பொதுமக்களை விரைவில் சென்றடையும் வகையில் அரசு வளர்ச்சி திட்ட பணிகள் தரத்துடன் முடிக்க வேண்டும்

*கலெக்டர் அறிவுறுத்தல்

புதுக்கோட்டை : அரசு வளர்ச்சி திட்ட பணிகள் பொதுமக்களை விரைவில் சென்றடையும் வகையில் தரத்துடன் விரைந்து முடிக்க வேண்டும் என கலெக்டர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டம், கீரனூர் தேர்வுநிலை பேரூராட்சியில் சாலை அமைக்கும் பணி மற்றும் குன்றாண்டார்கோவில் ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சித்திட்ட பணிகளை, மாவட்ட கலெக்டர் மெர்சி ரம்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, கலெக்டர் தெரிவித்ததாவது;

தமிழ்நாடு முதலமைச்சர் பேரூராட்சி மற்றும் ஊரகப் பகுதிகளில் வாழும் பொதுமக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றையதினம் குன்றாண்டார்கோவில் ஒன்றியம், குளத்தூர் ஊராட்சி, இளையாவயல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில், மாணவ, மாணவிகளின் கற்றல், கற்பித்தல் திறன்களை பாடப் புத்தகங்களை வாசிக்க வைத்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

மேலும் மாணவ, மாணவிகளின் வசதிக்காக தேவைப்படும் கழிவறை வசதி, இருக்கை வசதி, குடிநீர் வசதி உள்ளிட்டவைகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அவற்றை நிறைவேற்றிடவும், அதனை தொடர்ந்து முதல்வரின் கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் ரூ.1.37 கோடி மதிப்பீட்டில் 4.5 கி.மீட்டர் நீளமுள்ள மேலப்புதுவயல்-துவரவயல் செல்லும் சாலை மேம்பாடு செய்யப்பட்டு வரும் பணிகள் பார்வையிடப்பட்டு சாலை அமைக்கும் பணிகளை விரைந்து முடிக்கவும், சாலையின் அருகே குப்பைகள் கொட்டுவதை தடுப்பதற்கும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. கீரனூர் தேர்வுநிலை பேரூராட்சியின் சார்பில், பேருந்துநிலையத்தில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின்கீழ் ரூ.87 லட்சம் மதிப்பீட்டில் கீரனூர் பேருந்துநிலையத்தில் மேற்கூரை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இப்பணிகள் அனைத்தும் உரிய தரத்துடன் நடைபெற்று வருகிறதா என்பது குறித்தும், பேருந்து வருகைபுரிவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள மாற்று ஏற்பாடுகள் குறித்தும் பார்வையிடப்பட்டு, பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில் பணிகளை விரைந்து முடிக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. மேலும் நபார்டு திட்டத்தின்கீழ் ஈகைநகரில் ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் 1.26 கி.மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுள்ள சாலை பணிகள் குறித்தும், பாரப்பட்டி சாலை முதல் ஈச்சங்காடு காலனி வரை ரூ.1.30 கோடி மதிப்பீட்டில் 1.73 கி.மீட்டர் நீளத்திற்கு அமைக்கப்பட்டுவரும் சாலை பணிகளின் கட்டுமானப் பணிகள் குறித்தும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு பணிகளை விரைந்து முடிக்கவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் சார்பில், கீரனூரில் செயல்பட்டுவரும் மாணவர் விடுதி பார்வையிடப்பட்டு, விடுதியில் தங்கி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை குறித்தும், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவு முறைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.

மேலும் மாணவர் விடுதியில் உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து இருப்பு பதிவேட்டின் மூலம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு விடுதியை சுகாதாரமான முறையில் பராமரிக்கவும், விடுதிக்குத் தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், ஈச்சங்காடு பகுதியில் செயல்பட்டுவரும் அங்கன்வாடி மையம் பார்வையிடப்பட்டு, மாணவர்களின் நலன் கருதி புதிய கட்டடம் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும் தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

பொதுமக்களின் நலன் கருதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களை விரைவில் சென்றடையும் வகையில் வளர்ச்சித் திட்டப் பணிகளை உயர்ந்த தரத்துடன் விரைந்து முடிக்க தொடர்புடைய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வுகளின்போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கவிதப்பிரியா, குன்றாண்டார்கோவில் ஒன்றியக் குழுத் தலைவர் பாண்டிசெல்வி போஸ், மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், கீரனூர் பேரூராட்சித்தலைவர் ஜெயமீரா, பேரூராட்சி செயல்அலுவலர் சண்முகம், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

Related posts

சுபமுகூர்த்த தினமான இன்று முன்பதிவு வில்லைகள் கூடுதலாக ஒதுக்கீடு: பத்திரப்பதிவு துறை தகவல்

திருவான்மியூர் பாம்பன் சுவாமி கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்தும் முடிவில் தலையிட முடியாது: ஐகோர்ட் உத்தரவு

கழுகுகள் இறப்புக்கு காரணமான மருந்துகளை கால்நடைகளுக்கு பயன்படுத்த தடை உள்ளது: உயர் நீதிமன்றத்தில் அரசு தகவல்