அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்தும் பொள்ளாச்சியில் 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன

*பயணிகள் மகிழ்ச்சி

பொள்ளாச்சி : அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் ஸ்டிரைக் அறிவித்தும், நேற்று பொள்ளாச்சியிலிருந்து வெளியூர்களுக்கு 100 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால், பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர். அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கத்தினர், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவதாக ஏற்கனவே அறிவித்திருந்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக நேற்று முன்தினம், சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் நல ஆணையர் அலுவலகத்தில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, அன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் தொழிற்சங்கத்தினர் ஈடுபட்டனர். இருப்பினும் நேற்று அதிகாலை முதலே பல்வேறு பகுதியிலும் பஸ் போக்குவரத்து அதிகமாகவே இருந்தது.

இதில், பொள்ளாச்சியில் உள்ள அரசு போக்குவரத்து கழகத்திற்குட்பட்ட 3 பணி மனைகளிலிருந்தும் மொத்தமுள்ள 189 பஸ்கள் இயக்கப்பட்டிருந்தது. அதிகாலையிலிருந்து அரசு பஸ்கள் மட்டுமின்றி, தனியார் பஸ்களின் இயக்கம் வழக்கம்போல் இருந்தது. தொழிற்சங்கத்தை சேர்ந்த சிலர் ஸ்டிரைக்கில் ஈடுபட்டிருந்தாலும், போக்குவரத்து தொழிலாளர் முன்னேற்ற சங்கத்தினர் உள்ளிட்ட பலரும், இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்காததால், சுற்றுவட்டார கிராமம் மட்டுமின்றி, வெளியூர்களுக்கும் அடுத்தடுத்து அரசு மற்றும் தனியார் பஸ்கள் தொடர்ந்து இயக்கப்பட்டது.

அரசு ஊழியர்கள் மற்றும் பல்வேறு வேலை நிமிர்த்தமாக செல்லும் தொழிலாளர்கள், கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்கள் அதிகம் சென்று வரும் பழனி, கோவை, திருப்பூர், ஈரோடு வழித்தடங்களில் வழக்கம் போல் பஸ்கள் இயக்கப்பட்டிருந்தன. கேரள மாநில பஸ்களின் இயக்கமும் அடுத்தடுத்து இருந்தது. இதனால், எந்தவித சிரமமின்றி பல்வேறு பணி நிமித்தமாக வெளியூர்களுக்கு சென்ற பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் ஆனைமலை, கோட்டூர், கிணத்துக்கடவு, நெகமம், உடுமலை மற்றும் வால்பாறை மலைப்பகுதி உள்ளிட்ட இடங்களுகளிலும் அரசு, தனியார் பஸ்களின் இயக்கம் தொடர்ந்திருந்தது. பொள்ளாச்சியிலிருந்து அரசு போக்குவரத்துக்கழக பஸ்கள் அனைத்தும், இயங்கப்பட்டதால், பொதுமக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்து மகிழ்ந்தனர்.

ஆர்ப்பாட்டம்

பொள்ளாச்சியில் உள்ள பணிமனைகளிலிருந்து நேற்று தொழிற்சங்கத்தினர் பலர் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருந்தாலும், அரசு மாற்று ஏற்பாடு செய்து அனைத்து பஸ்களையும் இயக்கியது. இந்நிலையில் பணிமனை முன்பு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும். காலிபணியிடத்தை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோஷம் எழுப்பினர்.

Related posts

மீனவர்கள் திடீர் மறியல்: மாமல்லபுரம் அருகே பரபரப்பு

சென்னை மெரினாவில் வான் சாகச நிகழ்ச்சியை காண்பதற்காக புறநகர் ரயில்களில் 3 லட்சம் பேர் பயணம்

பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் கூடிய கலைஞர் நூற்றாண்டு பூங்கா நாளை திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார்கள்!