அரசு ஊழியர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவை ஜிஎஸ்டி வசூல் மூலம் கிடைக்கும் பணம் எங்கே போகிறது? அகிலேஷ் யாதவ் காட்டமான கேள்வி

லக்னோ: கொரோனா தொற்று காலத்தில் ஒன்றிய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 18 மாத அகவிலைப்படி நிலுவைத் தொகையை ஒன்றிய அரசு நிறுத்தி வைத்துள்ளது. இந்த நிலுவைத்தொகையை தற்போது வழங்க முடியாது என ஒன்றிய அரசு மறைமுகமாக தெரிவித்துள்ளது. இதுகுறித்து சமாஜ்வாடி கட்சி தலைவரும், உத்தரபிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் தன் எக்ஸ் தளபதிவில் ஒன்றிய அரசுக்கு காட்டமாக கேள்விகளை எழுப்பி உள்ளார். அகிலேஷ் யாதவ் தனது எக்ஸ் தள பதிவில், “உலகளாவிய பொருளாதார வல்லரசு என்று அரசு கூறுவதால், ஊழியர்களுக்கு டிஏ நிலுவைத்தொகை கிடைக்கவில்லை என்று அர்த்தமா? டிரில்லியன் டாலர் பொருளாதாரம், ஜிஎஸ்டி வரி வசூல்களில் கிடைக்கும் பணம் எங்கே போகிறது? என்பதை அரசாங்கம்சொல்ல வேண்டும்.

பல பில்லியன் கப்பல்கள் வாங்கவும், கசியும் கட்டிடங்கள் கட்டவும் பணம் இருக்கிறது. ஆனால் உண்மையில் அரசாங்கத்தை நடத்தும் ஊழியர்களுக்கு தர பணம் இல்லை. ஒருபுறம் அதிகரித்து வரும் பணவீக்கம், மறுபுறம் அகவிலைப்படி கிடைக்காதது என்பது குறைந்த வருமானம் உள்ள ஊழியர்களுக்கு இரட்டை அடி. முதியவர்களின் மருத்துவ செலவுகள் அதிகரித்துள்ளது. ஆனால் அவர்களுக்கு ஓய்வூதியம் இல்லை. பாஜ அரசு மூத்த குடிமக்களுக்கான ரயில்வே சலுகைகளை நிறுத்தி அவர்களை அவமதித்துள்ளது. இப்போது மூத்த குடிமக்கள் ஓய்வூதியத்துக்காக உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என ஒன்றிய அரசு விரும்புகிறதா?” என அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் கேள்வி எழுப்பி உள்ளார்.

Related posts

மு.பரூர் வரதராஜபெருமாள் கோயிலில் மாடுகள் கட்டுவதால் சுகாதார சீர்கேடு

மானாமதுரை ரயில்நிலையத்தில் 2 ஆண்டுகளாக செயல்படாத ‘ஒரு நிலையம் ஒரு தயாரிப்பு’ ஸ்டால்

வெளிநாடுகளில் தமிழாசிரியராக பணியாற்ற இந்தியும், சமஸ்கிருதமும் தெரிந்திருக்க வேண்டுமா? : ராமதாஸ் கண்டனம்!