அரசுவேலை வாங்கி தருவதாக கூறி ரூ.7.40 லட்சம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது; கூட்டாளிக்கு வலை

புழல்: புழல் அருகே அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, பணமோசடியில் ஈடுபட்ட பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். சென்னை புழல் அருகே புத்தாகரம், சாரதி நகரைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (42). இவர், ஒரு வழக்கறிஞரிடம் உதவியாளராக வேலைபார்த்து வருகிறார். இவரும், இவரது தொழில்முறை நண்பர்களான புதுக்கோட்டையை சேர்ந்த ரியல் எஸ்டேட் அதிபர் லயோலா ரோஜாரியா சர்ச்சில் (31), அந்தோணிராஜ் ஆகிய 3 பேரும் சேர்ந்து, ஒரே மாதத்தில் அரசு வேலை வாங்கி தருவதாக சிலரை ஏமாற்றி பணம் வசூலித்துள்ளனர்.

அதன்படி, கடந்த ஓராண்டுக்கு முன் காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரேம்குமார் (28) என்ற பட்டதாரி வாலிபரிடம் இவர்கள் ரூ.7.40 லட்சம் வாங்கியுள்ளனர். இதில் பிரேம்குமாருக்கு கிராம நிர்வாக அலுவலர் பணியும், அவரது சகோதரிக்கு சுகாதாரத்துறை மேற்பார்வையாளர் பணியும் வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். பின்னர், அவர்கள் இருவருக்கும் அரசு வேலை வாங்கித் தராமல் மகேஸ்வரி உள்பட 3 பேரும் அலைக்கழித்து வந்துள்ளனர். இதனால், சந்தேகமடைந்த பிரேம்குமார், ‘‘தங்களுக்கு அரசு வேலை வேண்டாம். பணத்தை திருப்பிக் கொடுங்கள்’’ என்று கூறவே, அவருக்கு 3 பேரும் சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, சென்னை காவல் ஆணையரகத்தில் கடந்த 19ம் தேதி பிரேம்குமார் புகார் அளித்தார். அதன்பேரில், புழல் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், காஞ்சிபுரத்தை சேர்ந்த பிரேம்குமாரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி, மகேஸ்வரி, லயோலா ரோஜாரியா சர்ச்சில், அந்தோணிராஜ் ஆகிய 3 பேரும் ரூ.7.40 லட்சம் பணமோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மகேஸ்வரி, லயோலா ரோஜாரிய சர்ச்சில் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்து, திருவொற்றியூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவான அந்தோணிராஜை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Related posts

பயந்து ஒதுங்கியது அதிமுக ஜெயலலிதா படத்தை பாமக பயன்படுத்த உரிமையுள்ளது: டிடிவி பேச்சு

செல்போனை கடலில் வீசிய தகராறில் மீனவரை செங்கலால் தாக்கி உயிருடன் புதைத்த கும்பல்: சிறுவன் கைது 4 பேருக்கு வலை

இங்கிலாந்து பொது தேர்தல்: விறுவிறுப்பான வாக்குப்பதிவு: ஆட்சியை தக்கவைப்பாரா ரிஷி சுனக்? இன்று காலை முடிவு தெரியும்