ஆளுநருக்கு எதிராக தீர்மானம் நிறைவேறிய சில மணி நேரங்களில் ஆன்லைன் சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆர்.என்.ரவி ஒப்புதல்: 3 மாதம் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும்

சென்னை: ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவுக்கு அனுமதி கொடுக்காமல் பல மாதங்களாக வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிரான தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேற்றியவுடன், சில மணி நேரங்களிலேயே அந்த மசோதாவுக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார். இந்த மசோதா உடனடியாக அரசிதழில் வெளியிடப்படும் என்றும், உடனடியாக அமலுக்கு வந்தது என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன் மூலம் சூதாட்டம் நடத்தினால் 3 மாதம் சிறை, ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக ஆன்லைன் சூதாட்டத்தில் இளைஞர்கள், தொழில் அதிபர்கள், இன்ஜினியர்கள், பெண்கள் என்று பல தரப்பட்ட மக்களும் ஈடுபட்டு பல லட்சம் ரூபாய் மற்றும் சொத்துக்களை இழந்தனர். இதனால் இதுவரை 46க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர். இந்த எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்தது. இதனால் கடந்த அதிமுக ஆட்சியின்போதும் தற்கொலைகள் அதிகரித்து வந்ததால், ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்டம் கொண்டு வரவேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தின. இதனால் 2020 நவம்பர் மாதம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்வதற்கான அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டது. பின்னர் 2021 பிப்ரவரி மாதம் சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த சட்டத்தை எதிர்த்து ஆன்லைன் சூதாட்ட நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும், முறையான விதிமுறைகளைப் பின்பற்றி புதிய சட்டம் இயற்றலாம் என்றும் நீதிமன்றம் கூறியிருந்தது. அதைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு பல்வேறு தரப்பு மக்களையும் மாநிலம் முழுவதும் சென்று சந்தித்து அரசுக்கு அறிக்கை அளித்தது.

அதைத் தொடர்ந்து, தமிழக அரசு 2022 செப்டம்பர் 26ம் தேதி அவசர சட்டம் பிறப்பித்தது. இந்த அவசர சட்டத்துக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் பிறப்பித்தார். பின்னர் அக்டோபர் 19ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் ஆளுநர் அந்த மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் இருந்தார். இதேபோல 18க்கும் மேற்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஓப்புதல் தராமல் இருந்தார். இதற்கு கடுமையான கண்டனங்களை அரசியல் கட்சிகள் தெரிவித்தன. ஆளுநருக்கு எதிராக போராட்டங்களும் நடந்தன.

இதனால், 130 நாட்களுக்கு பிறகு அந்த மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார். அப்போது, இந்த மசோதாவை நிறைவேற்ற சட்டப்பேரவைக்கு அதிகாரம் இல்லை என்று ஆளுநர் ஆர்.என்.ரவி கூறியிருந்தார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகளும் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தன. அதைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 23ம் தேதி தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழக அரசு ஏற்கனவே அனுப்பிய மசோதாவில் எந்த மாற்றமும் செய்யாமல் அப்படியே தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.

ஆனாலும், ஆளுநர் ஒப்புதல் தராமல் இருந்தார். ஆளுநர் ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி, தமிழக சட்ட அமைச்சர் ரகுபதி, ஆளுநர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்தும் வலியுறுத்தினார். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது என்பதையும் கவர்னரிடம் தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில் ஆளுநரை ஆன்லைன் ரம்மி நடத்தும் நிறுவனங்களின் உரிமையாளர்கள் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் வெளியானது.

இதனால்தான் அவர் தமிழக அரசின் சட்டத்துக்கு அனுமதி அளிக்காமல் உள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். இந்தநிலையில் இரு நாட்களுக்கு முன்னர் ஆளுநர் மாளிகையில் யுபிஎஸ்சி தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியை ஆர்.என்.ரவி நடத்தினார். அப்போது அவர் பேசும்போது, ஆளுநர் சில மசோதாக்களை நிறுத்தி வைத்தால், அவை காலாவதியாகிவிட்டது என்றுதான் பொருள் என்று கூறியிருந்தார். இதனால் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாவைத்தான் அவர் மறைமுகமாக குறிப்பிட்டதாக கூறப்பட்டது. இதனால் அவரது பேச்சுக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கண்டனம் தெரிவித்திரு்நதனர்.

இந்தநிலையில் தமிழக சட்டப்பேரவையில் ஆளுநர் ஆர்.என்.ரவியின் நடவடிக்கைக்கு எதிராக தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. மேலும், அந்த தீர்மானத்தில் ஒன்றிய அரசு மற்றும் குடியரசு தலைவர் தலையிட்டு மசோதாக்களை நிறைவேற்ற கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டிருந்தது. இந்த தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறிய சில மணி நேரங்களிலேயே, ஆன்லைன் ரம்மி தடைச் சட்ட மசோதாவுக்கு ஒப்புதல் அளித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கையெழுத்திட்டார். அதைத் தொடர்ந்து, இந்த சட்டம் உடனடியாக அமலுக்கு வருவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால், ஆன்லைன் ரம்மி விளையாட்டை நடத்தினால், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும், 3 மாதம் சிறை தண்டனையும் விதிக்க சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

  • உடனடியாக அரசிதழில் வெளியீடு: முதல்வர் தகவல்
    ஆன்லைன் சூதாட்ட தடைச் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது: இன்று காலை நாம் நிறைவேற்றி அனுப்பிய அரசினர் தனித் தீர்மானத்தில், ஆன்லைன் ரம்மி விளையாட்டு தடைச் சட்டம் குறித்த மசோதா உள்ளிட்ட பல்வேறு மசோதாக்கள் ஆளுநரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டு, நிலுவையில் உள்ளதைச் சுட்டிக்காட்டி, இதனால் தமிழ்நாட்டின் நிர்வாக நலனும், இளைஞர்களின் எதிர்காலமும் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் எடுத்துக்காட்டியிருந்தோம்.

மேலும், பொது வெளியில் ஆளுநர் தெரிவித்து வரும் சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்தும் நாம் இங்கு குறிப்பிட்டிருந்தோம். இந்தச் சூழ்நிலையில், இந்த மாமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பிய தீர்மானத்தின் ஒரு நல்விளைவாக, இன்று(நேற்று) மாலை ஆளுநர் ஆன்லைன் ரம்மி விளையாட்டு தொடர்பான மசோதாவிற்கு ஒப்புதல் அளித்துள்ளார். இந்தச் சட்டமானது இன்றே(நேற்றே) தமிழ்நாடு அரசிதழில் வெளியிடப்படும் என்ற மகிழ்ச்சியான செய்தியையும் தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

Related posts

போலி இ-மெயில் அனுப்பி பணம் பறிக்கும் மோசடி கும்பல்; எச்சரிக்கையாக இருக்க சைபர் போலீஸ் அறிவுறுத்தல்

அரசு உதவிபெறும் பள்ளி இசை ஆசிரியர் பெற்ற கூடுதல் ஊதியத்தை திரும்ப வசூலிக்கும் உத்தரவு செல்லும்: சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

பரந்தாமன் எம்எல்ஏ உருவாக்கியுள்ள “நம்ம எக்மோர்” செயலி: துணை முதல்வர் தொடங்கி வைத்தார்