அரசு கல்லூரியில் கலெக்டர் திடீர் ஆய்வு ஆப்சென்ட் ஆன பேராசிரியர்கள் நேரில் வந்து விளக்கமளிக்க உத்தரவு

காரைக்கால் : காரைக்கால் அரசு கல்லூரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர், ஆப்சென்ட் ஆன பேராசிரியர்கள் நேரில் வந்து விளக்கமளிக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
காரைக்கால் அடுத்த செருமாவிலங்கையில் பெருந்தலைவர் காமராஜர் பொறியியல் கல்லூரி அமைந்துள்ளது. இக்கல்லூரியல் காரைக்கால் மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் நேற்று காலை திடீரென ஆய்வு மேற்கொண்டார்.

கல்லூரியில் உள்ள வகுப்பறைகள் மற்றும் ஆய்வகங்களில் ஆய்வு செய்த கலெக்டர் குலோத்துங்கன் தொடர்ந்து கல்லூரி நிர்வாகம் அலுவலகத்திற்கு சென்று பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் வருகை பதிவேட்டை ஆய்வு செய்தார்.கல்லூரியில் தற்போது மாணவர்களுக்கு தேர்வுகள் நடைபெறும் நேரத்தில் 60 சதவீத ஆசிரியர்கள் பணிக்கு வராததை மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் கண்டறிந்தார். மேலும் கடைநிலை பணியாளர்களும் சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து மாவட்ட கலெக்டர் குலோத்துங்கன் சரியான நேரத்திற்கு பணிக்கு வராமல் இருந்த கடைநிலை பணியாளர்கள் அனைவருக்கும் விளக்கம் கேட்டு கடிதம் அளிக்கம்படி நிர்வாகத்தை கேட்டுக் கொண்டார்.

மேலும் பணிக்கு வராமல் இருந்த பேராசிரியர்கள் மற்றும் கல்லூரி முதல்வர் உட்பட அதிகாரிகள் அனைவரும் கலெக்டர் அலுவலகம் நேரில் வந்து விளக்கம் அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.பின்னர் ஆட்சியர் குலோத்துங்கன் அங்கு நடைபெறும் பல்கலைக்கழக தேர்வினையும் பார்வையிட்டார். அதனை தொடர்ந்து அருகில் அமைந்துள்ள பண்டித ஜவஹர்லால் நேரு வேளாண் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் குலோத்துங்கன் மாணவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும் அங்கு 650 மாணவ, மாணவிகள் தங்கி உணவருந்தும் சமையல் கூடத்தை ஆய்வு மேற்கொண்டு, சமையல் கூட நிர்வாகியிடம் மாணவர்கள் சாப்பிடும் உணவை சுத்தமாக அளிக்கும்படியும் குடி தண்ணீர் போன்றவை சுத்தமாக பராமரிக்கும் படியும், உணவருந்தும் அறை தங்கும் அறை ஆகியவற்றை சுத்தமாக வைத்துக் கொள்ளும்படியும் ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

Related posts

மதுரை திருமங்கலத்தில் கடன் தொல்லை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தற்கொலை முயற்சி

சதுரகிரி மலைக் கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்

ஆயிரமாண்டு மடமைகளைக் களையெடுத்த அறிவியக்கம் திமுக : முதல்வர் மு.க.ஸ்டாலின்