ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் நிறைவேறியது : பல்வேறு கட்சி சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியது என்ன?

சென்னை : தமிழ்நாடு ஆளுநருக்கு உரிய அறிவுரைகளை ஒன்றிய அரசும், குடியரசுத் தலைவரும் உடனடியாக வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதனைத் தொடர்ந்து ஆளுநருக்கு எதிரான தனித் தீர்மானத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்தார். முதல்வர் கொண்டு வந்த தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சியினர் தங்களது கருத்துக்களை பதிவு செய்தனர்.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி எம்.எல்.ஏ. : இந்தியாவிலேயே ஜனநாயகத்தை காக்கும் அரசாக தமிழக அரசு உள்ளது.பேரவையில் நிறைவேற்றும் மசோதாக்களுக்கு மதிப்பளித்து ஒப்புதல் அளிக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் ஆளுநருக்கு உள்ளது.ஆளுனரை திரும்பப் பெற வேண்டும்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் : யாரோ சொல்வதை ஆளுநர் செய்கிறார் என்று தான் எடுத்துக் கொள்ள வேண்டும்.ஆளுநர் விவகாரத்தில் முதலமைச்சர் இவ்வளவு பொறுமையாக தீர்மானம் கொண்டு வந்துள்ளார்.நாடு முழுவதும் ஆளுநரால் பாதிக்கப்பட்ட மாநிலங்களின் சங்கத்தைத் தான் ஆரம்பிக்க வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சி எம்எல்ஏ ஜவாஹிருல்லா :தமிழ்நாடு மக்களால் விரும்பத்தகாத ஒருவர் ஆளுநராக இருக்கிறார்.தமிழ்நாடு அரசுக்கு நண்பராக இல்லாத ஒருவர் ஒரு நிமிடம் கூட ஆளுநர் பதவியில் நீடிக்கக் கூடாது.அரசியல் அமைப்பு சட்டப்படி ஆளுநர் தானாக செயல்படுத்தக்கூடிய எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை.அரசியல் சட்ட மாண்புகளை மிக மோசமாக சிதைத்து வருகிறார் ஆளுநர். ஆளுநரை நீக்கும் வரை தொடர்ந்து போராடுவோம் என உறுதியேற்போம்.

பாமக சட்டப்பேரவை தலைவர் ஜி.கே.மணி : ஆளுநர் என்பவர் அதிகாரம் படைத்தவர் அல்ல, அதே நேரத்தில் இது அலங்காரப் பதவியாக இருப்பது மட்டுமே’ என அம்பேத்கரே குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டுக்கு எதிராக செயல்படுவது மட்டுமல்லாமல், கூடங்குளம், அணு உலை, ஸ்டெர்லைட் பிரச்சனை என்று தேவையற்ற பிரச்னைகளை பற்றி பேசி தமிழ்நாடு மக்களின் நலனுக்கு எதிராக ஆளுநரின் செயல்பாடு இருக்கிறது.

வி.சி.க எம்.எல்.ஏ. சிந்தனைச்செல்வன் : பிரிட்டிஷ் ஏகாதியபத்தியத்தின் தூண்டுதலுக்கு அம்பேத்கர் இரையானார் என்று ஆளுநர் மாளிகையிலேயே ஆளுநர் பதிவு செய்து, அம்பேத்கரை இழிவு படுத்துகிறார். இந்த அவையின் இறையாண்மையை மறுப்பது என்பது ஜனநாயகத்தை மறுப்பதாகும். மதச்சார்பின்மை, சமூக நீதி என்ற கோட்பாட்டுக்கு எதிராகவும் வெளிப்படையாக ஆளுநர் பேசி வருவது வேதனைக்குரியது கண்டனத்திற்குரியது.

இதனைத் தொடர்ந்து, அரசின் தனித் தீர்மானம் சட்டப்பேரவையில் நிறைவேறியது.

Related posts

நொய்டாவில் வணிக வளாகத்தில் பயங்கர தீ விபத்து!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் : ஜூலை 8-ம் தேதி மாலை 6 மணியில் இருந்து வாக்குப்பதிவு முடியும் வரை மேற்கொள்ள வேண்டிய விதிமுறைகள் வெளியீடு!!

மணப்பாறை அருகே காட்டெருமை முட்டி முதியவர் உயிரிழப்பு..!!