கிளாம்பாக்கத்தில் இருந்து அரசு விரைவுப்பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படும்: கோயம்பேடுக்கு 5 நிமிடத்திற்கு ஒரு மாநகர பஸ்; அமைச்சர் சிவசங்கர் பேட்டி

சென்னை: கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய திறப்பு விழாவிற்கு பிறகு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் நிருபர்களிடம் கூறியதாவது: அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் முழுமையாக நாளை (இன்று) முதல் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திலிருந்து இயங்கும். சாதாரண நாட்களில் 300 புறப்பாடுகளும், வார இறுதி நாட்களில் 360 புறப்பாடுகள் கொண்ட அரசு விரைவு பேருந்துகள் அனைத்தும் கிளாம்பாக்கத்திலிருந்து இயங்கும்.

பெங்களூரு, கிழக்கு கடற்கரை சாலைகளுக்கு செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயங்கும். சென்னை மாநகர பேருந்துகள் இன்று (31ம் தேதி) காலையிலிருந்து சென்னையின் எல்லா பகுதிகளுக்கும் கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்படும். கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு கிளாம்பாக்கத்தில் இருந்து 270 நடைகள் இயக்கப்படும். 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையம் செல்லும்.

கிளாம்பாக்கத்திலிருந்து தாம்பரத்திற்கு 2 நிமிடத்திற்கு ஒரு பேருந்தும், கிண்டிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்தும் இயக்கப்படும். ஏற்கனவே இந்த வழித்தடத்தில் 2,386 நடை பேருந்துகள் ஓடுகிறது. இப்பொழுது கூடுதலாக 1,691 நடை பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அல்லாத மற்ற ஆறு போக்குவரத்து கழகங்களின் விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை, திருநெல்வேலி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வந்து அந்தந்த வழித்தடத்தில் இயங்கும். பொங்கல் வரை இந்த நிலை நீடிக்கும். பொங்கலுக்கு பிறகு அந்த பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து தமிழ்நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இயக்கப்படும். 1,140 புறப்பாடுகள் பொங்கல் வரை கோயம்பேட்டிலிருந்து கிளாம்பாக்கம் வழியாக இயக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

Related posts

திருச்சி மாவட்டம் முசிறி அருகே மளிகை கடை முன்பு பெட்ரோல் குண்டு வீச்சு!!

தமிழ்நாடு அரசின் நீட் விலக்கு மசோதாவிற்கு ஆதரவு அளிப்பதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அறிவிப்பு!!

மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 818 கன அடியாக சரிவு..!!