேட்டது குறிப்பிடத்தக்கது.

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் முன்னர் குறிப்பிட்டுள்ளது போல 24 நாட்களில், 8,465 கி.மீ. பயணம் செய்து, 38 மாவட்டங்களில், 122 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் அனல் பறக்கும் பிரச்சாரம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி 24 நாட்களில், 7,72/0 கி.மீ. பயணம் செய்து, 33 மாவட்டங்களில், 55 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட இடங்களில் மட்டுமே பிரச்சாரம் செய்துள்ளார். பா.ஜ.க.வின் அண்ணாமலை 20 நாட்களில் 3,264 கி.மீ.பயணம் செய்து, 18 மாவட்டங்களில் 25 சட்டமன்றத் தொகுதிகளுக்குட்பட்ட பகுதிகளில் மட்டுமே பிரச்சாரம் மேற்கொண்டுள்ளார்.

ஒற்றைச் செங்கல்!

உதயநிதி ஸ்டாலின் அவர்கள், கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலின் போது, ஒன்றிய அரசு எய்ம்ஸ் மருத்துவமனையை மதுரையில் கட்டாததை அனைவரும் அறியும் வகையில் பொதுமக்களிடம் ஒற்றைச் செங்கல் காண்பித்தது, பிரச்சாரம் செய்த விதம் மையமாக அமைந்தது. பொதுமக்களிடம் மிகுந்த எழுச்சியை ஏற்படுத்தியது. அந்த ஒற்றைச் செங்கல் பிரச்சாரம் அந்தத் தேர்தலில் ஒரு திருப்பு முனையாக அமைந்தது. 2021.ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கழகத்திற்கு பெரும் வெற்றியைத் தேடித் தந்தது.

ஒன்றிய அரசின் 29 பைசா!

அதேபோன்று இந்த 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்திற்காக நடைபெற்ற தேர்தலில் உதயநிதி ஸ்டாலின் ஒன்றிய அரசு GST வரி வசூலாக 1 ரூபாக்கு 29 பைசாதான் திருப்பித் தருகிறது என்றும், பா.ஜ.க. ஆளும் உத்திரப்பிரதேசம், பீகார், குஜராத் போன்ற மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்வதை எடுத்துக்கூறி, இனிமேல் மோடி அவர்களை மிஸ்டர் 29 பைசா என நாம் அழைக்க வேண்டும். நீங்கள் அழைப்பீர்களா? எனப் பொதுமக்களிடம் கேட்டுப் பிரச்சாரம் செய்தது மிகுந்த விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இப்படி தமிழ்நாடு வஞ்சிக்கப்பட்டதை நயமாகவும், நகைச்சுவையாகவும் எடுத்துரைத்த பாணி மிகப்பெரும் வரவேற்பையும் தி.மு.க.வுக்கு ஆதரவையும் பெற்றுத் தந்தது.

ஒன்றிய அரசில் இருந்து 29 பைசாதான் நமக்கு கிடைக்கிறது. அதிலே நம்முடைய தலைவர் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் எண்ணற்ற திட்டங்கள் தந்து தமிழ்நாட்டை வளர்ச்சிப் பாதையில் அழைத்துச் செல்கிறார். நம்முடைய கூட்டணி அரசில் இருந்து ஒருவர் ஒன்றியப் பிரதமராகும் போது, தமிழ்நாட்டிற்கு ஏராளமான நிதி உதவிகள் கிடைப்பதுடன், மக்களின் எண்ணற்ற நலத்திட்டங்களும் நிறைவேற்றப்படும்.

கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் பெற விண்ணப்பித்த 1.60 கோடி மகளிரில், தகுதியானவர்கள் என 1.16 கோடி மகளிர்க்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கிடைக்கிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 1.16 கோடி மகளிர்க்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம் கொடுக்கும்போது, மீதமுள்ள விடுபட்ட தகுதியுள்ள நபர்களுக்கும் நிச்சயம் வழங்குவார் என அவர் உறுதிபடத் தெரிவித்தது மிகுந்த நம்பிக்கையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.

சுட்டெரிக்கும் வெயிலிலும், வாகனத்தில் திறந்த வெளியில் நின்று கொண்டு எந்தவிதத் தடுப்புமின்றி பிரச்சாரம் மேற்கொண்டார்!

