தனித்திறனை ஊக்கப்படுத்தினால் பெரும் மகிழ்ச்சி; பிடிக்காதவற்றை நாம் தவிர்ப்பதே குழந்தைகளுக்கு மனநிறைவு தரும்: உளவியல் நிபுணர்கள் சொல்கிறார்கள்

குழந்தைகள் என்றால் எல்ேலாருக்கும் பிடிக்கும். ஆனால், குழந்தைகளுக்கு யாரை பிடிக்கும் என்பது குறித்து யாரும் முழுமையாக அறிந்து கொள்ள விரும்புவதில்லை. குறிப்பாக 73சதவீதம் பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு தேவையான அனைத்தையும் செய்து கொடுக்கின்றனர். ஆனால், அது குழந்தைகளுக்கு முழுமையான மனநிறைவையும், மகிழ்ச்சியையும் தருகிறதா? என்றொரு கேள்வி எழுகிறது. இது குறித்து பல்வேறு ஆய்வுகளும் நடந்து வருகிறது. இது குறித்து குழந்தைகள் நலன் சார்ந்த உளவியல் அமைப்புகள் பல்வேறு தகவல்களை வெளியிட்டு வருகிறது. குழந்தைப்பருவம் என்றால், எந்த வயதிலிருந்து எந்த வயதுவரை என்பதற்கு பல வரைமுறைகள் உள்ளது. அனைத்து தேவைகளுக்கும் பெரியவர்களை சார்ந்து இருப்பவர்கள் தான், குழந்தைகள் என்று எளிமையாக சொல்லி விடலாம். தங்களை சார்ந்திருக்கும் குழந்தைகள், அவர்களது வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும். இதற்கான நல்ல வழிகாட்டுதல்களை வழங்க வேண்டியது பெற்றோரின் கடமையாக உள்ளது. ஆனால் குழந்தைகளை தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ப்பது தான், சிறந்த வளர்ப்பு என்று 80 சதவீதம் பெற்றோர் நினைக்கின்றனர்.

இதை மனதில் வைத்தே, பல்வேறு குழந்தை உரிமை மீறல்களில் ஈடுபடுகின்றனர் என்கின்றனர் ஆய்வாளர்கள். இது குறித்து குழந்தைகள் நலன் சார்ந்த உளவியல் நிபுணர்கள் கூறியதாவது: குழந்தைகளை பாசத்துடன் வளர்ப்பதற்கும், செல்லம் கொடுத்து வளர்ப்பதற்கும் உள்ள வேறுபாடு, பலருக்கு தெரியவில்லை. அதே போல், குழந்தைகளின் திறன்களை வளர்ப்பதற்கு பதில், தங்களது ஆசைகளை அவர்கள் மீது திணிக்கும் பெற்றோரே அதிகம் உள்ளனர். குழந்தைகளுக்கு பிடித்த எல்லாவற்றையும் செய்து கொடுப்பது என்பது, அனைத்து பெற்றோராலும் முடியாத காரியம். ஆனால், குழந்தைகளுக்கு பிடிக்காதவற்றை தவிர்ப்பது என்பது அனைவருக்கும் எளிதான செயல். வீட்டுக்கு வரும் உறவினர்கள் முன்பு ஏபிசிடி, ரைம்ஸ் சொல்ல வேண்டும் என்பது 87 சதவீதம் குழந்தைகளுக்கு பிடிக்காத செயலாக உள்ளது.

அதே போல், பள்ளி முடிந்து வீட்டிற்குள் நுழைந்தவுடன், பாடம் குறித்து கேட்கும் பெற்றோரை 84 சதவீத குழந்தைகளுக்கு பிடிக்கவில்லை. தங்களது சொந்த சகோதர, சகோதரிகளுடனும், மற்றவர்களுடனும் ஒப்பிடுவதை, 82 சதவீதம் குழந்தைகள் வெறுக்கின்றனர். அதேபோல், தாங்கள் செய்யும் தவறுகளை மற்றவர்கள் முன்பு கூறும் போது, அவர்கள் கூனிக்குறுகி நிற்கின்றனர். இது 92சதவீதம் குழந்தைகள் மனதில் கடும் அதிருப்தியான நிகழ்வாகவே பதிந்து விடுகிறது. சனி, ஞாயிறு விடுமுறையில் படிக்கச் சொல்வதையும், கோடை விடுமுறையில் வற்புறுத்தி இதர பயிற்சிகளுக்கு அனுப்புவதையும், 79சதவீதம் குழந்தைகள் விரும்பவில்லை. இதை தங்களுக்கு தரும் ஒரு தண்டனையாகவே குழந்தைகள் நினைக்கின்றனர். இதே போல், மதிப்ெபண்களை துரத்தும் பந்தயக்குதிரைகளாக இருப்பதையும் 85சதவீத குழந்தைகள் விரும்பவில்லை. இவை அனைத்திற்கும் மேலாக, தங்களது தனித்திறன்களை யாராவது கண்டறிந்து பாராட்டி ஊக்கப்படுத்தினால், 94சதவீதம் குழந்தைகள் பெரும் மகிழ்ச்சி அடைகின்றனர் என்பது ஆய்வுகளில் ெதரியவந்துள்ளது. இந்த வகையில், குழந்தைகளுக்கு பிடித்தவற்றை எல்லாம் வாங்கிக் கொடுக்காவிட்டாலும், அவர்களுக்கு பிடிக்காதவற்றை எல்லாம் நாம் தவிர்த்தாலே, அவர்கள் மனநிறைவோடும், மகிழ்ச்சியோடும் இருப்பார்கள் என்பதை ஆய்வு முடிவுகள் உணர்த்தியுள்ளது. இவ்வாறு உளவியல் நிபுணர்கள் கூறினர்.

 

Related posts

மாணவர் மீது தாக்குதல்: கல்லூரி மாணவர்கள் கைது

விராலிமலை முருகன் கோயிலில் 2 லிப்ட்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்

ஜம்மு-காஷ்மீரில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை