தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்: பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பலரை சந்தித்து பேச வாய்ப்பு

மீனம்பாக்கம்: தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை திடீரென புதுடெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு பிரதமர், உள்துறை அமைச்சர் உள்பட பலரை தமிழக ஆளுநர் சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு நிலவியது. சென்னை விமானநிலையத்தின் உள்நாட்டு முனையத்தில் இருந்து இன்று காலை 6.40 மணியளவில் புதுடெல்லி செல்லும் விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் தயார்நிலையில் இருந்தது.

அந்த விமானத்தில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒரு நாள் பயணமாக புதுடெல்லிக்கு புறப்பட்டு சென்றார். அவருடன் தனி செயலாளர், பாதுகாப்பு அதிகாரி மற்றும் உதவியாளர் புறப்பட்டு சென்றனர். பின்னர் இன்றிரவு 8.20 மணியளவில் புதுடெல்லியில் இருந்து விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் மூலம் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி சென்னை திரும்புகிறார். பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பிறகு, முதன்முறையாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி புதுடெல்லி செல்கிறார்.

தமிழக ஆளுநரின் ஒரு நாள் டெல்லி பயணத்தில், அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்பட பலரை சந்தித்து பேச வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. தமிழக ஆளுநர் அவசரமாக இன்று ஒரு நாள் பயணமாக புதுடெல்லி புறப்பட்டு சென்றது குறித்து இதுவரை அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை. இது, அவரது சொந்த பயணம் எனக் கூறப்படுகிறது. இதனால் பல்வேறு யூகங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Related posts

ரூ.2000 நோட்டுகளில், 97.87% நோட்டுகள் வங்கி மூலம் திரும்பப் பெறப்பட்டுள்ளது: இந்திய ரிசர்வ் வங்கி

தமிழ்நாட்டில் அடுத்த 3 நேரத்தில் 9 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

கூடலூர் அருகே மழை வெள்ள நீரில் ஆற்றை கடந்த யானைகள்