தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுநர் ரவி கிடப்பில் போட்டது ஏன்? ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

புதுடெல்லி: சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்ட விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், பதிலளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பாஜ ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஒன்றிய அரசு அவர்களுக்கு ஆதரவான ஆளுநர்களை நியமனம் செய்து ஆளும் அரசுக்கு தொடர்ந்து சிக்கல் ஏற்படுத்தி வருகிறது. இது தமிழ்நாடு, கேரளா, புதுவை, தெலுங்கானா, பஞ்சாப் ஆகியவை உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும் பிரச்னையாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழ்நாடு அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் இரண்டு ரிட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அதில்,\\”தமிழ்நாடு சட்டப்பேரவை மற்றும் அரசு அனுப்பிய மசோதாக்களுக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்காமல் பல மாதங்களாக கால தாமதம் செய்து வருகிறார். இதனால் அரசு திட்டங்கள் அனைத்தும் பாதிக்கிறது. அதனால் ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் ஒரு காலக்கெடுவை நிர்ணயம் செய்ய வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு அரசு பிறப்பிக்கும் பல்வேறு உத்தரவுகளை நிறைவேற்றுவதற்கும் அவரது செயல்பாடுகள் தாமதத்தை ஏற்படுத்துகிறது.

தமிழ்நாடு அரசால் ஒரு அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதற்கான ஒப்புதலுக்காக ஆளுநர் மாளிகைக்கு அது அனுப்பி வைக்கும்போது, மசோதாவுக்கு ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்வது போன்று அரசாணைகளையும் கிடப்பில் போடுகிறார். தமிழ்நாடு அரசின் மிகவும் அத்தியாவசியமான விவகாரங்களில் ஆளுநர் முடிவெடுக்காமல் கிடப்பில் போட்டு வைப்பது என்பது அரசியல் சாசனங்களுக்கு எதிரானதாகும். ஆளுநர் என்ற அதிகாரத்தையும், அந்த பொறுப்பையும் ஆர்.என்.ரவி துஷ்பிரயோகம் செய்கிறார். தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை ஆளுநர் என்ற பொறுப்பில் அமர்ந்து கொண்டு ஆர்.என்.ரவி அதனை பறிக்கிறார்.

ஆளுநரின் இந்த செயலற்ற தன்மை மாநிலத்தின் அரசியலமைப்பு தலைவருக்கும், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திற்கும் இடையே ஒரு முட்டுக்கட்டையாக இருக்கிறது. முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் வழக்குகளை அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துச் செல்வதற்கும், சிபிஐ விசாரணை உள்ளிட்டவைக்கும் உத்தரவிட மறுக்கிறார். டி.என்.பி.எஸ்.சி தலைவர் நியமன பரிந்துரையையும் முறையான விளக்கமின்றி நிராகரித்துள்ளார். அதனால் சர்காரியா கமிஷனின் பரிந்துரைகளின் அடிப்படையில் சட்டப்பேரவையால் நிறைவேற்றப்பட்ட மற்றும் அரசியல் அமைப்பின் 200வது பிரிவின் கீழ் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்ட மசோதாக்களை ஆளுநர் பரிசீலிப்பதற்கான காலவரம்பை நிர்ணயிக்கும் வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் உடனடியாக வகுக்க வேண்டும்.

மேலும், தமிழக சட்டப்பேரவை மூலம் அனுப்பப்பட்ட மசோதாக்களுக்கு விரைந்து ஒப்புதல் வழங்க தமிழக ஆளுனர் ஆர்.என்.ரவிக்கு பரிந்துரையுடன் கூடிய ஒரு உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பரிதிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, வில்சன், சபரீஸ் சுப்ரமணியன் ஆகியோர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுடன் கூடிய வாதங்களை முன்வைத்தனர்.

அதில், ‘‘கடந்த 2020ம் ஆண்டு முதல் தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்க மறுத்து வருகிறார். இதில் பல்வேறு அரசாணைகளும் அடங்கும். இதனால் அரசின் செயல்பாடுகள் அனைத்தும் முடங்கி உள்ளது. இதில் அவசரம் , கூடிய விரைவில் என்ற வாக்கியங்களின் அர்த்தங்களை ஆளுநர் ஆர்.என்.ரவி தவறாக புரிந்து கொண்டு செயல்பட்டு வருகிறார். குறிப்பாக 12க்கும் மேலான முக்கிய மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் பல மாதங்களாக நிலுவையில் உள்ளது. அதில் கைதிகளை முன் கூடியே விடுவிப்பது, டி.என்.பி.எஸ்.சி தலைவரை நியமனம் செய்வது ஆகிய அனைத்தும் அடங்கும்.

மேலும் அரசு பணிகளில் 14 முக்கிய பணிகளுக்கான இடங்கள் காலியாக இருந்து வருகிறது. அதில் மிக முக்கியத்துவம் வாய்ந்த 10 பணியிடங்களை கூட ஆளுநர் நிரப்பாமல் கால தாமதம் செய்து வருகிறார் என தெரிவித்தனர். இதையடுத்து உத்தரவிட்ட தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்,‘‘தமிழ்நாட்டின் இந்த பிரச்னை என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. அதனால் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசின் வாதங்களை நீதிமன்றம் ஏற்கிறது. இதுகுறித்து பதிலளிக்க இரண்டாவது எதிர்மனுதாரரான ஒன்றிய அரசின் உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்படுகிறது.

மேலும் தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பப்பட்ட மசோதாக்கள் எதனால் கிடப்பில் உள்ளது. அதற்கான காரணங்கள் என்ன என்ற அனைத்து விவரங்களையும் ஆளுநரிடம் ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் விரிவாக கேட்டு உச்ச நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வரும் 20ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

* காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை இதே நிலை தான்…
நேற்று நடந்த விசாரணையில்,‘‘ஒன்றிய அரசுடன் இணக்கமாக இல்லாத மாநிலங்களில் இதுபோன்று ஆளுநர்களை நியமனம் செய்து மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு குடைச்சல் கொடுப்பதை ஒன்றிய அரசு வாடிக்கையாக வைத்துள்ளது. இது தமிழ்நாட்டில் மட்டுமில்லை, நாடு முழுவதும் அதாவது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரையில் இதே அவல நிலை தான் இருந்து வருகிறது என நீதிபதிகளின் முன்னிலையில் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

Related posts

சென்னை அடுத்த ஆவடி, திருநின்றவூர், பட்டாபிராம் உள்ளிட்ட இடங்களில் கனமழை!

ஜனநாயகத்தில் வெற்றி, தோல்வி சகஜம்: இங்கிலாந்து இந்நாள், முன்னாள் பிரதமர்களுக்கு ராகுல் கடிதம்

அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தொடர்புடைய 12 இடங்களில் நடந்த சிபிசிஐடி சோதனை நிறைவு