தரம் உயர்த்தப்பட்டு 8 ஆண்டு ஆகியும் இடநெருக்கடியில் சமுதாய கூடத்தில் இயங்கும் அரசு பள்ளி

*மாணவர்களின் கல்வி பாதிப்பு

*புதிய கட்டிடம் கட்ட வலியுறுத்தல்

சிவகங்கை : உயர்நிலை பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டும் இடநெருக்கடியில் சமுதாய கூடத்தில் பள்ளி தொடர்ந்து செயல்பட்டு வருவதால், மாணவர்கள் சிரமம் அடைகின்றனர். இதனால் கூடுதல் வகுப்பறைகள் கட்டித்தர கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.சிவகங்கை அருகே முடிகண்ட ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு 30 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த நடுநிலைப் பள்ளியை, கடந்த 8 ஆண்டுக்கு முன் உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால் தரம் உயர்த்தப்பட்ட அறிவிப்போடு நின்ற இந்த பள்ளி தற்போது சமுதாய கூடத்தில் இடநெருக்கடியில் செயல்பட்டு வருகிறது.

இந்த பள்ளிக்கு முடிகண்டம், பாசங்கரை, உடையநாதபுரம் ஆகிய கிராமங்களிலிருந்து மாணவர்கள் படித்து வருகின்றனர். தரம் உயர்த்தப்பட்ட உயர்நிலைப் பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை 155 மாணவர்கள் படித்து வருகின்றனர். 8 ஆண்டுகளுக்கு முன் கிராமத்தில் இருந்து இடம் தேர்வு செய்யப்பட்டு கொடுத்தும் மாவட்ட கல்வி அதிகாரிகள் மாவட்ட நிர்வாகம் ஆகியவை மெத்தனமாக செயல்பட்டு வருகிறது.

பள்ளி சமுதாய கூடத்தில் பள்ளி செயல்படுவதால் சமுதாய கூடத்தில் நடக்கும் திருமண விழா, காதணி விழா போன்ற விழாக் காலங்களில் மாணவர்கள் கல்வி பாதித்து வருகின்றது. அவ்வாறு நடைபெறும் விழாக்கள் அன்று பள்ளி மாணவர்கள் மரத்தடியில் படிப்பதும், மழை வந்தால் விடுமுறை விட்டு வீட்டுக்கு அனுப்புவதும் தொடர்கதையாகி வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாகம் உடனடியாக கிராமத்தினர் தேர்வு செய்து கொடுத்த இடத்தில் புதிய கட்டிடம் கட்டி உயர்நிலைப் பள்ளியாக செயல்பட நடவடிக்கை எடுக்க என கிராமத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஊராட்சி தலைவர் சத்தியமூர்த்தி கூறியதாவது: ‘‘கடந்த 40 வருடங்களுக்கு மேலாக நடுநிலைப் பள்ளியாக செயல்பட்டு வந்தது. கடந்த 2015-16ம் ஆண்டு அரசு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. தரம் உயர்த்தப்பட்டு இதுநாள் வரை கட்டிட வசதி செய்து தரப்படவில்லை. நான் ஊராட்சி மன்ற தலைவராக பொறுப்பேற்றதற்கு பிறகு பலமுறை மனு கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

இந்த வருடம் நபார்டு திட்டத்தின் மூலம் நான்கு வகுப்பறையில் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ஆனால் நான்கு வகுப்பறை காணவில்லை. இந்த ஆண்டு ஆறாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்புகளில் மொத்தம் 155 மாணவர்களுக்கு மேல் படிக்கின்றனர். போதிய வசதி இல்லாத காரணத்தால் பழைய கட்டிடத்தில் செயல்படுத்த முடியாத சூழ்நிலை உள்ளது. கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள், ஆய்வகங்கள் மற்றும் கழிவறைகள் வேண்டும். அரசு அரசு உயர்நிலைப் பள்ளிக்கு கட்டிட வசதி செய்து தந்து மாணவர்கள் சிரமம் இன்றி படிப்பதற்கு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்’’ என்றார்.

பாண்டி கூறியதாவது:‘‘முடிகண்டம் நடுநிலைப்பள்ளி 8 ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. கிராமத்தில் இருந்து நிலம் கையகப்படுத்தி பள்ளிக் கல்வித் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் இதுவரை கட்டிடங்கள் கட்டி கொடுக்க வில்லை. தரம் உயர்த்த பட்டதில் இருந்து பத்தாம் வகுப்பில் 100% தேர்ச்சி பெற்று வருகின்றனர். பத்தாம் வகுப்பில் அதிகபட்சமாக 450க்கும் மேல் மதிப்பென் பெற்றுள்ளனர். கூடுதல் வகுப்பறை கட்டிடங்கள் இருந்தால் ஆசிரியர்களுக்கும் சொல்லிக் கொடுப்பதற்கும் மாணவர்கள் படிப்பதற்கு வசதியாக இருக்கும்’’ என்றார்.

ஜானகி கூறியதாவது: ‘‘நான் படிக்கின்ற போது 1 முதல் 5ம் வகுப்பு வரை இருந்தது. பின்பு எட்டாம் வகுப்பு வரை தரம் உயர்த்தப்பட்டது. 2015-16 ஆண்டில் பத்தாம் வகுப்பு ஆக தரம் உயர்த்தப்பட்ட பிறகு கட்டிட வசதி இதுவரை செய்து தரப்பட வில்லை. மழை, வெயில் நேரங்களில் மாணவர்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். சமுதாயக் கூடத்தில் படித்து வருவதால் அங்கு விழாக்கள் நடத்துவதால் மாணவர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனால் மாணவர்களின் எண்ணிக்கை விகிதம் குறைந்து வருகிறது. இதனால் கட்டிட வசதி செய்து தர வேண்டும்’’ என்றார்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்