அரசு, தனியார் தூய்மைப் பணியாளர்கள் விபரங்கள் பதிய இன்றே கடைசி நாள்

பூந்தமல்லி: திருவேற்காடு நகராட்சியில் அரசு மற்றும் தனியார் தூய்மைப் பணியாளர்கள் விபரங்கள் பதிவு செய்ய இன்று கடைசி நாள் என நகராட்சி ஆணையர் விடுத்து அறிக்கையில் கூறியுள்ளார். திருவேற்காடு நகராட்சி ஆணையர் கணேசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக அரசு தூய்மை பணியாளர் மேம்பாடு திட்டத்தை நகராட்சிகளில் செயல்படுத்தவுள்ளது. தூய்மை பணியாளருக்கு திறன் பயிற்சி, குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி, மாற்று தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இணைப்பதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்படவுள்ளது. இதனால் அந்தந்த உள்ளாட்சி நிறுவனங்கள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுநீர், மழைநீர் வடிகால், கழிவுநீர் வாகனம், வீடுகளில் உள்ள கழிப்பறைகளை சுத்தம் செய்யும் ஊழியர்கள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களின் செயல்பாடு மற்றும் பராமரிப்பு பணியாற்றும் ஊழியர்கள், பொது மற்றும் சமூக கழிப்பறைகளை பராமரிப்பவர்கள் உள்ளிட்டோர் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டன.

அதன் பேரில் கடந்த 2 மாதங்களாக இப்பணி திருவேற்காடு நகராட்சியில் தொடர்ந்து நடைபெற்றது வருகிறது. நகராட்சி நிர்வாகங்களில் பணிபுரியும் நிரந்தர, தற்காலிக பணியாளர்கள் தவிர எரிபொருள் நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிபுரியும் முறைசாரா தொழிலாளர்கள் உள்பட தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்களும் தங்கள் விவரங்களை பதிவு செய்து கொள்ள இன்று சனிக்கிழமை கடைசி நாள் என அவர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.

Related posts

கர்நாடகாவில் கொலை குற்றவாளி கைது

மாடிக்கு கம்பியை எடுத்து சென்றபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி

ஏற்காட்டில் குற்றச்சம்பவங்களை தடுக்க டிஎஸ்பி தலைமையில் போலீசார் வாகன தணிக்கை