அந்தந்தப் பகுதிகளில் உள்ள பிரச்சினைகளை முதலில் தெரிந்து கொண்டு, அவர்களுக்குத் தேவையானவற்றை அறிந்து கொண்டு, தொடர்புடைய அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களை, மாவட்டப் பிரநிதிகள் ஆகியோரைக் கலந்தாலோசித்து, அந்தப் பிரச்சினைகளை தீர்த்துவைக்க முடியும் எனில், அதைப் பேசும் இடங்களில் எல்லாம் வாக்குறுதிகளாக அறிவித்து, கண்டிப்பாக அதைச் செயல்படுத்தித் தருவதாக உறுதி அளித்தது பொதுமக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது மட்டுமல்லாமல், அவர்களிடம் மிகப்பெரிய நம்பிக்கையையும் ஏற்படுத்தியது.

அவர் தங்குமிடங்களில் அங்குள்ள பணியாளர்களிடம் கலந்துரையாடி, எளிமையாகப் பழகி, தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்து, கேட்டறிந்து அவர்கள் எவ்வாறு பயன்பெறுகிறார்கள் என்பதையும் அறிந்து கொண்டார்.

திராவிட மாடல் அரசின் சாதனைகள்!

அடுத்து திராவிட மாடல் அரசின் கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம், புதுமைப் பெண் திட்டம், மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணத் திட்டம், நம்மைக் காக்கும் 48 திட்டம், நான் முதல்வன் திட்டம், மக்களுடன் முதல்வர் திட்டத்தின் மூலம் 30, 40 ஆண்டுகளில் தீராத பட்டா மாற்றம் முதலான திட்டங்களை எல்லாம் உடனுக்குடன் முடித்து வைத்தது – விவசாயிகளுக்கு புதிதாக 2 இலட்சம் இலவச மின் இணைப்புகளை வழங்கியது உட்பட பல்வேறு திட்டங்களை எடுத்துக் கூறியது. அதன் மூலம் திராவிட மாடல் அரசின் சாதனகளை பொதுமக்களிடம் எடுத்துரைத்துப் பிரச்சாரம் செய்தது மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. இவையெல்லாம் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் பிரச்சாரத்தில் காணப்பட்ட தனி யுக்திகள் ஆகும்.

உதயநிதி ஸ்டாலின் அவர்களைப் போல் அ.தி.மு.க. பழனிச்சாமியோ- பா.ஜ.க.வின் அண்ணாமலையோ எல்லா இடங்களுக்கும் சென்று பிரச்சாரம் செய்யவில்லை. சமூக ஊடகங்களில் மட்டுமே பிரச்சாரப் பணிகளை மேற்கொண்ட அ.தி.மு.க. பா.ஜ.க. வினரின் யுக்திகள் பொதுமக்களிடம் எந்தவித ஆதரவையும் பெறவில்லை.

உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நேரடி மக்கள் சந்திப்பும் பொதுமக்களிடம் யதார்த்தமாக பழகிய விதமும், அவர்களிடமே கேள்விகள் கேட்டுப் பதில்கள் தந்த விதமும் இந்தத் தேர்தலில் அவருக்கு மிகப்பெரிய புகழையும், தி.மு.க.வுக்கு மிகப்பெரிய ஆதரவையும் பெருக்கியது என்பது உண்மை.

எனவே, எல்லா வகையிலும் 2024 நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரப் பயணத்தை ஒரு வெற்றிப் பயணமாக நிறைவேற்றி – மக்கள் மனதில் -பத்திரிகை – ஊடகங்களில் பாராட்டுகளையும் – வாழ்த்துகளையும் பெற்றதில் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தனித்தன்மை வாய்ந்த பிரச்சார யுக்தி நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் – ஒரு புதிய மைல்கல்லாகும்.

தமிழ்நாட்டின் இந்த தேர்தல் வெற்றி வருங்காலத்தில் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்வோர்க்கு ஒரு சிறந்த வழிகாட்டும் மாடலாகத் திகழும் !

 

You may also like

Leave a Comment

20 + 9 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi