தொப்பூர் கணவாயில் மோதுவது போல் சென்றதால் ஆம்னி பஸ் டிரைவரை தாக்கிய அரசு பஸ் டிரைவர், கண்டக்டர்

*சமூக வலைதளங்களில் வீடியோ வைரல்

நல்லம்பள்ளி : தொப்பூர் கணவாயில், அரசு பஸ் மீது மோதுவது போல் முந்தி சென்ற ஆம்னி பஸ் டிரைவரை, அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.தர்மபுரியில் இருந்து பயணிகளை ஏற்றி கொண்டு அரசு பஸ் ஒன்று, பயணிகளுடன் மேட்டூரை நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்த பஸ்சை டிரைவர் வெங்கடாஜலம்(45) என்பவர் ஓட்டி சென்றார்.

தொப்பூர் கணவாய் பகுதியில் வந்த போது, விபத்து பகுதி என்பதால் பஸ்சை மெதுவாக ஓட்டிச் சென்று கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவில் இருந்து எர்ணாகுளத்திற்கு சென்று கொண்டிருந்த ஆம்னி பஸ், வேகமாக முந்திச் சென்று அரசு பஸ் மீது மோதுவது போல் சென்றது. இதனால் ஆத்திரமடைந்த அரசு பஸ் டிரைவர் வெங்கடாஜலம், ஆம்னி பஸ்சை முந்தி சென்று, சாலையில் குறுக்காக பஸ்சை நிறுத்தி, ஆம்னி பஸ் டிரைவர்களான லோகித்(30) மற்றும் ஷேத்தான்(30) ஆகியோரை கீழே இறக்கி, மெதுவாக செல்ல மாட்டாயா? என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், அரசு பஸ் டிரைவர் மற்றும் கண்டக்டர் மாதேஷ்(47) ஆகியோர், ஆம்னி பஸ் டிரைவர்களை சரமாரியாக தாக்கினர். கண்டக்டர் மாதேஷ், கியர் போடும் லிவரால் தாக்கியதில் ஆம்னி பஸ் டிரைவர் லோகித்துக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தொப்பூர் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.

அரசு பஸ்சை தர்மபுரி-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் நிறுத்தி விட்டு, சண்டை போட்டதால் அவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து, இருதரப்பு புகாரின் பேரில், தொப்பூர் போலீசார் அடிதடி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, ஆம்னி பஸ் டிரைவரை தாக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related posts

இஸ்ரேல் – ஹமாஸ் போருக்கு மத்தியில் மோடியை சந்தித்த பாலஸ்தீன அதிபர்: ஐ.நா உறுப்பினராக்க இந்தியா ஆதரவு

ஆரல்வாய்மொழி அருகே ஜேசிபி கவிழ்ந்து விபத்து

திருமண உதவித் திட்டங்களுக்காக தங்கம் கொள்முதல் செய்கிறது தமிழ்நாடு அரசு