அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி உயிரிழந்த விவகாரத்தில் சுகாதார நிலையம் முன்பு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கழுக்குன்றம்: செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட பெண் உயிரிழந்ததை கண்டித்து, கூவத்தூர் அரசு மருத்துவமனை முன்பு பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. கல்பாக்கம் அடுத்த கூவத்தூர் அருகே உள்ள நெடுமரம் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை (32). இவரது மனைவி பிரமிளா (29). நிறைமாத கர்ப்பிணியான இவருக்கு கடந்த 3ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. உடனே அவரை உறவினர்கள் கூவத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அழைத்து வந்துள்ளனர். அங்கு சரிவர சிகிச்சையளிக்காமல் அங்கிருந்த செவிலியர்கள் பிரமிளாவை மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இந்நிலையில், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கடந்த 4ம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்தது. அவருக்கு ஆபரேஷன் செய்துள்ளனர். அதனையடுத்து தொடர்ந்து 5 நாட்களுக்கும் மேல் பிரமிளா உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாமல் இருந்துள்ளார். இதனை தொடர்ந்து, கடந்த 10ம் தேதி காலை பிரமிளா உயிரிழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. அப்போதே, உறவினர்கள் இதைக் கண்டித்து செங்கல்பட்டு மருத்துவமனை வளாகத்தில் எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். மேலும், இச்சம்பவத்தை கண்டிக்கின்ற வகையில் நேற்று கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு பிரமிளாவின் உறவினர்களுடன் அனைத்திந்திய மாதர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கம் ஆகிய அமைப்பினர் ஒன்று திரண்டனர்.

பின்னர், பிரமிளா மரணத்திற்கு காரணமான செங்கல்பட்டு அரசு மருத்துவமனையை கண்டித்தும், அங்கு மகப்பேறு பிரிவில் தொடரும் மரணங்களை தடுத்து நிறுத்திட நடவடிக்கை எடுக்கவும், இறந்த பிரமிளாவின் குடும்பத்திற்கு அரசு நஷ்டஈடு வழங்கிடவும், கூவத்தூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு கூடுதலான மருத்துவர்களையும், ஊழியர்களையும் நியமித்து, போதுமான நவீன மருத்துவ உபகரணங்கள் ஏற்படுத்திட நடவடிக்கை எடுத்திட வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Related posts

அண்ணா பல்கலைக்கழகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

தூத்துக்குடியில் 3.5 கிலோ கஞ்சா பறிமுதல்

சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனி திருமஞ்சன திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது