பதவிக்காலம் முடிவடைந்த நிலையில் 3வது முறையாக இன்று டெல்லிக்கு புறப்பட்டார் கவர்னர் ஆர்.என்.ரவி


மீனம்பாக்கம்: கவர்னர் ஆர்.என்.ரவி, 3வது முறையாக, இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். கவர்னர் ஆர்.என்.ரவியின் பதவி காலம் கடந்த ஜூலை 31ம் தேதியுடன் நிறைவடைந்தது. அவரது பதவிக்காலம் நீடிக்கப்படவும் இல்லை, புதிய கவர்னர் நியமனம் செய்யப்படவும் இல்லை. அதனால் கவர்னராக ஆர் என் ரவி நீடித்து வருகிறார். இதற்கிடையே பதவி காலம் முடிந்த மறுநாள் (ஆகஸ்ட் 1ம் தேதி) காலை விமானத்தில் டெல்லிக்கு சென்றார். 4 நாட்கள் அங்கு தங்கியிருந்து விட்டு சென்னை திரும்பினார். ஆனாலும் கவர்னரின் பதவி நீடிப்பு குறித்த எந்த உத்தரவும் டெல்லியில் இருந்து வரவில்லை.

அதற்கு பிறகு கடந்த 19ம் தேதி 2வது முறையாக, கவர்னர் டெல்லிக்கு சென்றார். 3 நாட்கள் இருந்து விட்டு சென்னைக்கு திரும்பினார். இந்நிலையில் 3வது முறையாக கவர்னர் ரவி, இன்று காலை 6.40 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் டெல்லிக்கு புறப்பட்டார். இம்முறை 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள கவர்னர், நாளை இரவு 8.20 மணிக்கு, விஸ்தாரா ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், சென்னை திரும்புகிறார். பதவி நீடிப்பு உத்தரவை பெறுவதற்காக, தொடர்ச்சியாக 3 முறை கவர்னர் டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது.

ஆனாலும் பதவி நீடிப்பு குறித்து டெல்லியில் இருந்து இதுவரையில் எந்தவிதமான தகவலும் வரவில்லை. இம்முறை பதவி நீடிப்பு உத்தரவு பெற்று கவர்னர் சென்னை திரும்புவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே மற்றொரு தகவலாக தமிழ்நாட்டிற்கு புதிய கவர்னரை நியமிக்க ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது. எனவே புதிய கவர்னர் நியமிக்கப்படும் வரையில், ஆர்.என்.ரவி பதவியில் இருப்பார் என்று கூறப்படுகிறது.

Related posts

மன்னிப்பு கேட்குமா பாஜக?: விடுதலை ராசேந்திரன் கேள்வி

அனைத்து சாதி அர்ச்சகர்களுக்கு அவமதிப்பு: பாமக நிறுவனர் ராமதாஸ் கண்டனம்

அரசு மேல்நிலை பள்ளிகள் அமைக்காவிட்டால் மருத்துவ இடங்களுக்கான 7.5% உள் ஒதுக்கீட்டை அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் கொடுங்கள்: ஐகோர்ட் கிளை