கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.750 கோடி மானியத்தை அரசு விடுவிக்க வேண்டும்: தொழிற்சங்க நிர்வாகிகள் கோரிக்கை

சென்னை: ‘‘தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு துறை சங்கங்களுக்கு வழங்க வேண்டிய ரூ.750 மானியத்தொகையை உடனே விடுவிக்க வேண்டும்’’ என்று அமைச்சர் பெரியகருப்பனிடம் தொழிற்சங்க நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர். கூட்டுறவு துறை அமைச்சர் பெரியகருப்பனை கூட்டுறவு துறையில் உள்ள அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் நேற்று சென்னை, தலைமை செயலகத்தில் சந்தித்து அளித்த மனுவில் கூறி இருப்பதாவது: சென்னை டியுசிஎஸ் நிறுவனத்தில் 546 பணியாளர்களுடன் ரேஷன் கடைகள், மளிகை பிரிவு, மருந்தகங்கள், காய்கறி, பெட்ரோல் மற்றும் எரிவாயு பிரிவு இயங்கி வருகிறது.

இதில் ரேஷன் கடைகளுக்கு உண்டான கட்டுப்பாட்டு பொருள்களான அரிசி, துவரம் பருப்பு, கோதுமை உள்ளிட்ட பொருட்களை கிடங்குகளில் இருந்து ரேஷன் கடைகளுக்கு எடுத்து வரும் வாகனங்களுக்கான வாடகை கட்டணம் மற்றும் ரேஷன் கடை இயக்குவதற்கான வாடகை கட்டணம் மற்றும் கட்டிட வாடகை, மின்சார கட்டணம், தொழிலாளர்களுக்கான ஊதியம் உள்ளிட்ட செலவின தொகையை டியுசிஎஸ் நிறுவனம் தனது விற்பனை நிதியில் இருந்து செலவழித்து அதன்பின் அரசிடம் இருந்து மானியத்தொகையாக பெற்று வருகிறது.

அந்த வகையில் 2019-2020ம் ஆண்டிற்கு பிறகு வழங்க வேண்டிய மானியத்தொகை இன்னும் அரசிடம் இருந்து விடுவிக்கப்படவில்லை. இதனால் நிறுவனத்தில் நிதி நெருக்கடி ஏற்படுவதால் பணியாளர்களுக்கு உண்டான நலன்கள் வழங்குவதிலும், விற்பனைக்கு உண்டான பொருட்கள் கொள்முதல் செய்வதிலும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதேபோன்று தமிழகத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களுக்கு தமிழக அரசு மானியத்தொகை விடுக்காமல் உள்ளது. இதனை விரைந்து நிவர்த்தி செய்திட 2020ம் ஆண்டு முதல் 2023ம் ஆண்டு வரை டியுசிஎஸ்-சுக்கு வழங்க வேண்டிய மானிய தொகை மற்றும் ஒட்டுமொத்த கூட்டுறவு நிறுவனங்களுக்கான மானியத்தொகை ரூ.750 கோடியை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளனர்.

Related posts

பாரிஸ் ஒலிம்பிக்கில் பங்கேற்கும் இந்திய தடகள வீரர்கள் 27 பேர் கொண்ட பட்டியல் அறிவிப்பு

மேட்டுப்பாளையம் – கோவை இடையே இரட்டை இருப்புப் பாதை: ரயில்வே அமைச்சரிடம் ஒன்றிய இணையமைச்சர் எல் முருகன் கோரிக்கை

சிவகங்கை அருகே சகோதரர்கள் இருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் நீதிமன்றத்தில் சரண்