வண்டலூர் உயிரியல் பூங்காவில் இறந்த பெண் பணியாளர் குடும்பத்திற்குஅரசு வேலை வழங்க வேண்டும்: பூங்கா இயக்குனருக்கு மனு

கூடுவாஞ்சேரி: வண்டலூர் உயிரியல் பூங்காவில் இருந்து தப்பி சென்ற 2 அனுமன் குரங்குகளால் அதிர்ச்சியில் மாரடைப்பால் உயிரிழந்த பெண் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரண நிதியும், அரசு வேலையும் வழங்க கோரி பூங்கா இயக்குனரிடம் உயிரிழந்த பெண் குடும்பத்தினர் மனு கொடுத்தனர். வண்டலூரில் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு, கடந்த ஜனவரி மாதம் 28ம் தேதி கான்பூரில் இருந்து வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு கொண்டு வரப்பட்ட 10 அனுமன் குரங்குகளில் 2 குரங்குகள் தப்பித்து சென்றன.

அப்போது, பூங்காவில் தினக்கூலி பணியாளராக கடந்த 17 வருடமாக பணி புரிந்து வந்த கூடுவாஞ்சேரியை மகாலட்சுமி நகரை சேர்ந்த சுகுணா 13ம் தேதி அன்று அனுமன் குரங்குகளுக்கு தீனி வைக்கும்போது 2 அனுமன் குரங்குகள் கூண்டில் இருந்து தப்பி சென்றன. இதுகுறித்து அதிகாரிகள் விசாரித்ததால் மன உளைச்சலில் இருந்தார். மறுநாள் 14ம் தேதி பணியில் இருந்தபோது மன உளைச்சலால் மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக கூறப்படுகிறது.

இதனை அடுத்து சுகுணா குடும்பத்திற்கு அரசு வேலையும், இழப்பீடாக ரூ.25 லட்சம் நிதியுதவியும் வழங்க கோரி அண்ணா உயிரியல் பூங்கா தொழிலாளர் சங்கத்தின் பொதுச்செயலாளர் இரணியப்பன் தலைமையில் சுகுணாவின் மகள்கள் சுமதி, திவ்யா ஆகியோர் நேற்று முன்தினம் மனு கொடுக்க உயிரியல் பூங்கா அலுவலகம் வந்தனர். பின்னர், இயக்குனரின் நேர்முக உதவியாளரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். அப்போது அதிகாரிகள் இதுகுறித்து அரசுக்கு அனுப்பி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

* பணி நிரந்தரம் செய்ய கோரி வலியுறுத்தல்
வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக தற்காலிக ஊழியர்களாக பணியாற்றி வரும் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி உழைப்போர் உரிமை இயக்கம் உயிரியல் பூங்கா கிளை தலைவர் கோபால் தலைமையில் வனத்துறை தலைவரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, அரசு பணியாளர் சங்கத்தின் செயலாளர் கிருஷ்ணன் மற்றும் சங்க நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Related posts

சர்ச்சை சொற்பொழிவாளர் மகாவிஷ்ணு மீது மேலும் ஒரு வழக்குப்பதிவு

தருமபுரி மாவட்டத்தில் சிப்காட் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது: தமிழ்நாடு அரசு தகவல்

ராமநாதபுரம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி 5 பேர் உயிரிழப்பு