ரூ.20,000 லஞ்சம் வாங்கி கைது அரசு மருத்துவமனையில் இருந்து துணை தாசில்தார் தப்பி ஓட்டம்: பெரம்பலூரில் பரபரப்பு

பெரம்பலூர்: லஞ்சம் வாங்கி கைதான துணை தாசில்தார் நெஞ்சு வலிப்பதாக கூறியதால் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து திடீரென அவர் தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகில் புதிதாக திருமண மஹால் கட்டப்பட்டுள்ளது. இந்த திருமண மண்டபத்திற்கு தடையின்மை சான்று பெறுவதற்காக மண்டப மேலாளரான அம்மாபாளையத்தை சேர்ந்த துரைராஜ், பெரம்பலூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார்.

விண்ணப்ப மனுவை விசாரித்த துணை தாசில்தார் பழனியப்பன்(49) தடையின்மை சான்று வழங்குவதற்கு ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து துரைராஜ், பெரம்பலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் ஆலோசனையின்படி நேற்று மாலை பெரம்பலூர் தாலுகா அலுவலகத்திற்கு சென்ற துரைராஜ், அங்கிருந்த துணை தாசில்தார் பழனியப்பன், விஏஓ நல்லுசாமியிடம்(42) ரூ.20 ஆயிரம் லஞ்ச பணத்தை கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி ஹேமசித்ரா தலைமையிலான போலீசார் இருவரையும் கையும், களவுமாக கைது செய்தனர்.

அப்போது துணை தாசில்தார் பழனியப்பன் திடீரென தனக்கு மயக்கம் வருகிறது, நெஞ்சு வலிக்கிறது என போலீசாரிடம் கூறினார். இதனைத்தொடர்ந்து போலீசார் அவரை பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் நேற்றிரவு 8 மணிக்கு சிகிச்சைக்காக ஒப்படைத்து விட்டு வந்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இன்று அதிகாலை 3 மணி அளவில் சிகிச்சையிலிருந்த பழனியப்பனை திடீரென காணவில்லை.

இதனால் மருத்துவர்கள், செவிலியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மருத்துவமனை முழுவதும் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் தப்பி ஓடிய துணை தாசில்தார் பழனியப்பனை தேடி நாரணமங்கலத்தில் உள்ள அவரது மாமனார் வீட்டுக்கு இன்று ெசன்றனர். ஆனால் அங்கு அவர் இல்லை. அவரை தொடர்ந்து தேடி வருகின்றனர். முன்னதாக விஏஓ நல்லுசாமியை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் போலீசார் அடைத்தனர்.

Related posts

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; விழுப்புரம் மாவட்டத்தில் 4 நாட்கள் டாஸ்மாக் கடைகள் மூடல்!

காற்று மாசுவால் ஆண்டுதோறும் 10 நகரங்களில் 30 ஆயிரம் பேர் பலி: டெல்லியில் 12,000 பேர் உயிரிழப்பு

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த தடையில்லை: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு