நில எடுப்பு விவகாரத்தில் என்எல்சி நிர்வாகத்திடம் அரசு மீண்டும் பேச்சுவார்த்தை; தலைமை செயலர் இறையன்பு உறுதி

சென்னை: கடலூரில் என்.எல்.சி. நிர்வாகம் நிலம் எடுப்பு விவகாரம் தொடர்பாக அரசு மீண்டும் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாக தலைமைச்செயலர் இறையன்பு உறுதி அளித்ததாக எம்எல்ஏக்கள் தெரிவித்தனர். நெய்வேலியில் என்எல்சி நிறுவனம் இயங்கி வருகிறது. தற்போதைய சூழலில் 40க்கும் மேற்பட்ட கிராமங்களில் புதிதாக 25 ஆயிரம் ஏக்கர் விளை நிலம் கையகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதனையடுத்து இந்த நில எடுப்பு விவகாரத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வளையமாதேவி, கீழ்வளையமாதேவி, கரிவெட்டி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். மேலும், சமீபத்தில் நடந்த சட்டப்பேரவை கூட்டத்தில் இந்த விவகாரம் தொடர்பாக கவன ஈர்ப்பு தீர்மானமும் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், சென்னை தலைமைச்செயலகத்தில் தலைமைச்செயலர் இறையன்பு தலைமையில் பேச்சுவார்த்தை நடந்தது. அமைச்சர்கள் குழுவான எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு மற்றும் சி.வி.கணேசன் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பாமக தலைவர் அன்புமணி, அதிமுக சட்டமன்ற உறுப்பினர் அருண்மொழி தேவன், எம்எல்ஏ வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதுகுறித்து அதிமுக எம்எல்ஏ அருண்மொழித்தேவன் நிருபர்களிடம் கூறியதாவது: என்.எல்.சி நில எடுப்பு விவகாரம் தொடர்பாக நடந்த இன்றைய கூட்டத்தில் அதிமுக சார்பில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கலந்துகொண்டேன். தற்போது, நில எடுப்பு சம்பந்தமாக தொடர்ந்து மக்கள் போராடிக் கொண்டிருக்க கூடிய பகுதிகள் எனது சட்டமன்ற தொகுதியில்தான் வருகின்றன. நில எடுப்பு பிரச்னை விவகாரத்தில் 100% என்எல்சி மீது தான் பிரச்னை உள்ளது. கடந்த 1989க்கு பின்பு நிலம், வீடு கொடுத்தவர்களுக்கு இதுவரை ஒரு வேலை கூட என்.எல்.சி வழங்கவில்லை. சி.எஸ்.ஆர் நிதியை பெயரளவிற்கு கூட செலவழிப்பதில்லை. என்.எல்.சி.க்காக இடம் கொடுத்தவர்களின் வாய்ப்பு மறுக்கப்படுகிறது. மேலும், கூட்டத்தில் அதிகாரிகள் அளவில் கலந்து பேசி விவசாயிகளின் பிரச்னைக்கு முடிவு காண்பதற்கு என்னென்ன செய்ய வேண்டுமென முடிவெடுத்து அடுத்த கூட்டத்தை நடத்தலாம் என தலைமைச் செயலாளர் தெரிவித்துள்ளார்.

பண்ருட்டி எம்எல்ஏ வேல்முருகன் கூறியதாவது: என்.எல்.சி நிர்வாகத்திடம் நிலம் கொடுத்த மக்களுக்கு அண்ணனுக்கு ஒரு தொகையும், தம்பிக்கு ஒரு தொகையும், கடந்த 2007ம் ஆண்டுக்கு முன்பாக ஒரு தொகை, அதற்கு பின்பாக ஒரு தொகை, தற்போது ஒரு தொகை என்று எப்படியாவது நிலத்தை கையகப்படுத்த வேண்டும் என்ற நோக்கோடு உள்ளூரில் உள்ள சில புரோக்கர்களை கொண்டு நிலத்தை கையகப்படுத்த என்.எல்.சி முயற்சி செய்கிறது. இதற்கு அனுமதிக்க கூடாது என கூட்டத்தில் தெரிவித்துள்ளோம். மேலும், என்எல்சி நிர்வாகத்துடன் திரும்பவும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு நல்ல பதிலை சொல்வதாக தலைமைச் செயலாளர் உறுதியளித்துள்ளார்.

Related posts

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு

அனைத்து தரப்பு மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவையான சேவைகளை கூட்டுறவு அமைப்புகள் சிறப்பாக செயல்படுத்தி வருகிறது: அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் அறிவிப்பு

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு