இலக்கணம், மொழி ரீதியாக பிழையின்றி இருக்கவேண்டும் கடிதத்தில் தமிழை தவறாக எழுதிய அதிகாரிக்கு பாடம் எடுத்த நீதிபதி: குச்சி ‘ர’ குண்டு ‘ற’ உதாரணம் கூறி அறிவுரை

மதுரை: அலுவலக தகவல் தொடர்புகள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழை இல்லாமல் இருக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை கூறியுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தை சேர்ந்த அன்வர் அலி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘எனது மின் இணைப்பிற்கான மின் மீட்டர் பழுதாக உள்ளதால், மின் கணக்கீட்டில் தவறு ஏற்படுகிறது. எனவே, பழுதான மின் மீட்டரை மாற்றி, தவறான மின் கணக்கீட்டை சரி செய்யுமாறு உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு: மண்டபம் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மனுதாரருக்கு நிலுவை மின் கட்டணம் தொடர்பாக 24.3.2013ல் அனுப்பிய கடிதத்தில், கடைசி வார்த்தையாக முறைகேடு ‘கண்டறியப்பட்டுள்ளது’ என்பதற்கு பதிலாக ‘கண்டரியப்பட்டுள்ளது’ என உள்ளது. அந்த கடிதத்தை அனுப்பிய பெண் அதிகாரியை அழைத்து விசாரித்தபோது அதிர்ச்சி மேலும் அதிகமானது. அந்த அதிகாரியால் கடிதத்தில் உள்ள தவறை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த தவறை சுட்டிக்காட்டிய போதும் அவர் அதை ஏற்கவில்லை. அந்த பெண் அதிகாரியின் தமிழாசிரியர் அவருக்கு ‘ர’ மற்றும் ‘ற’ எழுத்துகளின் வித்தியாசத்தை கற்பிக்கவில்லை.

எனது சொந்த மாவட்டம் தஞ்சாவூர். எனது தொடக்கக்கல்வி ஆசிரியர் ‘ர’ என்பது சின்ன ‘ர’, ‘ற’ என்பது பெரிய ‘ற’ என எனக்கு கற்பித்துள்ளார். நெல்லை பகுதியில் இதனை குச்சி ‘ர’, குண்டு ‘ற’ என்பார்கள். அலுவலக தகவல் தொடர்புகள் இலக்கண ரீதியாகவும், மொழி ரீதியாகவும் பிழை இல்லாமல் இருக்க வேண்டும். ஆங்கில கலப்பு இல்லாமல் சுத்தமான தமிழில் பேச முடியாது. அதே நேரத்தில் எழுதும்போது சுத்தமாகவும், பிழையின்றியும் எழுத வேண்டும். உயர் நீதிமன்றத்தின் சான்றளிக்கப்பட்ட உத்தரவுகளில் கூட எழுத்துப்பிழைகள், இலக்கண பிழைகள் உள்ளன. இந்த வழக்கை பொறுத்தவரை மனுதாரரின் மனு மீது உதவி செயற்பொறியாளர் 4 வாரத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு உத்தரவிட்டுள்ளார்.

Related posts

பவுடர் பால் குடித்த 2 மாத குழந்தை உயிரிழப்பு!!

வீடு வாடகைக்கு கேட்பதுபோல் நடித்து தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்ற பெண் கைது!

வெள்ளம் வரும்போது பாலம் உடைந்தால் சிறைக்கு போக வேண்டி வரும் : அமைச்சர் துரைமுருகன்