கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டில் இருந்து 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையிலான மீட்புக் குழு வயநாடு சென்றடைந்தது

வயநாடு: தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர். வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரியுடன் ஆலோசனை நடத்தியுள்ளனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து இன்று முதல் மீட்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.

கேரள மாநிலம் வயநாட்டில் நேற்று அதிகாலையில் திடீரென அடுத்தடுத்து பயங்கர நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இந்த நிலச்சரிவில் சிக்கி 152-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மீட்க்கப்பட்ட பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் 2-வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதற்கிடையில், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு ரூ.5 கோடி நிதியுதவி வழங்கவும், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதில் கேரள அரசுக்குத் துணையாக பணியாற்றிட தமிழ்நாட்டில் இருந்து 2 மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் தலைமையில் மீட்புக் குழுவினரை உடனடியாக அனுப்ப தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். முதல்வர் உத்தரவின் பேரில், தமிழ்நாடு அரசின் பேரிடர் மீட்புப் படை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் குழு மற்றும் மருத்துவக் குழுவினர் இன்று அதிகாலை 4 மணிக்கு வயநாடு சென்றடைந்தனர்.

வயநாடு சென்ற தமிழ்நாடு அரசின் இரண்டு மூத்த ஐஏஎஸ் அதிகாரிகளான டாக்டர் கீ.சு. சமீரன் மற்றும் ஜானி டாம் வர்கீஸ் ஆகியோர் கேரளா மாநில அரசின் மூத்த அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர். கேரளாவுக்கு தேவைப்படும் உதவிகள் குறித்து தமிழக அதிகாரிகள் கேட்டறிந்தனர். இந்த ஆலோசனையைத் தொடர்ந்து வயநாடு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படை, தீயணைப்புத் துறையினர் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Related posts

ஜப்பானில் முதியோர்கள் எண்ணிக்கை புதிய உச்சம்

லெபனானில் பேஜர்களை தொடர்ந்து வாக்கி டாக்கிகள் வெடித்ததில் 20 பேர் உயிரிழப்பு

உத்திரப்பிரதேசத்தில் உயர்அழுத்த மின் கம்பி அறுந்து 20 பேர் காயம்